FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தற்குறிப்பேற்ற அணியும் மானுட விழுமியமும்...

பெரும்புலவர்கள் தாங்கள் விளக்க வந்த கருத்துகளைப் பற்பல உத்திகளைப் பயன்படுத்தி விளக்குவர்.

18 அக்டோபர் 2026, 6:18 pm IST
பகிர்:

பெரும்புலவர்கள் தாங்கள் விளக்க வந்த கருத்துகளைப் பற்பல உத்திகளைப் பயன்படுத்தி விளக்குவர். பலநேரங்களில், அவர்களுக்குத் தற்குறிப்பேற்ற அணியே உற்றுழி உதவும்.

இயல்பாக நடக்கும் ஒரு காட்சியைப் பார்க்கும் காப்பியப் புலவர் அது தமது உள்ளத்தில் தோன்றிய மற்றொரு நிகழ்வைக் குறித்ததாகப் படைத்துக் காட்டுவார்.

கோவலனும் கண்ணகியும் மதுரைக்குள் வரும்போது கோட்டை மதிற்சுவரின் மேலிருந்த கொடிகள் காற்றுக்கு அசைகின்றன. இளங்கோவடிகள் அவை 'இருவரையும் வராதீர்கள்' என்று மறித்துக் கைகாட்டின (மதுரை. புறஞ்.13:189}190) என்று சித்திரித்திருப்பார். இது, தற்குறிப்பேற்றத்துக்கு நற்சான்றாகும்.

Advertisement

Advertisement

கோழிகளின் இயல்பான செயலைக்கண்ட புலவர்கள் இருவர் தமது உள்ளக்கிடக்கையை அதன்மீது வைத்து அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். துன்பக் காட்சி ஒன்றைக் கோழிகளுடன் இணைத்து ஒரு சித்திரமாகத் தீட்டியுள்ளனர். முதலாமவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். அவருக்கு இந்த வித்தைகள் சொல்லித்தர வேண்டுமோ?

அயோத்தியா காண்டம் மந்தரைச் சூழ்ச்சிப் படலத்தில் ஒரு காட்சி: இராமன் காடாளவும் பரதன் நாடாளவும் வேண்டுமெனத் தயரதனிடம் கைகேயி கேட்டபோது அவன் துடிதுடித்துப் போனான். அவ்வேளையில்,

'எண்தரும் கடைசென்ற யாமம் இயம்புகின்றன ஏழையால்

வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம்

கண்டு நெஞ்சு கலங்கி அம்சிறையான காமர் துணைக்கரம்

கொண்டு தம்வயிறு எற்றிஎற்றி விளிப்பப் போன்றன கோழியே' (51)

என்ற இந்தப் பாடல் கம்பரால் படைக்கப்பட்டுள்ளது. இதில் 'கைகேயியால் மலரணிந்த மார்பனாகிய தயரதன் அறிவு அழிந்து புலம்பியவற்றைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் கலங்கிய கோழிச்சேவல்கள் கடையாமப் பொழுதில் தம் இரு சிறகுகளாகிய கரங்களால் வயிற்றிலே அடித்துக்கொண்டு அவ்வூர் மக்களை எழுப்புவனபோல் கூவுகின்றன' என்று தற்குறிப்பேற்றத்தை அமைத்துள்ளார்.

காலைப் பொழுதிலே மனைஉறை கோழிகள் சிறகுகளால் படபடவென்று அடித்துக்கொண்டு கூவுவது இயல்பு. அக்காட்சியைத் தமது கதைச் சூழலுக்குப் பயன்படுத்திக்கொண்டதுதான் கம்பரின் புலமை. (கோழி என்பது பால்பகா அஃறிணைப்பெயர்).

'வெண்பாவிற்கோர் புகழேந்தி' என்ற சிறப்பு அடைபெற்ற புகழேந்திப் புலவரின் நளவெண்பாவில் கலிதொடர் காண்டத்தில் ஒரு காட்சி. நளனும் தமயந்தியும் ஓருடையில் இரவில் காட்டிலே தங்குகின்றனர்.

கலியின் மிகுதியால் தமயந்தியை விட்டுப்பிரிய நினைத்த நளன் ஆடையை இருகூறாக்கி, அவளைத் தம்மிலிருந்து வேறாக்கிப் பிரிந்துபோகிறான்.

