வேதனை தீர்க்கும் வெக்காளி!
முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய ஊர், திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர்.
முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய ஊர், திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர். இங்குள்ள அருள்மிகு வெக்காளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது.
சோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி உறையூரில் எடுப்பித்த பத்தினிக் கோட்டமே பின்னர் வெக்காளி கோயிலானது என்றும், இங்கு எழுந்தருளச் செய்த கண்ணகி வழிபாடுதான் காலப்போக்கில் வெக்காளியாக பெயர் மருவி வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
கோயிலைச் சுற்றிலும் அழகான மண்டபம் அமைந்திருந்தாலும், வெக்காளி அம்மன் மட்டும் தன் வாக்குப்படி வெட்ட
Advertisement
Advertisement
வெளியில் நடுநாயகமாக வடக்கு முகமாய் வானமே கூரையாக, மேகங்களே திருவாசியாக, மழையே அபிஷேகமாக, நட்சத்திரங்களே மலர்களாகக் கொண்டு அருள்காட்சி வழங்குகிறாள்.
வடக்கு நோக்கிய யோக பீடத்தில் வலது காலை மடித்தும், இடது காலை அசுரன் மீது பதிய வைத்தும் அமர்ந்து வெக்காளி அம்மன் கம்பீரமாகக் காட்சி தருகிறாள். ஒரு கரத்தில் திரிசூலம், ஒரு கரத்தில் உடுக்கை, மற்றொரு கரத்தில் பாசம், இன்னொரு கரத்தில் அட்சய பாத்திரம் என நான்கு கரங்களைக் கொண்டிருக்கிறாள். இடுப்பில் யோகப் பட்டம் அணிந்திருக்கிறாள்.
உறையூரை வன்பராந்தகன் ஆட்சி செய்த காலம். அப்போது சாரமா முனிவர் நந்தவனம் அமைத்து மலர்ச்செடிகளைப் பயிர் செய்து வந்தார். அங்குள்ள பூக்களை தினமும் தாயுமான சுவாமிகளுக்கு அணிவித்து வந்தார். பிராந்தகன் என்னும் பூ வணிகன் நந்தவனத்துப் பூக்களை அரசனுக்கு அளிக்கத் தொடங்கினான்.
மலர்கள் குறைவதை சாரமா முனிவர் கண்டுபிடித்தார். பிறகு மன்னரிடம் முறையிட்டார். ஆனால், மன்னர் முனிவரை அலட்சியம் செய்தார். பின்னர், முனிவர் தாயுமான சுவாமிகளிடம் முறையிட்டார்.
தன் அடியவருக்குச் செய்யப்பட்ட இடரைத் தாங்காமல், தாயுமான சுவாமிகள் மேற்கு முகமாகத் திரும்பி, உறையூரை நோக்கினார். அப்போது, மண் மாரி பொழியத் தொடங்கியது. ஊரிலிருந்த அனைத்து உயிரினங்களும் தப்பியோடிப் பிழைக்க வழிதேட முற்பட்டன. உறையூரை மண் மூடியது. மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள தங்களின் காவல் தெய்வமான வெக்காளியம்மனை விட்டால் வேறு வழி இல்லை என்று தஞ்சம் புகுந்தனர்.
வெக்காளியம்மன் தாயுமான சுவாமிகளை வேண்டினாள். அதற்குப் பிறகு, மண் மாரி நின்றது. ஆனால், மக்கள் வீடிழந்து வெட்ட வெளியில் தங்கும் நிலை உருவானது. மக்களின் துயர் கண்டு அன்னை வெக்காளி, "ஊர் மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை, நானும் உங்களைப்போல வெட்ட வெளியிலேயே இருப்பேன்' என்று அருள்வாக்குக் கூறினாள். எனவே அன்னை வெக்காளி இன்றும் வானமே கூரையாக வெட்ட வெளியில் இருந்து, காற்று, மழை, வெயிலைத் தாங்கிக் கொண்டு பக்தர்களின் வேதனைகளைத் தீர்த்துவருகிறாள்.
செவ்வாய், வெள்ளிக்கிழமை வெக்காளியம்மனுக்கு விசேஷம். ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு
களும், ஆவணி மாதத்தில் மகா சர்வசண்டி ஹோமமும், வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகமும் நடைபெறும். புரட்டாசி மாதம் நவராத்திரி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
வெக்காளியம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. உலக நன்மைக்காகவும், நாடு செழிக்கவும், வெயிலால் அம்மன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் பூக்களைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து பங்குனி 23}ஆம் தேதி தொடங்கும் திருவிழாவானது தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெறுகிறது. சித்திரை 1}இல் தேரோட்டமும், மறுநாள் முத்துப்பல்லக்கு வைபவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
பக்தர்கள் தங்கள் மனதில் உள்ள குறைகளையும், வேண்டுதல்களையும் அலுவலகத்தில் சிறு காணிக்கை செலுத்தி, கோயிலில் தரும் சீட்டில் எழுதி, அதனை வெக்காளியின் திருப்பாதங்களில் வைத்து வணங்கி, பிறகு அம்மன் முன்புள்ள திரிசூலத்தில் கட்டிவிடுகின்றனர். இதன்மூலம் தங்கள் குறைகள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
வெளிமாநிலங்களில், வெளிநாட்டில் இருப்பவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், அமாவாசை, பௌர்ணமி முதலான நாள்களில், வீட்டில் விளக்கேற்றி, வெக்காளியம்மனை மனதார நினைத்துக் கொண்டு, ஒரு சீட்டில் தங்களின் பிரார்த்தனையை எழுதி, அதை பத்திரமாக பூஜையறையிலேயே வைக்கின்றனர்.
பின்னர், அவர்களின் வேண்டுதல் நிறைவேறியதும், திருச்சிக்கு வந்து வெக்காளித் தாயை தரிசித்து, தங்களது சீட்டைக் கட்டிவிடுவதுடன், தாங்கள் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்கின்றனர்.
தரிசனத்துக்காக காலை 5.15 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் இந்தக் கோயில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
- சோழவந்தான் ஜெனகராஜ்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.