FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாரதி கொண்டாடிய தீபாவளி

நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டு, தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொண்டதைப்போல், பாரதியார் புதுவையில் குடியேறி வாழ்ந்த காலம்.

8 நவம்பர் 2026, 1:05 pm
மகாகவி பாரதியார்
பகிர்:

நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டு, தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொண்டதைப்போல், பாரதியார் புதுவையில் குடியேறி வாழ்ந்த காலம். ஆங்கில அரசின் நெருக்கடிகளால் அவரது வருமானம் முற்றிலும் தடைப்பட்டிருந்த நேரம். வறுமையின் கொடுமை அறியாமல், அவரைக் கவிதையாம் மனைத் தலைவி காத்துக் கொண்டிருந்தாள் என்பது அதிசயம். தேசபக்தியும் தெய்வ பக்தியும் ஒன்று என்று நிறுவிக் காட்டிய மகாகவி அவர்.

'நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராது இருத்தல்' என்கிற உறுதிப்பாட்டைத் தன் சிந்தைக்குச் சொல்லிய பாரதியாருக்குள் எழுந்த வினாக்கள். 'வீட்டுக்கு யார் உழைப்பது? அதனைத் துயர் இன்றி யார் காப்பது?'அவரே பதிலும் காண்கிறார்.

'உமைக்கு இனிய மைந்தன் கணநாதன் நம்

Advertisement

Advertisement

குடியை வாழ்விப்பான். சிந்தையே இம்மூன்றும் செய்' எனக் கவி ஆவேசத்தில் கட்டளை இடுகிறார்; காரியத்திலும் இறங்குகிறார்.

அவருக்குக் கணநாதனும் ஒன்றுதான்; காளியும் ஒன்றுதான். 'ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள், உலகு இன்பக் கேணி' என்பது அவர்தம் தெளிவு.

ஈசருடன் பேசுகிற ஞானமொழி, கவிதை. அதனை ஈசுவரியிடமும் பேசும் மொழியாகக் கொண்டவர் அவர். பராசக்தி மேல் அவர் கொண்டிருந்த அதீத பக்தி, துயரத்தின் உச்சத்தில், 'இப்படியே போனால், நான் நாத்திகனாகிவிடுவேன்' என்று எச்சரிக்கும் அளவிற்கு உரிமை பூண்டிருந்தது. அவரது பக்தி, பாசாங்கானது இல்லை; வைராக்கியம் கொண்ட பரிபூரண ஒழுக்கம். தெய்வங்களுடன் பேசியவர் அவர். இல்லையில்லை, தெய்வங்களே வந்து அவரிடம் கவிதையை வேண்டின என்பதற்குச் சான்று, அவர்தம் 'பராசக்தி' பாடல்.

'நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நைந்துபோகும்படி பாடு என்று ஒரு தெய்வம் கூறியதாம். மானுடச் சாதியைக் கூட்டி ஒன்று எனக் கொண்டு உலகம் முழுதும் பயனுறும்படியாக பாட்டிலே அறம் காட்டு என்கிறதாம் ஒரு தெய்வம். மற்றொரு தெய்வம், பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் ஊட்டி, எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன்கவி ஒது என்கிறதாம்.' இவற்றுக்கு நடுவில்,

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்

நானி லத்தவர் மேனிலை எய்தவும்

பாட்டி லேதனி இன்பத்தை நாட்டவும்

பண்ணிலே களி கூட்டவும் வேண்டி நான்

மூட்டும் அன்புக் கனலொடு வாணியை

முன்னு கின்ற பொழுதில் எலாம்குரல்

காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்

கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்.

என்று பாடுகிறார்.

கவிதையாவும் தனக்கு எனக் கேட்ட பராசக்தியிடம் பாரதியும்

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே

இன்று எனக்குத் தருவாய்

என்று கேட்கிறார்.

செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்.

சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்

என்பன அவர் கேட்ட வரங்களுள் இங்கு கவனிக்கத்தக்கன.

தீபாவளிப்பண்டிகை வந்துவிட்டது. செலவுக்குச் சிரமம். பணத்தைத்தான் அவர் சேமித்து வைத்துக்கொள்ளவில்லையே தவிர, பழகியவர்களை நிறையவே உடன் இருத்திவைத்தவர்.

தீபாவளிக்கு முதல் நாள் துணிக்கடை நண்பர் ஒருவர் பாரதியாருக்கும் அவர் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் வேண்டிய துணிகளைக் கொடுத்துவிட்டுப் போகிறார். சீடர்கள் பலர் பட்டாசு, மத்தாப்பு, வாணங்கள், பூ, வெற்றிலை, பழங்கள் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போகின்றனர்.

இரவு எல்லோரும் தூங்கப் போய்விட்டபோது, பாரதிமட்டும் அமைதியின்றிச் சிந்தனையோடு அமர்ந்திருக்கின்றார். வெளியில் சொல்ணொக் கவலை. பராசக்தியிடம் அவர் முறையிட்டுப் பாடினாரோ, வேண்டினாரோ தெரியாது.

விடிந்தால் தீபாவளி. வெறும் கையோடு பண்டிகையை எப்படி ஓட்டுவது? தேவைப்படும் பணத்தை யார் தருவார்? பராசக்தியேதான் கொடுக்க வேண்டும். எள் அத்தனைப் பொழுதும் மறவாது அவள் திருவடிக்கே பாமாலை சூட்டிய பாரதி, பணத்துக்காகப் பிறரிடம் கையேந்துவது பாரதிக்கு மட்டுமல்ல, பராசக்திக்கும் சிறுமை அல்லவா? மனம் கிடந்து மறுகுகிறது.

நடுநிசியில் கதவு தட்டும் ஓசை. இந்நேரத்தில் யாராக இருப்பார்கள் என்று தயங்கியபடி எழுந்துபோய், பாரதி கதவைத் திறக்கிறார். வந்திருந்த இருவரில் ஒருவர் பணிந்து வணங்கி, ஒரு முடிப்பைத் தருகிறார். 'என் கனவில் பராசக்தி தோன்றி, அடே உத்திராபதி எழுந்திரு. என் பக்தன் பாரதி, நாளைக் காலை தன்னைக் காணவரும் ஏவலர், தொழிலாளர் நண்பர்களுக்குப் பரிசளிக்கக் கையில் காசில்லாமல் நொந்து மனம் வருந்துகிறான். உடனே கையிலுள்ள பணத்தைச் சில்லறையாக மாற்றிக்கொண்டு போய்க்கொடு என்று சொன்னாள், நான் அதை நிறைவேற்றினேன்' என்று மெய்சிலிர்க்கச் சொல்கிறார். அவர் கொடுத்த பணப்பையில், ஓரணா, இரண்டணா காசுகளின் கனம். நடந்தது இது; நேரில் கண்ட பாரதியின் மகள் சகுந்தலா பாரதி, 'என் தந்தை' நூலில் எழுதிய அனுபவப் பதிவு.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா!

அன்பு மிகுந்ததெய்வம் உண்டு - துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

என்று தன் மகள் சகுந்தலாப் பாப்பாவுக்குச் சொல்லியதை, அப்படியே நிலைநிறுவிக் காட்டிக் காத்தவள் பராசக்தி. நம்பலாமா, கூடாதா? என்று தயங்கும் நமக்கு அவர் சொல்லும் உறுதி.

நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறைத் தீர்ப்பு, அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம் என்று நம்பிக்கை கொடுக்கும் பாரதியின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி இதுதான். அம்பிகையின் பணிகளை நாம் செய்யத் தொடங்கிவிட்டால், நமக்கான தேவைகளை அவள் நிறைவேற்றி வைப்பாள்.

(இன்று தீபாவளிப் பண்டிகை).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.