ராமன் வழிபட்ட இறைவன்!
திருவாமாத்தூரில் அமைந்துள்ள முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் திருக்கோயில்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்புகளைக் கொண்டது விழுப்புரம் மாவட்டம், திருவாமாத்தூரில் அமைந்துள்ள முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் திருக்கோயில். பெண்ணை ஆற்றின் கிளையான பம்பை நதி தழுவிச்செல்லும் நடுநாட்டுத் தலம்.
இலங்கை செல்லும் வழியில் ராமபிரான் இங்கு இறைவனை வழிபட்டதாலேயே இவருக்கு "அபிராமேஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் தலபுராண மரபின்படி, பல முனிவர்களும் தெய்வங்களும் இத்தலத்தில் வழிபட்டு அருள் பெற்றதாகக் கூறப்படுகிறது.
முற்காலத்தில் கொம்புகள் வேண்டிப் பசுக்கள் (ஆ) இங்குத் தவம் இயற்றி வரம் பெற்றதால் "திரு+ஆ+மாத்தூர்' என்பது காலப்போக்கில் "திருவாமாத்தூர்' என மருவியது. இவ்வூருக்கு கோமாத்ரூபுரம், கோமதீஸ்வரம், கோமாதுபுரம் போன்ற பெயர்களும் உண்டு.
Advertisement
Advertisement
இத்தலத்தின் மீது சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் மொத்தம் ஐந்து தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளனர். இரட்டைப்புலவர்கள், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகளார் ஆகியோரும் இத்தலத்தைப் போற்றியுள்ளனர்.
பத்தாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரையிலான சோழ, விஜய நகர அரசர்களின் கல்வெட்டுகள் இக்கோயிலின் தொன்மைக்கு வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. மூலவர்அபிராமேஸ்வரர், அழகிய
நாதர், ஆண்டநாயகர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். அகழி அமைப்பிலான கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சுவாமி, சற்று இடப்புறம் சாய்ந்த சுயம்புத் திருமேனியாகக் காட்சியளிக்கிறார். இவரது திருமுடியின் மீது பசுவின் குளம்பு வடுவும், பால் சொரிந்த தழும்பும் இருப்பது தனிச்சிறப்பு. ராஜகோபுரத்தைக் கடந்ததும் பிரம்மாண்டமான மகா நந்தியும், நாலுகால் மண்டபக் குழியில் பாதாள நந்தியும் அமைந்துள்ளன. வறட்சிக் காலங்களில் மழை வேண்டி இந்தப் பாதாள நந்திக் குழியில் நீர் நிறைத்து வழிபடும் மரபு இங்குள்ளது.
அம்பாள் அழகியநாயகி என்ற முத்தாம்பிகை மேற்கு நோக்கித் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். சுவாமியும் அம்பாளும் எதிரெதிரே தரிசனம் தருவது இத்தலத்தின் சிறப்பம்சம். ஆதிசங்கரரால்
ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இச்சந்நிதியில், அன்னை நான்கு திருக்கரங்களுடன் அபயம் தந்து வீற்றிருக்கிறாள். இவளை மனமுருகி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அன்னையின் திருமார்பில் பாம்பின் வால் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இது அன்னையின் "யோகசக்தி'யை உணர்த்துகிறது.
உள்வாயிலில் சிவதுர்கையும், விஷ்ணு துர்கையும் தரிசனம் தருகின்றனர். அம்பாள் சந்நிதியின் வலப்புறம் வட்டப்பாறை சந்நிதி உள்ளது. இங்கு திருவட்டப்பாறை லிங்கேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
கோயில் வெளிப்பிரகாரத்தில் நுழைவதற்கு முன்பே திருமால் துயர் தீர்த்த விநாயகரும், தெற்குப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், சுந்தர விநாயகர், காட்சி கொடுத்த நாதர், சிவபூஜை விநாயகர், மும்மூர்த்திகள், பரிவாரங்களுடன் ராமர் ஆகியோர் அமைந்துள்ளனர்.
மேற்குப் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், அண்ணாமலையார், காசி விஸ்வநாதர், வாயு லிங்கம், சண்முகப் பெருமான், ஜேஷ்டாதேவி தரிசனம் தருகின்றனர். கோயிலில் பிருங்கி முனிவர் மூன்று கிளைகளுடன் கூடிய வன்னி மரமாக இருப்பதாக ஐதீகம். இதன் கீழ் வன்னி விநாயகர் வீற்றிருக்கிறார். வடக்கில் அம்மையப்பரும், வடகிழக்கில் ஈசானிய லிங்கேஸ்வரரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
கருவறைச் சுற்றின் உள்பிரகார நுழைவில் லட்சுமி கணபதி, சித்தி விநாயகர், பைரவர், சூரிய பகவான், சப்தகன்னியர் அருள்பாலிக்கின்றனர். மேலும் கிழக்கு நோக்கி சகஸ்ர லிங்கேஸ்வரர், சட்டைநாதர், சிவலிங்கம், சண்முகர், கஜலட்சுமி, லிங்கோத்பவர் ஆகியோரும், வடக்கு நோக்கி நான்முகன், துர்கை ஆகியோரும் எழுந்தருளி பக்தர்களுக்கு நல்லருள்புரிகின்றனர்.
முருகனடியார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் 1898}ஆம் ஆண்டு இத்தலத்தில் சமாதி அடைந்தார். அவரது சமாதி கோயிலும், ஆறுமுகப் பெருமான் சந்நிதியும் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி உள்ளன.
தரிசனத்துக்காக காலை 6.30 } 12.30; மாலை 4.30 } இரவு 8 மணிவரையும் திறந்திருக்கும் திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில், விழுப்புரம் } செஞ்சி சாலையில், விழுப்புரம் புறவழிச் சாலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
- முனைவர் எஸ்.பாலசுப்ரமணியன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.