FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பரிமேலழகரின் உரை நயம்

திருக்குறளில் மாறுபட்டது போன்று தோன்றும் கருத்துகளை எல்லாம் நன்கு ஆராய்ந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி நயமான உரையை பரிமேலழகர் அளிக்கிறார்.

6 வினாடிகள் முன்பு
பகிர்:

திருக்குறளில் மாறுபட்டது போன்று தோன்றும் கருத்துகளை எல்லாம் நன்கு ஆராய்ந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி நயமான உரையை பரிமேலழகர் அளிக்கிறார். அதனால்தான் திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரையே சிறந்தது என்று போற்றப்படுகிறது.

'ஊழ்' என்ற அதிகாரத்தில், / ஊழின் பெருவலி யாவுள? / மற்றொன்று / சூழினும் தான்முந் துறும். (380)

என்ற திருக்குறளுக்கு பரிமேலழகர், 'தன்னை விலக்குதல் பொருட்டு தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும், தான் அவ் உபாயமே யானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச் சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும். அதனால் ஊழ்போல் மிக்க வலிவுடையன யாவை வுள?' என்று ஊழை வெல்ல முடியாது என்றுரைக்கிறார்.

Advertisement

Advertisement

'ஆள்வினைவுடைமை' அதிகாரத்தில், / ஊழையும் உப்பக்கம் காண்பர் / உலைவுஇன்றித்/ தாழாது உஞற்று பவர். (620)

என்ற குறளில், ஊழினை வெல்ல முடியும் என்கிறார். ஆள்வினைவுடைமை என்ற ஆற்றலை வலிமையாக்க இந்தக் குறளைப் படைக்கிறார். இதை வாசிப்போரில் சிலர், வள்ளுவர் மாற்றி மாற்றிக் கூறுகிறார் என்று தெரிவிப்பர்.

பரிமேலழகர், வள்ளுவரின் இக்குறள் மிகச் சரியானது என நயம்பட, அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கருத்துரைக்கிறார். ஒரு தடவை அல்லது இரு தடவை முயன்று, தான் நினைத்தவற்றைச் செய்பவர் தோற்பாராயின் அதற்கு ஊழ்தான் காரணம் எனலாம். ஆனால், வெல்லும் வரை வேலை செய்பவர் ஊழை வென்றவர் எனலாம் என்று மிக நயமாக அனைவரையும் ஏற்றுக் கொள்ள வைக்கிறார்.

'இறைமாட்சி' அதிகாரத்தில்,/ தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் / நீங்கா நிலன்ஆள் பவர்க்கு. (383)

என்ற குறளும், 'வினைசெயல்வகை' என்ற அதிகாரத்தில் இடம்பெறும்,

தூங்குக தூங்கிச் செயற்பால, தூங்கற்க / தூங்காது செய்யும் வினை. (672)

என்ற குறளும் மாறுபாடு கொண்டன போல் தோன்றும். முதல் குறளில் நிலத்தை ஆளும் மன்னன் காரியங்களில் 'விரைவுடைமை, அதனை அறிவதற்கு ஏற்ற கல்வியுடைமை, ஆண்மைவுடைமை' ஆகிய மூன்றையும் பெற்றிருக்க வேண்டும் என்கிறார்.

இரண்டாம் திருக்குறளில், 'நீட்டித்துச் செய்யும் வினைகளுள் நீட்டிக்க, நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக' என்று எழுதி, 'இருவகை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும் மேல் தூங்காமை என்றார்' ஈண்டதனைப் பகுத்துக் கூறினார் என்று கூறுவதாக எழுதுகிறார். இங்கு, தூங்காமை, தூங்குக என்ற சொற்களுக்கான முரணை நீக்கும் வகையில் நயமாக எழுதியுள்ளதைப் பார்க்க முடிகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments