FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிட்டங்கொற்றனும் பின்னையின் நாயகனும்...

தமிழரின் வரலாற்றுக் கருவூலமான புறநானூறு எண்ணற்ற புதுச்செய்திகள் நிறைந்த மறநூல்.

23 ஆகஸ்ட் 2026, 9:47 pm IST
பகிர்:

தமிழரின் வரலாற்றுக் கருவூலமான புறநானூறு எண்ணற்ற புதுச்செய்திகள் நிறைந்த மறநூல். மறநூலே ஆயினும் அறநூலாகவும் இலங்குவது. படி(உலகில்)மிசை புகழ்நிறீஇய பண்பாளர்தம் புகலிடம். அப்பெருநூலில் பிட்டங்கொற்றன் (புறம்171, 172) என்ற பெருவீரனுக்கும் இடமுண்டு.

வன்புல நாட்டையும் வயமானையும் (குதிரை) கொண்டிருப்பவனுமான பிட்டனையும் ஆரமர் (அரிதான போர்க்களத்தில்) கடக்கும் (வாகைசூடும்) அவனது வெற்றி வேலினது அருமையையும் இன்னபிறவற்றையும் வடம வண்ணக்கன் தாமோதரனார் என்ற புலவர் பெருமகன் சொற்சிலையாக வடித்துத் தந்துள்ளார்.

இச்சிற்றரசன் குதிரை மலைக்கு (புறம்.168) கிழவனாகவும் சேரர்களின் படைத் தலைவனாகவுமிருந்த பிட்டன் (அகம்.77, 143) என்பானின் மகனாக இருக்கலாம். பிட்டனும் மிகப் பெரிய வேல்வீரன் (புறம்.170). அவனுடைய மகனாகிய கொற்றனும் பெரிய வேல்வீரனாகக் குறிப்பிடப்பட்டுள்ளான்.

Advertisement

Advertisement

குதிரைபோல் வடிவுடைய மலை குதிரைமலை எனப்பட்டது. இப்போது, "கேரள மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏழங்குளம் பஞ்சாயத்தில் குதிரைமுகம் என்ற பெயரில் சுட்டப்படும் பகுதியாகும்' என்கிறார் ஆய்வாளர் மா.நாகலட்சுமி (தினமணி}தமிழ்மணி, 06.01.2019).

ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;

கள்ளும் குறைபடல் ஓம்புமின்; ஒள்இழைப்

பாடுவல் விறலியர் கோதையும் புனைக;

அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம்

பரியல் வேண்டா; வருபதம் நாடி,

ஐவனம் காவலர் பெய்தீ நந்தின்

ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்

வன்புல நாடன், வயமான் பிட்டன்;

ஆரமர் கடக்கும் வேலும், அவன்இறை

மாவள் ஈகைக் கோதையும்

மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!

(புறம். 172)

என்ற இப்பாடல் பாடாண் திணையில் இயன்மொழி வாழ்த்து என்னும் துறையில் அமைந்துள்ளது. இது பரிசில்பெற்ற பாணரொருவர் மற்றொரு பாணரை விளித்துப் பாடுவதாக அமைந்துள்ளது என்று உரைவேந்தர் ஒüவை.துரைசாமிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

உலையை ஏற்றுங்கள்; சோற்றை ஆக்குங்கள்; கள்ளைக் குறைவுபடாமல் வடியுங்கள்; ஒளிவீசக்கூடிய அணிகலன்களை அணிந்திருக்கும் பாடுவதில் திறமைபெற்ற விறலியர்களே! மாலைகளைச் சூடுங்கள்; இவற்றோடு தேவையான பிறவற்றையும் செய்யுங்கள்; பிட்டனின் வெற்றி வேலையும் அவனுடைய தலைவன் சேரநன்னாட்டுப் பெருவேந்தனாகிய கோதையையும் அவ்விருவர்க்கும் பகையாகியவர்களையும் வாழ்த்துங்கள் என்று செய்யவேண்டிய செயல்கள் குறித்து ஆறு கட்டளைகளை விறலி குறிப்பிட்டுள்ளார். எதற்காகவும் வருந்தாதீர் (பரியல்) என்று செய்யக்கூடாத செயல் ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிட்டங்கொற்றனின் நாடு வன்புலத்தை (முல்லைத் திணை) உடையதுதான். ஆயினும், அதில் மலைநெல் (ஐவனம்) மிகுதியாக விளையும். ஆகவே, உணவை விரும்பி மலைநெல் புனத்தைக் காவல் காப்பவர்கள், காட்டு விலங்குகள் சிலவற்றிடமிருந்து அதைக் காக்க இரவில் தீ மூட்டுவர். ஒருவேளை அந்தத் தீ போதுமானதாக இல்லையென்றால் மலைநெல் மணிகளிலிருந்து புறப்பட்ட ஒளியானது செறிந்த இருளையும் விரட்டிவிடும்.

அத்தகைய நாட்டிற்குரிய பிட்டனின் வென்றிவேலும் அவனுக்குத் தலைமை வகிக்கின்ற பெருவள்ளலாகிய சேரமான் கோதையும் அவனுக்குப் பகைவர்களாகிய மன்னர்களும் நெடிது வாழ்வாராக! என வேண்டுங்கள் என்று புலவர் பாடியுள்ளார்.

நப்பின்னையின் நாயகனாம் கண்ணனைக் கோதை கொண்டாடிப் பாடிய ஒப்பிலாத் திருப்பாவையில் இடம்பெற்றுள்ள

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்

பையத் துயின்ற பரமன் அடிபாடி,

நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி

மையிட்டு எழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;

செய்யாதன செய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய் (2)

என்ற பாடல் யாவரும் அறிந்ததே. வடம வண்ணக்கன் தாமோதரனார் பிட்டங்கொற்றன் பெருமையை விளக்க, விறலியர்களை அழைத்துச் செய்ய வேண்டிய செயல்கள் ஆறினையும் செய்யக்கூடாத ஒரு செயலையும் கூறி அவற்றின்படி நடக்கச்சொல்லியுள்ளார்.

கோதையோ இப்பாடலில், வையத்து வாழும் பெண்களை அழைத்துப் பாற்கடலில் துயிலும் பரமனின் பெருமையை விளக்கிப்பாடி நெய்யுண்ணாதீர்கள்; பாலுண்ணாதீர்கள்; நாட்காலை நீராடுங்கள்; கண்களிலே மையிட்டு எழுதோம்; மலரிட்டு முடியோம்; செய்யாதன செய்யோம்; தீக்குறளை சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் இயன்றளவு வழங்குவோம் என ஏழு செய்யவேண்டிய செயல்களையும் செய்யக் கூடாதன சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

'அன்னவை பிறவும் செய்க' என்ற தொடரில் தாமோதரனார் எவற்றைச் செய்ய வேண்டும் என்று விறலியர்க்குத் தெளிவுபடுத்தவில்லை. அவ்வாறே கோதையும் "செய்யாதன செய்யோம்' என்ற தொடரில் நோன்பு நோற்கும் பெண்கள் மேலும் எவ்வெவற்றைச் செய்யக்கூடாதெனத் தெளிவுபடுத்தவில்லை.

தாமோதரனாரின் நோக்கம் பிட்டங்கொற்றனின் மலைவளம், போராற்றல், கொடைமாட்சி நிரம்பிய சேரமன்னனின் புகழுடன் இவ்விருவரிடமும் தோற்றோடிப் பல்வளத்தைக் கொடாமற்கொடுத்த பகைவர்களையும் வாழ்த்துவதாக உள்ளது. ஆண்டாளின் நோக்கமோ பரமனின் புகழை நாட்டுவதாகவும் நோன்பு நோற்கும் பெண்டிர்க்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது.

தாமோதரனாரின் பெயரிலுள்ள வடம என்னும் பெயரடை அவர் வடநாட்டவர் என்பதைக் குறித்து நிற்கிறது. வடஇந்தியரும் தமிழ் வல்லாராய் இருந்ததை இப்பாடல்வழி அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments