FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வெள்ளிமணி

மனக்குறை போக்கும் மாவூற்று வேலப்பர்

மேற்குத் தொடர்ச்சி மலையின் நடுவே சிறு குன்றின் மீது பழைமையான சுயம்பு மாவூற்று வேலப்பர் கோயில் அமைந்துள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:52 pm IST
பகிர்:

"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பார்கள். அதை மெய்ப்பிப்பதுபோல் தேனி மாவட்டத்தில் தெப்பம்பட்டி, கடமலைக்குண்டு கிராமத்தில் பசுமை படர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் நடுவே சிறு குன்றின் மீது பழைமையான சுயம்பு மாவூற்று வேலப்பர் கோயில் அமைந்துள்ளது.

இத்தலம் அமைந்துள்ள மலைப்பகுதியில் பல்லாண்டு காலமாக பளியர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வள்ளிக்கிழங்கை பயிரிட்டு அவற்றை உணவாக உண்டு வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் வறட்சியால் பலரும் வேறு இடத்துக்குச் சென்றுவிட்ட நிலையிலும், அங்கேயே ஒரு குடும்பத்தினர் தங்கிவிட்டனர். ஒருமுறை அவர்கள் வள்ளிக்கிழங்கை எடுக்க உசிலைக்குச்சியால் மண்ணைக் கிளறியபோது, கிழங்கு கிடைக்காமல் அதன் வேர் மட்டும் வளர்ந்துகொண்டே போனது. விடாமல் தோண்டியதில், வேரின் முடிவில் கற்சிலை திருமேனியாக முருகப்பெருமானைக் கண்டெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

இத்தகவல், அப்போது தேனி மாவட்டத்தைச் சுற்றி ஆட்சி செய்த கண்டமநாயக்கனூர் ஜமீனிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை வந்து

பார்வையிட்ட ஜமீன்தார், அங்கு மண்ணில் புதைந்த நிலையில் இருந்த முருகன் சிலையை மீட்டெடுத்து, "மாவூற்று வேலப்பர்' எனப் பெயரிட்டு, அதே இடத்தில் கோயில் எழுப்பியுள்ளார்.

ஜமீன்தாரின் உத்தரவின் பேரில் பளியர் இனத்தவர்களே இக்கோயிலில் பூஜைகள் செய்துவருகின்றனர். தற்போதும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.

280 படிகள் கடந்துசென்றால் கருவறையில் மாவூற்று வேலப்பர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். பல்லாண்டுகளுக்குப் பிறகு 1973}ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது புதிய

கற்சிலையாக மூலவர் முருகப்பெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதிய சிலையின் வலதுபுறம் மூலஸ்தானத்தில் உள்ள பளியர் இன மக்களால் முன்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட வேலவரின் திருவுருவச் சிலை இன்றும் வழிபாட்டில் உள்ளது.

தினசரி நடைபெறும் பூஜையின்போது உசிலைக்குச்சிக்கும் பூஜை செய்யப்படுகிறது. தலவிருட்சம் மாமரம்.

இத்தலத்துக்கு அருகில் மாமரத்தின் வேரிலிருந்து ஊற்றுப் பெருக்கெடுத்து வழிந்தோடி பெரிய தீர்த்தமாகப் பெருகியுள்ளது. அதனால்தான் வேலப்பரை "மாவூற்று வேலப்பர்' என்று அழைக்கிறார்கள். மாவூற்று வேலப்பரும், மாவூற்று விநாயகரும், சப்தமாதர்களும் வடக்கு நோக்கி அருள்வது சிறப்பு.

மலையின் அடிவாரத்தில் சக்தி கருப்பண்ணசாமி தரிசனம் தருகிறார். தெப்பம்பட்டியில் உள்ள பெரிய தெப்பத்துக்கும், இந்தக் கோயில் உள்ளிட்ட சில இடங்களுக்கும் நிலத்தடி இணைப்பு உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குகைகள் நிறைந்துள்ள இந்தப் பகுதியில் இப்போதும் சித்தர்களும், யோகிகளும் சூட்சும வடிவில் வேலப்பரை நினைத்து தவம் புரிவதாக நம்பப்படுகிறது. இயற்கை அன்னையின் மடியில் எழில் கொஞ்சும் அழகில் அமைந்திருக்கும் ஊற்றில் நீராடி, மாவூற்று வேலப்பரை மனமுருக வேண்டினால், தீராத நோயும் தீரும். மனக்குறைகளும் அகலும். இங்குள்ள வேலப்பருக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் நினைத்தது நிறைவேற வேலப்பரை தரிசித்து பால்குடம், பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்ப காவடி எடுக்கின்றனர். விவசாயிகள் முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டு விவசாயம் தழைக்க வேண்டுகிறார்கள்.

பக்தர்கள் மாவூற்று சுனையிலிருந்து வெளிப்படும் தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்துச் செல்கின்றனர். ஆடி, தை அமாவாசை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட நாள்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்படுகிறது.

"வேலப்பரை சர்க்கரைப் பொங்கலிட்டு வழிபட்டால், வேண்டும் வரத்தை தருவார் வேலப்பர்' என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

குன்றின் அடிவாரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கருப்பண்ண சாமிக்கு ஆண்டு முழுவதும் பொங்கல் வைத்தும், சேவல் மற்றும் கிடாவை நேர்த்திக்கடனாகவும் செலுத்துகின்றனர்.

சித்திரை முதல் நாள் துவங்கும் திருவிழாவின்போது தேவராட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுடன் பக்தர்கள் அலகு குத்தி வழிபடுகின்றனர். இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட இந்தக் கோயிலில் தினமும் நண்பகல் 12 மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

காலை 7 மணி முதல் 12.30 வரையும், மாலை 3 மணி முதல் 6.30 வரையும் திறந்திருக்கும் மாவூற்று வேலப்பர் கோயில், ஆண்டிப்பட்டியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும், தேனியில் இருந்து 38 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

- சோழவந்தான் ஜெனகராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments