நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலானது "பூலோக வைகுண்டம்', "பெரிய கோயில்' என்றெல்லாம் போற்றப்படுகிறது.
பல கிராமங்களில் நெல் அறுவடையான பின்னர் நெல்லை மரக்காலால் அளப்பதற்கு முன்னர் "திருவரங்கம் பெரிய கோயில்' என அழைத்து, அளந்த பின்னரே இரண்டு, மூன்று எனத் தொடர்ந்து அளக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
கோயிலில் பெருமாள் } பெரிய பெருமாள், தாயார் } பெரிய பிராட்டியார், தளிகை } பெரிய அவசரம், வாத்தியம் } பெரிய மேளம் என்று "பெரிய' என்ற அடைமொழிச் சிறப்புடன் புகழப்
படுகிறார்.
நாதமுனிகள், உய்யக் கொண்டார், ஆளவந்தார், பெரிய நம்பிகள், எம்பெருமானார், கூரத்தாழ்வான், பட்டர், நம் பிள்ளை, பெரிய வாச்சான் பிள்ளை, பெரிய ஜீயர் போன்ற பல வைணவ ஆச்சாரியர்கள் இங்கே பெருந்தொண்டு செய்துள்ளனர்.
கோயிலில் மாதம்தோறும் திரு
விழாதான். எனினும், மார்கழி மாதத்தில் நடைபெறும் "வைகுண்ட ஏகாதசி திருவிழா' மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் திருவிழா திருமொழித் திருநாள் (பகல் பத்து), திருவாய்
மொழித் திருநாள் (இராப்பத்து) என அழைக்கப்பட்டு, ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் பாடப்பெற்று "தெய்வத் தமிழ் விழாவாக' நடைபெறுகிறது.
ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற அனைவரும் அரங்கனைப் போற்றி மகிழ்ந்துள்ளனர். ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும், அரங்கனோடு ஒன்றிய பெருமையும் உடையது இத்தலம்.
அதிகமான பாசுரங்களைப் பாடி அரங்கனைப் போற்றி மகிழ்ந்தவர் திருமங்கையாழ்வார். "எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே' என்று சொல்லி, திருமங்கையாழ்வார் பெருமாளின் தரிசனம் பெற்றதைப் பேசும் திருநெடுந்தாண்டகம் எனும் பிரபந்தம், திருவிழாவில் முதல்நாள் அன்று அருளப்படுகிறது.
பகல்பத்து எனப்படும் திருமொழித் திருநாள், கோயிலில் அர்ச்சுன மண்டபத்தில் நடைபெறும். முதல் இரண்டு நாள்களில் பெரியாழ்வார் அருளிய பெரியாழ்வார் திருமொழி பாசுரங்களும், மூன்றாம் நாள் ஆண்டாள் அருளிய திருப்பாவை நாச்சியார் திருமொழியும், நான்காம் நாள் பெருமாள் திருமொழி திருச்சந்தவிருத்தம் பாசுரங்களையும், ஐந்தாம் நாள் தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலை, திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களையும், திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிப்பிரான் பாசுரங்களையும், ஆறாம் நாள் மதுரகவி ஆழ்வார் அருளிய "கண்ணிநுண் சிறுத்தாம்பு' பாசுரங்களையும், திருமங்கையாழ்வார் அருளிய "பெரிய திருமொழி' பாசுரங்களையும், 7, 8, 9}ஆம் நாள்களில் பெரிய திருமொழியும், 10}ஆம் நாள் பெரிய திருமொழிப் பாசுரங்களையும், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் பாசுரங்களையும் நம் பெருமாள் முன்பு அரையர்கள் அபிநயத்துடன் வியாக்யானம் செய்வர்.
பத்தாம் நாள் அன்று நம் பெருமாள் நாச்சியார் கோலத்தில் (மோகினி அலங்காரம்) உலா வரும் காட்சி அற்புதமானது. மனதை ஈர்க்கும் வண்ணம் அழகிய அலங்காரத்துடன் ஒய்யாரமாக அமர்ந்து அருள் வழங்கும் கோலம் தனிச்சிறப்புடையது.
திருவாய்மொழித் திருநாள் எனப்படும் இராப்பத்து திருநாளில் முதல் நாளில் நடைபெறும் "வைகுண்ட ஏகாதசித் திருவிழா' மிகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. இவ்வைபவம் அனைத்து வைணவத் தலங்களில் நடைபெற்றாலும், திருவரங்கத்தில் நடைபெறும் விழா தனிச்சிறப்புப் பெற்று விளங்குகிறது.
நம்பெருமாள் இரத்தின அங்கி அலங்காரத்துடன், கிளிமாலை அணிந்து அதிகாலை "பரமபத வாசல்' எனப்படும் சொர்க்கவாசலைக் கடந்து வந்து திருமாமணி மண்டபம் சென்று பக்தர்களுக்குக் காட்சி தந்து அருளுகிறார். ஏழாம் திருநாள் திருக்கைத்தல சேவை, 8}ஆம் நாள் திருமங்கை மன்னன் வேடுபறி வைபவங்கள் நடைபெறுகின்றன.
பத்தாம் நாள் அன்று சிறப்பான நிகழ்ச்சியாக "நம்மாழ்வார் மோட்சம்' நடைபெறுகிறது. "அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்' என நம்மாழ்வார் தமது பாசுரத்தில் அரங்கனைப் போற்றுகிறார். இவ்விழாவில் அரங்கன் திருவடிகளில் அமர்ந்து "நம்மாழ்வார் மோட்சம்' எனும் வைபவம் இவருக்குச் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வைபவத்தில் நம்பெருமாள், தமது மாலை, கஸ்தூரி திருமண்காப்புகளை அவருக்கு அளிக்கும் காட்சி அற்புதமானது. தன்னை சரண் அடைந்தவர்களுக்கு இறைவன் தன்னையே அளிப்பான் என்பது இவ்விழாவின் தத்துவமாக விளங்குகிறது.
பக்தி மணம் பரப்பும் செந்தமிழ் மலர்களாக ஆழ்வார் அருளிய பாசுரங்கள் விளங்குகின்றன. வைகுண்ட ஏகாதசித் திருவிழாவில் நம் பெருமாள் முன்பு பாசுரங்களை அரையர்கள் பாடி அபிநயம் செய்கின்றனர். இதை "அரையர் சேவை' எனக் கூறுவர். திருவரங்கத்தில் நடைபெறும் "வைகுண்ட ஏகாதசித் திருவிழா' தெய்வத் தமிழ் திருவிழாவாக நடைபெறுகிறது.
தொல்லியல் துறை (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.