விடியற்காலைப் பொழுதில் தமயந்தி கண்விழித்துப் பார்த்தபோது நளனைக் காணாது 'வேடனின் நெருப்புப்போன்ற அம்பினால் தைக்கப்பெற்ற மயில் எனத் துடிக்கிறாள்' (பா.112); 'வான்முகிலும் மின்னலும் வறுநிலத்து வீழ்ந்தனபோல் தானும் குழலும் தனிவீழ்ந்தாள்' (பா.113). அவளுடைய துயர்மிகு நிலையைக்கண்டு ஆற்றமுடியாத காட்டுக்கோழிகள் புலம்பின என்று புகழேந்திப் புலவர் ஒரு காட்சியைச் சித்திரித்துள்ளார். அச்சூழலில்,

'தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகாம்

கையால் வயிறுஅலைத்துக் காரிருள்வாய் -

வெய்யோனை

வாவுபரித் தேர்ஏறி வாஎன்று அழைப்பனபோல்

கூவினவே கோழிக் குலம்' (114)

என்ற பாடல் அவரால் புனையப்பட்டுள்ளது. தமயந்தியின் துடிப்புகளைக் கண்ட காட்டுக்கோழிகள் அவளுக்கு உதவ நினைக்கின்றன. அவளது துன்பத்தைத் தாங்களும் ஏற்கின்றன. அவை தமது இறக்கைகளாகிய

கைகளால் வயிற்றிலே அடித்துக்கொண்டு, 'காரிருளை நீக்க, சூரியனே! நீ தாவுகின்ற குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி விரைந்து வாவென அழைப்பனபோல்

கூவின' என்று பாடியுள்ளார். (சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கரமுடைய தேரில் பயணிப்பதாகவும் அவனுடைய தேரோட்டியின் பெயர் அருணன் என்பதாகவும் இந்தியத் தொன்மங்கள் கூறுகின்றன.)

வீட்டுக்கோழிகள் தயரதனின் நிலையைக் கண்டு துன்புற்று அயோத்தி நகர மக்களை விரைந்து எழுப்பின என்று கம்பர் பாடியிருக்க, காட்டுக்கோழிகள் தமயந்தியின் பிரிவுத் துன்பம் தாங்காமல் 'சூரியனே விரைந்துவந்து இருட்டை விரட்டு, நளன் இருக்குமிடத்தைத் தமயந்திக்குக் காட்டு' எனக் கூவின என்று புகழேந்திப் புலவர் பாடியுள்ளார்.

கம்பர் காட்டிய கோழிகள், தயரதனின் துன்பத்தைக் கண்டு அதைத் தாங்களே மக்களுக்குக் காட்டுவனபோல் நேரடியாகப் பங்கேற்றன. புகழேந்தியார் காட்டிய கோழிகளோ தங்களால் நேரடியாக உதவிசெய்ய இயலாத நிலையால் சூரியனை உதவிக்கு அழைத்துள்ளன.

கோழிகளின் துயர்மிகு நிலையை

'எற்றிஎற்றி' என்ற அடுக்குத்தொடரால்

கம்பர் காட்சிப்படுத்தியிருக்க, புகழேந்தியாரோ

'(பன்முறை) கூவின' என்னும் சொல்லால் படம்பிடித்துள்ளார்.

சூரியனே விரைந்து வாவென்று ஒருமுறை கூப்பிட்டால் அதற்குக் கேட்கவில்லையாம். அதனால் சூரியன் வரும்வரை மீண்டும் மீண்டும் கூவினவாம். இருவர்க்கும் என்னேவொரு புலமை! புலமை மட்டுமே இப்பாடல்களில் இல்லை. மானுட நேயமும் உண்டு.

இக்காலத்தில் உதவிசெய்யும் உயர்பண்பு மனிதரிடத்தில் குறைந்து வருகிறது. ஆனால், அஃறிணை உயிர்களாகிய கோழிகள் உயர்திணைப் பண்பினைப்பெற்று உதவியுள்ளன என்று பெரும்புலவர்கள் இருவரும் பாடியுள்ளனர். இதை வெறுமனே தற்குறிப்பேற்ற அணி என்று மட்டும் கடந்துவிடாமல் கோழிகள்மீது வைத்து மக்களுக்கு உதவிசெய்யும் பண்பு பெருக வேண்டுமென அப்புலவர் பெருமக்கள் அறிவுறுத்தியதாகவும் கருதலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments