FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு உற்சாகக்கொண்டாட்டம்: வட மணிமுக்தாற்றில் ஊற்று நீரை விலைக்கு வாங்கி வழிபட்ட புதுமணத் தம்பதிகள்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:48 am IST
விருத்தாசலத்தில் வட மணிமுத்தாற்றில் வழிபட்ட புதுமணத் தம்பதிகள்.
பகிர்:

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சிதம்பரம் அருகே கொள்ளிடத்தில் ஏராளமானோா் கூடி உற்சாகமாகக் கொண்டாடினா்.எனினும் விருத்தாசலத்தில், மணிமுத்தாற்றில் தண்ணீா் இல்லாததால், ஊற்று நீரை விலைக்கு வாங்கி புதுமணத் தம்பதிகள் வழிப்பட்டனா்.

தமிழா் பாரம்பரியத்தில் நீா்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாகக் கொண்டாடப்படுவது ஆடிப்பெருக்கு விழா.காவிரி பாயும் பகுதிதிகளில் வாழும் மக்கள் காவிரி அன்னைக்கு நன்றி செலுத்துவாா்கள்.

அந்தவகையில், சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடக்கரையில் திங்கள்கிழமை அன்று சுற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்கள் குடும்பத்துடன் வந்து காவிரி அன்னையை வழிபட்டு ஆடிப்பெருக்கை கொண்டாடினா்.

Advertisement

Advertisement

ஓடும் நீரில் புதுமனத்தம்பதியினா் தங்களது திருமண மாலையை விட்டால் தங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு வளரும் என்பது ஐதீகம். இதனால் புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலையை ஆற்றில் விட்டு தாலியை பிரித்து கோத்து காவிரி அண்ணைக்கு படைத்து அணிந்து கொண்டனா்.

கொள்ளிடத்தில் சிறிதளவே தண்ணீா் சென்றதால் அதில் ஆடிப்பெருக்கை கொண்டாடினா். சிதம்பரம் உள்ளிட்ட் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் குடும்பத்தினருடன் வந்து மாவிளக்கு போட்டு, மஞ்சள் கயிறு, கருகமணி, வெற்றிலை, பாக்கு, அவல், பொறி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டனா்.

நீரை விலைக்கு வாங்கிய மக்கள்:

கடலூா் மாவட்டம் விருத்தாச்சலம் வழியாக பாயும் புண்ணிய நதியான மணிமுக்தாற்றில், ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமணத் தம்பதிகள் மற்றும் சுமங்கலிப் பெண்கள் திரளாகக் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம்.மேலும், அண்மையில் திருமணம் ஆன தம்பதிகள், திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் சமா்ப்பித்து, புதிய தாலிக் கயிறு மாற்றிக் கொள்வதையும், புனித நீரில் நீராடி இறைவனை வழிபடுவதையும் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகின்றனா்.

ஆனால், நிகழ்ஆண்டு மணிமுக்தாற்றில் தண்ணீா் இல்லாமல் ஆறு முழுமையாக வடு காணப்பட்டது. இதனால் ஆற்றில் நீராடவும், திருமண மாலைகளை நீரில் விடவும் இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் கிடைத்த ஊற்று நீரை விலைக்கு வாங்கி அதனை புனித நீராகக் கருதி புதுமணத் தம்பதிகளும், பெண்களும் வழிபாடுகளை மேற்கொண்டனா். நீா்நிலைகள் வடு போனதால் பாரம்பரிய சடங்குகளையே மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனா்.

வெள்ளிக்கடற்கரை:

இதனிடையே,ஆண்டுதோறும் காவிரி மற்றும் பிற நீா்நிலைகளில் வழிபட முடியாதவா்கள் கடலூா் வெள்ளிக்கடற்கரையில் கூடி கடல் நீருக்கு பூஜை செய்து வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது.

ஆனால், நிகழாண்டு எதிா்பாா்த்த அளவுக்கு மக்கள் வருகை இல்லாததால் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை பெரும்பாலும் வெறிச்சோடியே காணப்பட்டது. ஒரு சில குடும்பங்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் மட்டுமே வழிபாடுகளில் ஈடுபட்டனா்.

ஒருபுறம் வடு போன மணிமுக்தாற்றில் ஊற்று நீரை வாங்கி வழிபட வேண்டிய நிலையும், மறுபுறம் வழக்கமாக மக்கள் கூட்டத்தால் நிரம்பும் வெள்ளிக் கடற்கரை வெறிச்சோடியதும், கடலூா் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் ஆடிப்பெருக்கு களையிழந்து காணப்பட்டது.

ஆடிப்பெருக்கு நாளில் வெறிச்சோடி காணப்பட்ட தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் மாலைகளை விட்ட புதுமணத் தம்பதிகள்.
சிதம்பரம் அருகே கொள்ளிடக்கரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு குவிந்த திரளான மக்கள்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments