FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வெள்ளிமணி

அருள்வழங்கும் ஆனூர் அட்டபுரீசுவரர்!

தொண்டைநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல திருக்கோயில்கள் உள்ளன. அவற்றுள் பொன்விளைந்த களத்தூர் அருகே உள்ள ஆனூரும் ஒன்று.

Updated On : 8 ஜூன் 2018, 12:00 am IST
பகிர்:

தொண்டைநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல திருக்கோயில்கள் உள்ளன. அவற்றுள் பொன்விளைந்த களத்தூர் அருகே உள்ள ஆனூரும் ஒன்று. இவ்வூரில் பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் காணப்படுவதால் இப்பகுதியில் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதை அறியமுடிகிறது.
ஆனூரில் வரலாற்று பெருமைமிக்க மூன்று கோயில்கள் அமைந்துள்ளன. அவை, அட்டபுரீசுவரர் திருக்கோயில், வேத நாராயணப் பெருமாள் திருக்கோயில், கந்தசாமி திருக்கோயில் ஆகியன. சிவன், பெருமாள் கோயிலிலிருந்து 31 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்திலேயே இங்கு கோயில் இருந்து பிற்காலத்தில் திருப்பணிகள் நடைபெற்றதை அறியமுடிகிறது. 
ஆனூரின் வடக்கிழக்கில் அட்டபுரீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலய இறைவனின் திருப்பெயர் அஸ்தபுரீசுவரர்; அம்பாள் சௌந்தவல்லி ஆகும். கிழக்குநோக்கிய திருக்கோயில், கோயிலின் முன்பாக திருக்குளம் அமைந்துள்ளது. 
ஆலயத்தின் திருச்சுற்றுச் சுவர் பல இடங்களில் இடிந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. 
தெற்கு பக்கச் சுவரில் பல்லவர் கால விநாயகர்,அமைந்துள்ளார். இதே சுவரில் மாவுக்கல் போன்ற பலகைக்கல்லில் பிரம்மா, நரசிம்மர், சிவலிங்கம், உமா, லட்சுமி, துர்க்கை,பிள்ளையார் ஆகிய தெய்வ வடிவங்கள் அடங்கிய சிறு சிற்பத் தொடர் தொண்டை நாட்டில் மணிமங்கலம், முன்னூர், மதுராந்தகம், உக்கல், வேலஞ்சேரி, தென்னேரி, உத்திரமேரூர் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. 
திருக்கோயில் நுழைவுவாயில் கோபுரம் போன்ற அமைப்பு இல்லாமல் காணப்படுகிறது. வாயிலின் முன்பாக திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ள கற்றூண் நிறுத்தப்பட்டுள்ளது.
அதனை, அடுத்து பலிபீடமும் நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. அடுத்ததாக, முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறையும் உள்ளன. 
கருவறையுடன்இணைந்த முன்மண்டபத்தில் தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி உள்ளது. கருவறை நுழைவு வாயிலின் அருகே பக்கச்சுவரில் ருத்ராட்ச மாலை அணிந்தஅடியவர் ஒருவர் அமர்ந்த கோலத்தில் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறார். அவர் அருகில் விபூதி கலயம் போன்ற பாத்திரம் காணப்படுவது சிறப்பாகும். 
கருவறை செவ்வக வடிவில் அமைந்துள்ளது. கருவறை தேவக்கோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை வடிவங்களைக் காணலாம். 
வடக்கு சுற்றில் உள்ள சண்டிகேசுவரர் வடிவம் மிகச் சிறப்பானது. வலகரத்தில் மழுவைத் தாங்கியும் இடக்காலை மடக்கி, வலக்காலை குத்திட்டு அமர்ந்த கோலம் தொன்மையானதாகும். வடக்கிழக்கு மூலையில் பைரவர் சந்நிதி அமைந்துள்ளது.
இக்கோயிலில் காணப்படும் பல்லவமன்னன் கம்பவர்மன் காலக் கல்வெட்டில்
களத்தூர் கோட்டத்து ஆனியூர் " வம்பங்காட்டு மகாதேவர்', "திருவம்பங்காட்டு உடையார் ஆளுடைய மகாதேவர்' எனக் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
இக்கோயிலில் நடைபெற்ற ஸ்ரீபலி வழிபாட்டின்போது மத்தாரி, கரடிகை, கைமணி, சங்கு, காளம், சேகண்டிகை போன்ற இசைக்கருவிகள் வாசிக்க தானம் அளிக்கப்பட்ட செய்தியினை அறியமுடிகிறது.
இவ்வூரில் உள்ள வேதநாராயணப் பெருமாள் கோயிலிலும் திருப்பணிகள் நடைபெற வேண்டியது அவசியமாகிறது. "சித்திரமேழி விண்ணகர்' என்று இத்திருக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவது சிறப்பானது. 
பெருமாள் கோயில் அருகிலேயே கந்தசாமி திருக்கோயில் என்ற முருகப் பெருமான் கோயில் உள்ளது. முருகப்பெருமான் இவ்வாலயத்தில் "பிரம்ம சாஸ்தா' வடிவில் எழுந்தருளி ஞானம் வழங்கும் அற்புதக் கோலத்தில் அருளாசி செய்கிறார். தற்போது இவ்வாலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்று 
வருகின்றன. 

தொடர்புக்கு: 95510 66441/ 94451 18719.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments