FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

பல தலைமுறைகளுக்குப் பலன் தரும் பனை! 5 லட்சம் விதைகளை விதைத்த தன்னார்வலர்!

திருப்பூரில் லட்சக்கணக்கான பனைகளை விதைத்து வரும் அத்திக்கடவு சம்பத்குமார் பற்றி...

Updated On : 16 ஜூலை 2026, 2:38 pm IST
அத்திக்கடவு சம்பத்குமார் (இடது) - Dinamani
பகிர்:

திருப்பூர்: இன்று மண்ணில் விதைக்கப்படும் ஒரு பனைவிதை நாளை மரமாக வளரும் என்ற உத்தரவாதம் இல்லை. கோடை வெயிலில் வறண்டு போகலாம், மழை நீரில் அடித்துச் செல்லப்படலாம், முளைக்காமலேயே அழிந்து விடவும் வாய்ப்புண்டு.

இருப்பினும், நூற்றில் சில விதைகள் மட்டுமே உயிர் பிழைத்தாலும், அவை பல தலைமுறைகளுக்கு நிழல் தரும் என்ற நம்பிக்கையுடன் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டத்தின் ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் தொடர்ந்து பனை விதைகளை விதைத்து வருகிறார் தொரவலூரைச் சேர்ந்த எம்.எஸ். சம்பத்குமார்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் கிராமிய மக்கள் இயக்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த தன்னார்வ அமைப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, பனை மர வளர்ப்பு, நாட்டு மர இனங்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இந்த அமைப்பின் தன்னார்வலர்களுடன் இணைந்து சுமார் 5 லட்சம் பனை விதைகளை விதைத்தும், சுமார் 2 லட்சம் விதைகளை பொதுமக்களிடம் விநியோகித்தும் உள்ளார் சம்பத் குமார். அதோடு, ஒரு லட்சம் நாட்டு மரக் கன்றுகளை இலவசமாகவும் வழங்கியுள்ளார். தனிப்பட்ட ஆர்வமாகத் தொடங்கிய இந்தப் பணி, இன்று மக்கள் பங்களிப்புடன் கூடிய சுற்றுச்சூழல் இயக்கமாக வளர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

தொரவலூரைச் சேர்ந்த பாரம்பரிய விவசாயியான சம்பத்குமாரின் மனைவி தேவகி தொரவலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி ஆவார். அவரும், அவரது மகன் கார்த்திக்கும் இந்தப் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளனர். விவசாயம் வாழ்வாதாரமாக இருந்தாலும், சமூகப் பணியே அவரது வாழ்க்கையின் நோக்கமாக மாறியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது: எங்கள் குடும்பம் தொரவலூரைச் சேர்ந்தது. பள்ளி நாள்களிலிருந்தே மரம் நடுவதில் ஆர்வம் இருந்தது. நண்பர்களுடன் "வி ஆர் ஃபார் யு' என்ற குழுவை அமைத்து வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் மரக்கன்றுகளை நட்டோம். படிப்பு முடிந்தபின் அந்தக் குழு கலைந்தாலும், மரம் நடும் ஆர்வம் மட்டும் என்னைவிட்டு பிரியவில்லை.

இந்நிலையில் தொரவலூர் அரசுப் பள்ளிக்குச் சென்றது வாழ்க்கையில் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. பள்ளிக் கட்டடத்தின் கூரை சேதமடைந்திருந்தது. அதை என் சொந்த செலவில் சீரமைத்தேன். பின்னர் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதை அறிந்து, 3 தற்காலிக ஆசிரியர்களை நியமித்து 4 ஆண்டுகள் அவர்களின் ஊதியத்தை வழங்கினேன். மேலும், 5 பட்டியலின மாணவர்களின் தனியார் பள்ளிக் கட்டணத்தையும் ஏற்றுக்கொண்டேன் என்றார்.

பனை விதைகளை நடவு செய்யும் சம்பத்குமார், நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள்.

இந்த அனுபவம் கிராம மக்களுடன் அவரை நெருக்கமாக இணைத்ததுடன், மரம் நடும் ஆர்வத்தையும் மீண்டும் உயிர்ப்பித்தது. 2015 நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட கிராமிய மக்கள் இயக்கத்தின் முதல் முயற்சியாக திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் பனைமர வளர்ப்பே இயக்கத்தின் முக்கிய நோக்கமாக மாறியது.

உணவு, மருந்து, மண் அரிப்பு தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்களை பனை மரம் வழங்குகிறது. ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் பனை மரங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் டிசம்பர் வரை பனைப் பழங்களை சேகரித்து, ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து விதைகளை விதைத்து வருகிறோம். பசுமை தமிழ்நாடு இயக்கமும் இதற்கு ஊக்கமளிக்கிறது என்றார்.

இதுவரை விதைக்கப்பட்ட பனை விதைகளில் சுமார் 20 சதவீதம் மட்டுமே முளைத்துள்ளது. வறட்சி மற்றும் பராமரிப்பு சிரமங்களால் இழப்புகள் ஏற்படுகின்றன. இருப்பினும் விடா முயற்சியாக தொடர்ந்து பனை விதைகளை விதைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கிராமிய மக்கள் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாக தொரவலூர் குளக்கரையில் உருவாக்கப்பட்ட அடர் வனம் திகழ்கிறது. 25 சென்ட் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வனத்தில் 60 வகையான 2,500 நாட்டு மரக் கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன. முன்பு வெறிச்சோடியிருந்த பகுதி இன்று பசுமையான சிறு வனமாக மாறியுள்ளது. இந்தத் திட்டம் 2017 நவம்பர் 15-ஆம் தேதி அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் தொடங்கிவைக்கப்பட்டது.

பனை விதைகளை நடவு செய்யும் சம்பத்குமார், நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள்.

மரம் நடும் பணியோடு மட்டுமல்லாமல், ஏரிகள் மற்றும் குளங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், நீர்நிலைகளை மேம்படுத்துதல், நீர்வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளிலும் கிராமிய மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரைவாக செயல்படுத்தக் கோரி நடைபெற்ற மக்கள் போராட்டங்களிலும் சம்பத்குமார் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டார்.

பனை விதைகளை நடவு செய்யும் சம்பத்குமார், நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள்.

சம்பத்குமாரைப் பொறுத்தவரை வெற்றி என்பது எத்தனை விதைகள் விதைக்கப்பட்டன என்பதில் இல்லை; எத்தனை மரங்கள் உயிருடன் வளர்ந்தன என்பதில்தான் உள்ளது. அதனால்தான் 10 ஆண்டுகள் கடந்த பிறகும், தோளில் ஒரு மூட்டை பனை விதைகளை சுமந்தபடி அடுத்த விதை வேரூன்றி நாளைய தலைமுறைக்கு நிழல் தரும் பனை மரமாக வளரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கிராமக் குளங்களின் கரைகளை நோக்கி அவர் தொடர்ந்து பயணிக்கிறார்.

summary

Athikadavu Sampathkumar, who sowed more than 5 lakhs Palmyra palm seeds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments