FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காதலில் அறம்

'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்' என்ற கம்பரின் வரிகள் காதலுக்கு இலக்கணமாகச் சொல்லப்பட்டதாகும்.

6 செப்டம்பர் 2026, 6:39 pm IST
கம்பர் - சித்திரிப்பு
பகிர்:

'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்' என்ற கம்பரின் வரிகள் காதலுக்கு இலக்கணமாகச் சொல்லப்பட்டதாகும். அந்தக் காதலை எதிர்ப்பது, அதைத் தடுப்பது அறமற்ற செயல் என்றே சங்க இலக்கியப் பாடல்கள் சொல்கின்றன.

'மாசற்ற முழுமதிபோல் விளங்கும் முகம் உடைய காதலியரைத் திருடிச் செல்வதும் அறத்தொடு பட்டதே' என அற விதியும் கூறுகிறது ('வெளவிக் கொளலும் அறன் எனக்கண்டன்று அறனும் அது கண்டற்றாயின்) என்று கலித்தொகையில் (குறிஞ்சிக்கலி.62) கபிலர் கூறுகிறார்.

அகநானூற்றில் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், 'தாம் பார்த்துக் காதலித்த இளைஞருடனே காதலில் கூடி இன்புறுவது அறத்தோடுபட்டதே' என்று கருதுகிற தன்மை இல்லாத தாய் (அறன் இல் யாயே.302) என்கிறார். ஆக காதலிப்பது, காதலனுடன் பேசுவது யாவும் அறம் சார்ந்தது.

Advertisement

Advertisement

அப்படியானால் காதலனுடன் செல்வது- அதுவும் அறம் சார்ந்ததுதான்.

கலித்தொகையில் பெருங்கடுங்கோ 'எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநிழல்' என்ற பாடலில் காதலனுடன் காதலி தன் வீட்டைத்துறந்து போவதை 'சிறந்தானை வழிபடீச் சென்றனள், அறந்தலை பிரியா ஆறும் மற்று அதுவே' (பாலைக் கலி.9) என்ற பாடலில் காதலனுடன் அவள் கூடிச் சென்றுவிட்டாள். அவள் எடுத்த முடிவு அறநெறி தவறாத ஒழுக்கமும் ஆகும்' என்கிறார்.

இந்தப் பாடலில் காதலனுடன் 'மகள் போனதை மூன்று உவமைகளில் மெய்ம்மையாக்குகிறார். மலையில் பிறந்த மரச்சந்தனம் தம் உடலில் பூசிக் கொள்பவர்க்கல்லாது மலைக்கு என்ன நன்மை செய்யும்? அதுபோல உம் மகளும் அத்தகைய சந்தனம் போன்றவளே; வெண் முத்துக்கள் கோத்து அணிபவர்க்குத்தானே பயனைத்தரும். நீரினுள்ளே பிறந்தாலும்

முத்துக்கள் நீருக்கு என்ன பலனைச் செய்யும்? உமது மகளும் அம்முத்துக்கள் போன்றவளே!

ஏழு நரம்புகளில் தவழ்ந்து வரும் இனிய இசையானது யாழில்தான் பிறக்கும். அது இசைத்து அனுபவிப்பவர்க்கு இன்பம் தருமேயல்லாது, பிறந்த யாழுக்கு அதனால் என்ன பயன் ஏற்படும்.

ஆராய்ந்தால் உம் மகளும் உமக்கு அத்தகையவளே. ஆகவே, மகள் காதலனுடன் போவதையிட்டு கவலைப்பட வேண்டாம். அவள் கொண்ட முடிவு அறநெறி தவறாத ஒழுக்கமாகும்.

காதலுக்கும், காதலனுடன் சென்ற பெண்ணைப் புகழ்ந்து சொல்ல இதற்கு மேல் வார்த்தைகள் உண்டா என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments