முகப்பு
வெள்ளிமணி

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சிதந்த தலங்களுள் ஒன்று,

Updated On : 12 ஜூன் 2026, 4:36 pm IST
பகிர்:

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சிதந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

குளங்கள் நிறைந்து செழிப்புடன் காணப்பட்ட இவ்வூர், ஆரம்பகாலத்தில் குளத்தூர் என அழைக்கப்பட்டு, பின்னர் கொளத்தூர் என மருவியது. இவ்வூரின் செழிப்புக்குச் சாட்சியாக இன்றும் இங்குள்ள குளங்களில் அலங்கார வண்ண மீன்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகிறது.

அக்காலத்தில் குளத்தூர் பகுதி ஆற்காடு நவாப்பின் ஆளுகையில் இருந்தது. கிராமமாக விளங்கிய இப்பகுதியில் வரி வசூல் செய்யும் பணியை சிவ பக்தர் ஒருவர் செய்து வந்தார். கிராம மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட அவர், நவாப்பின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கினார்.

Advertisement

Advertisement

அந்தப் பக்தரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு நிலங்கள் வழங்கப்பட, ஆதியில் சிவபெருமானுக்கு சந்திரன் காட்சி கொடுத்த இடத்தில் அருள்மிகு அமுதாம்பிகை சமேத சோமநாத சுவாமி கோயில் கட்டப்பட்டது என செவி வழிச் செய்தியாகக் கூறப்படுகிறது.

இத்தலத்துக்கு வந்து வழிபட்டால், சந்திரனால் ஏற்பட்ட சகல சங்கடங்களும் விலகி, வாழ்வில் சந்தோஷம் பெறலாம்.

பழைமையான கோயிலில் சுமார் 45 அடி உயர கொடிமரத்தை முதலில் தரிசிக்கிறோம். பலிபீடம், நந்தீஸ்வரரை தொடர்ந்து கருவறையில் மூலவர் சோமநாத சுவாமி கிழக்கு நோக்கிய சிறிய லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். சோமநாதர், சோமநாதீஸ்வரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். அவரை வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை பேறின்மை, கடன் தொல்லை, ஆரோக்கியக் குறைபாடு நீங்குகிறது. சகலவித நன்மைகளும் ஏற்படுகிறது.

கருவறைக்கு வெளியே மூலவருக்கு இடப்பக்கம் பாலமுருகனும், வலப்பக்கம் சிறிய, பெரிய என இரு விநாயகரும், அருகில் நால்வரும் வீற்றிருக்கிறார்கள். அதில் பெரிய விநாயகர் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருக்கிறார். அவரது தலையில் லிங்க வடிவம் காணப்படுகிறது. இது ஒரு சிறப்பான அம்சம். அதைத் தொடர்ந்து 63 நாயன்மார்கள் தரிசனம் கிடைக்கிறது.

கருவறை கோஷ்டத்தில் பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோரும் அருள்கின்றனர். கருவறையை வலம் வரும்போது முதலில் அதிகார நந்தியை தரிசிக்கலாம். மூலவருக்குப் பின்னால் சோமாஸ்கந்தர், சித்தி புத்தியுடன் சொர்ண விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், காசி விஸ்வநாதர் ஆகியோர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.

கோஷ்டத்தில் உள்ள மகாவிஷ்ணுவுக்கு அருகில் உள்ள தூணில் சிவஞான முனிவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அவர், சிவ ஞான போதம் என்ற சைவ நூலுக்கு மகாபாஷ்யம் எழுதிய மகான். சிவஞான முனிவர் தமிழிலும் சம்ஸ்கிருத மொழியிலும் சிறப்புப் பெற்றவர். தமிழ் மொழியும் சம்ஸ்கிருத மொழியும் நிகரானவை என்ற எண்ணம் கொண்டவர். எனவே சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றை தமிழுக்கு மொழி பெயர்த்தார்.

தமிழிலும் வடமொழியிலும் புலமைப் பெற்ற அந்த மாமுனி, இத்தலத்துக்கு அருகில் தங்கி இருந்து சோமநாதர் கோயில் குறித்து குளத்தூர்ப் பயிற்றுப் பத்தந்தாதி, சோமேசர் முதுமொழி வெண்பா, அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் என்ற மூன்று நூல்களை எழுதியுள்ளார்.

அமுதாம்பிகை என்ற பெயரில் தெற்கு நோக்கி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார் இறைவி. அவருக்கு வலப்பக்கத்தில் பள்ளியறை உள்ளது. அம்பாளுக்குப் பின்னால் காலபைரவரும், அடுத்து மாணிக்கவாசகர், சிவகாமி சுந்தரி சமேத நடராஜரும் தனி சந்நிதியில் அருள்கின்றனர்.

உள் பிரகாரத்தில் சூரியன், சந்திரன், நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கிறது. வெளிப்பிரகாரத்தில் சுவாமிக்கு வலப்புறம் வன்னி மரத்தடியில் விநாயகர் வீற்றுள்ளார். இவர் வன்னி மர விநாயகர் என அழைக்கப்படுகிறார். அருகில் கோசாலை உள்ளது.

தொடர்ந்து தனி சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அமிர்தராஜப் பெருமாள் நின்றகோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகரும், அதனை தொடர்ந்து வசந்த மண்டபமும் அமைந்துள்ளது. வசந்த மண்டபத்தின் முன்பக்கத் தூணில் பக்த ஆஞ்சனேயர் கைக்கூப்பிய நிலையில் சேவை சாதிக்கிறார்.

சிவாலயத்துக்குரிய அனைத்து உற்சவங்களும் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றன. பெரிய உற்சவமாக சித்திரை மாதத்தில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. கோயில் நுழைவாயில் அருகே சூரியகுளம், சந்திரகுளம் என இரண்டு குளங்கள் உள்ளன. இவை பொதுவாக சந்திர தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

சோமவாரத்தில் (திங்கள்கிழமை) சுவாமிக்கும் சந்திரனுக்கும் வெள்ளை புஷ்பம் சாத்தி, நெல் அல்லது அரிசியை சந்திர பகவானின் பாதத்தில் சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வாழ்வில் சந்திரனால் ஏற்பட்ட கெடு பலன்கள் அனைத்தும் நீங்கி, வசந்தம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

தரிசனத்துக்காக காலை 6.30 - 11.30; மாலை 5 - இரவு 9 வரை திறந்திருக்கும் அருள்மிகு சோமநாத சுவாமி கோயில், கொளத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், சென்னை நூறடி சாலையில், இரட்டை ஏரி (ரெட்டேரி) பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் அரை கி.மீ. தொலைவில் உள்ளது.

- மு.வெங்கடேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.