FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

இராகவன் புகழைத் திருத்தும் பெருமிதக் கவி!

இராமவதாரக் காப்பியத்தில் எல்லாப் பாத்திரங்களின் படைப்புகளுள்ளும் தம்மைக் கரைத்துக் கொண்டவர் கம்பர்.

Updated On : 21 ஜூன் 2026, 4:56 pm IST
பகிர்:

இராமவதாரக் காப்பியத்தில் எல்லாப் பாத்திரங்களின் படைப்புகளுள்ளும் தம்மைக் கரைத்துக் கொண்டவர் கம்பர். எனினும், சில பாத்திரங்களில் அவர் தாமேயாகி நிற்பதுண்டு. நடையில் நின்றுயர் நாயகன் இராமன், கற்பின் கனலி சீதை, மலைக்குல மயில் தாரை, மரணம் எனக்குப் புகழ் என்றுரைத்த கும்பகர்ணன், எழுதல் ஆகலாச்

சுந்தரன் இராவணன், அஞ்சனை வயிற்றில் வந்த அனுமன் ஆகிய பாத்திரங்களைக் குறிப்பிடலாம்.

கல்வி, தறுகண், இசைமை, கொடை எனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே என்று பெருமிதச் சுவை குறித்து தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் நூற்பா - 9 பேசுகிறது.

Advertisement

Advertisement

அறஞ்சார்ந்து சான்றோரால் புகழப்பெற்ற பெருமிதமென்னும் மெய்ப்பாட்டுக்குக் காரணமாகிய பொருள் - கல்வி, தறுகண், இசைமை, கொடை என்னும் நான்குமாம். இந்த நான்கையும் அனுமன் என்னும் பாத்திரத்துள் நிறைத்து அவனைப் பெருமிதக் கவியாக கம்பர் காட்டுகிறார்.

கல்வியாவது அறம், பொருள், இன்பம் ஆகிய மும்முதற்பொருள் குறித்த நூலறிவும், இசை, நாடகம், சிற்பம் முதலிய கலையறிவும், படைக் கல்வியும் பிறவுமாம். பிரம்மச்சாரி வடிவத்தில் தன்

முன்னின்று பேசும் அனுமனின் சொல்கேட்டு வியந்த இராமன்

ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும்,

அறிவும், என்னும்

வேற்றுமை இவனோடு இல்லையாம்

என்றும்,

கல்லாத கலையும், வேதக் கடலுமே

என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே?

என்றும்

தாள் படாக் கமலம் அன்ன தடங் கணான்,

தம்பிக்கு, 'அம்மா!

கீழ்ப் படா நின்ற நீக்கி, கிளர் படாது ஆகி,

என்றும்

நாட் படா மறைகளாலும், நவை படா

ஞானத்தாலும்,

கோட்படாப் பதமே, ஐய! குரக்கு

உருக்கொண்டது' என்றான்.

என்று உள்ளத்துத் தோன்றிய உவகையால் பேசுகிறான்.

கல்வியின் பயனாகிய இறைவனைத் தொழுதலும், ஆன்று அவிந்து அடங்கியிருத்தலும், கற்றபடி நிற்றலும், நவவியாகரண பண்டிதனாகவும்

கல்வியிலோங்கி நிற்றலும் கவியுருவில் காட்சி தரும் அனுமனுக்குரியதாம்.

பகைக்கும், பகைசெய்யும் பொருட்கும் அஞ்சாத மனத்திண்மையாகிய வீறு தறுகண்ணாகும். சீதையைக் காண வந்த அனுமன் இராவணனைச் சந்திக்கும் ஆசை கொண்டு அசோக வனத்தை

யழிக்கத் தொடங்கினான். காவலர் இராவணனிடம் செய்தியைத் தெரிவித்தனர். அனுமனைப் பிடித்துவர அரக்கர் வந்தனர். போர் மூண்டது. அரக்கர்கள், சம்புமாலி, பஞ்ச சேனாபதிகள் ஆகிய அனைவரும் போர் செய்து அழிந்ததைக் கேள்வியுற்ற இராவணின் மைந்தன் அக்ககுமாரன் தன்னைப் போருக்கு அனுப்புமாறு வேண்டினான். அவனையும் அனுமன்அழித்தான். செய்தியறிந்து போர்க் களத்தை நோக்கிய இந்திரசித்தின் மனநிலையை அனுமனின் வீரம் முழுதுமாக ஆட்கொண்டது.

வெப்பு அடைகில்லா நெஞ்சில், சிறியது

ஓர் விம்மல் கொண்டான்,

அப்பு அடை வேலை அன்ன பெருமையார்,

ஆற்றலோடும்

ஒப்பு அடைகில்லார், எல்லாம் உலந்தனர்,

குரங்கும் ஒன்றே!

எப் படை கொண்டு வெல்வது, இராமன் வந்து எதிர்க்கின்? என்றான்

என்று வியந்து புகழ்கின்றான் உலகெலாம் கலக்கி வென்ற வீரனான இந்திரசித்தன்.

இராவணன் அனுமனை நோக்கி, 'என்னை ஒரு குத்து விடு! நான் சலித்தேன் என்றால், உன்னோடு இப் போர்க்களத்தில் இனி நான் போர் செய்ய மாட்டேன்' என்று வஞ்சினம் உரைத்தான்.

அனுமன் குத்தில் இராவணன் சலித்தான். அந்த வீரத்தில் தன்னை மறந்தான் இராவணன்.

அங்கதன் மற்றும் பிறரிடத்தில் நீண்ட வாள் அரக்கரோடு போரிட்டு வென்றதும், நெருப்பிலிருந்து மீண்டதுமான தன்னுடைய வெற்றியை எப்படித் தானே உரைப்பது என்று நாணம் கொண்டு, சீதையைக் கண்டு மீண்டதை மட்டும் உரைத்தான். ஆனால், அனுமனைக் கண்ட வானர வீரர்அனுமன் உடலில் காணப்பட்ட புண் அவன் போரிட்டதைக் காட்ட, மீண்டு இங்கு வந்ததை அவன் பெற்ற வெற்றியையுணர்த்த, கடலைத் தாண்டி ஏற்பட்ட பெரும்புகை இலங்கையில் அவன் இட்ட தீயினால் என்பதையுணர்ந்து அவன் வீரத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

அறத்தாறொழுகும் நன்னடையானும் அருள் முதலாய உயர் பண்பானும் உலகுடன் பெறினும் பழியொடு வருவன புரியா நெறியானும் ஊராண்மை முதலிய ஒப்புரவானும் கைம்மாறு கருதாத ஈகையானும் வரும் ஒளி இசைமையாம்.

இவ்வுயரிய பண்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றுத் திகழும் அனுமன் சுக்ரீவன் ஏவ, இராமனைக் கண்டான். அவனை, 'எம் மலைக் குலமும் தாழ, இசை சுமந்து எழுந்த தோளான்' என்று கம்பர் உரைக்கிறார்.

இராமனோ! இல்லாத உலகத்து எங்கும், இங்கு இவன் இசைகள் கூர, என்றும், யார்கொல் இச் சொல்லின் செல்வன் என்றும், பிரம்மாவா? சிவனா?

என்றும் தன் தம்பி இலக்குவனிடம் பேசுகிறான்.

கொடையாவது வரையாது வழங்கும் வள்ளல் தன்மை. அஃது ஈகைபோலாது செல்வமேயன்றி உயிரும் உடம்புமாகிய பொருள் யாவற்றையும் வழங்குதலாம். அறத்தை நிலை நிறுத்த உடல், பொருள், ஆவி அனைத்தையும் தரச் சித்தமாக

யிருந்தவன் அனுமன். அன்றும், இன்றும், என்றும் இந்த உலகம் இராம நாமத்தின் பெருமையை

உணரக் காரணம் அனுமனே!

இராவணன் அவையில், 'இராமன் ஆதிநடு

அந்தமில்லாத பரம்பொருள் என்றும், அறத்தினை நிலை நிறுத்துவதற்காகவும், தீயோரை அழித்து நல்லோரைக் காப்பதற்காகவும், அவனைச் சரணடைந்தவர் பிறப்பின்றித் துலங்குவர் என்பதைக் காட்டவும் கையில் வில் ஏந்தி அயோத்தியில் அவதரித்துள்ளான்' என்று இராமன் பெருமையைக் கூறினான் அனுமன்.

அனுமனைக் கடலைத் தாண்டச் செய்ததும், தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்த சீதைக்கு உயிரை மீட்டுத் தந்ததும், பரதனைத் தீயில்

விழாமல் காத்ததும், வாலிக்குச் சாவா வாழ்வு தந்து உயர்த்தியதும் செம்மைசேர் நாமமாகிய இராம நாமமே. அந்த நாமத்தின் பெருமையை இவ்வுலகுக்குக் கொடையாகத் தந்தவன் அனுமன்.

செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் பெருமிதக் கவி அனுமனே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments