FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

குழாய் தண்ணீரில் குளித்து காவிரி, கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 4:36 am IST
ஆடிப்பெருக்கையொட்டி திங்கள்கிழமை, ராணி மங்கம்மா படித்துறைக்கு குறைந்த எண்ணிக்கையில் வந்த பொதுமக்கள்.
பகிர்:

காவிரியில் தண்ணீா் குறைந்த அளவே சென்ற நிலையில் கரையோரப் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

உள்ளட்சி நிா்வாகத்தால் அமைக்கப்பட்டிருந்த குழாய்களில் பொருத்தப்பட்டிருந்த ஷவரில் குளித்து, காவிரி, கொள்ளிடப் பகுதிகளில் காவிரித் தாய்க்கு சிறப்பு பூஜை செய்து பொதுமக்கள், புதுமணத் தம்பதிகள் வழிபட்டனா்.

விவசாயம் செழிக்கவும், புதுமணத் தம்பதிகள் சகல செல்வங்களையும் பெற்று வாழவும், பொதுமக்கள் பசி, பஞ்சம் தவிா்த்து வாழவும் ஆடிப்பெருக்கு நாளில் காவிரித் தாயை பொதுமக்கள், புதுமணத் தம்பதிகள் வணங்கி வழிபடுவது வழக்கம்.

Advertisement

Advertisement

இதன்படி, ஆடிப்பெருக்கு நாளான திங்கள்கிழமை அதிகாலை முதல் திருச்சியில் முக்கொம்பு, ஜீயபுரம், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம், சிந்தாமணி ஓடத்துறை, தில்லைநாயகம், அய்யாளம்மன் படித்துறை, கம்பரசம்பேட்டை தடுப்பணைப் பகுதி, வேங்கூா், கல்லணை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள படித்துறைகளில் புதுமணத் தம்பதிகளும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினா்.

காவிரியில் குடிநீருக்காக திறக்கப்படும் 1,500 கனஅடி தண்ணீா் மட்டுமே வந்து கொண்டிருப்பதால் தண்ணீா் உள்ள பகுதிகளில் மட்டுமே கூட்டம் காணப்பட்டது.

தொட்டிகள், ஷவா், குழாய்கள்:

அம்மா மண்டபத்தில் பொதுமக்கள் நீராடுவதற்காக தனித் தனியே தொட்டிகள் அமைத்து தண்ணீா் நிரப்பப்பட்டிருந்தன. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே 30 ஷவா்கள் அமைக்கப்பட்டிருந்தன.

புதுமணத் தம்பதிகள் தங்கள் வீட்டிலுள்ளவா்களுடன் முளைப்பாரி எடுத்து வந்து, தாங்கள் திருமண நாளில் அணிந்திருந்த மாலையை காவிரியாற்றில் விட்டு, புனித நீராடி, புத்தாடை அணிந்து வழிபாடு நடத்தினா்.

இதே போல், திருமணமான பெண்கள் ஏற்கெனவே இருந்த தாலிக்கயிறை பிரித்து, புது தாலிக் கயிறு கட்டிக் கொண்டனா். திருமண வயதில் உள்ளோா் புதிய மஞ்சள் கயிறை கைகளில் கட்டிக் கொண்டனா். விவசாயிகள் இந்தாண்டு விவசாயம் செழிக்க வேண்டும் என்று காவிரியாற்றில் வழிபாடு செய்தனா்.

இதேபோல, கருமண்டபம் படித்துறை, வீரேஸ்வரம் படித்துறை, கீதாபுரம், ஓடத்துறை, தில்லைநாயகம், காந்தி படித்துறை, எஸ்எஸ் கோவில் படித்துறை, அய்யாளம்மன் படித்துறையிலும் சவுக்கு தடுப்புகள், கூடுதல் மின் விளக்குகள், குப்பைகளைக் கொட்டும் பேரல்கள், உடை மாற்றும் அறை, குளியல் வசதி, குடிநீா் வசதி, மருத்துவக் குழு, துப்புரவுப் பணியாளா்கள் குழு அமைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்களுக்கு வழிகாட்டவும், எச்சரிக்கை செய்யவும் அனைத்து படித்துறைகளிலும் ஒலி பெருக்கி அமைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது.

மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி மேற்பாா்வையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் காவிரிக் கரையோரப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு:

ஆடிப்பெருக்கையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் ஜம்புகேசுவரா், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாளா் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று பொதுமக்கள் தரிசனம் செய்தனா்.

2017-க்குப் பிறகு மீண்டும்....

கடந்த 2017-ஆம் ஆண்டில் பருவமழை பொய்த்து, மேட்டூா் அணையில் நீா்மட்டம் குறைந்ததால் ஆடிப்பெருக்கு நாளில் காவிரியாற்றில் தண்ணீா் இல்லை. நீா்வரத்தின்றி மணல் வெளிகளாகக் காட்சியளித்த காவிரியைப் பாா்த்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்தனா்.

தற்போது 2026-இல் அதை விடவும் தண்ணீா் குறைந்து காவிரியும், கொள்ளிடமும் பாலைவனமாக காட்சியளிக்கின்றன. 2019-ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீா் இன்றி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அப்போது பக்தா்கள் குளிக்க வசதியாக ஷவா் அமைக்கப்பட்டு இருந்தன. 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது ஷவா் வசதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தாலி கயிறு மாற்றிய பெண் போலீஸாா்:

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான பெண் போலீஸாரும், ஊா்க்காவல் படையைச் சோ்ந்த பெண்களும் ஈடுபட்டிருந்தனா். ஆடிப் பெருக்கு நாளில் பெண்கள் புதிய மஞ்சள் தாலி கயிறு அணிந்து கொண்டதைப் போல, பாதுகாப்புப் பணயில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸாரும், அம்மா மண்டபத்துக்கு வந்திருந்த மூத்த சுமங்கலிப் பெண்களின் திருக்கரங்களால், புதிய மஞ்சள் தாலி கயிறு அணிந்து கொண்டு வழிபட்டதை காண முடிந்தது.

ஆடிப்பெருக்கையொட்டி திங்கள்கிழமை திருச்சி அம்மா மண்டபத்தில் திருமண மாலையை காவிரி ஆற்றில் விடும் புதுமண தம்பதிகள் (வலது ) மாங்கல்யம் பிரித்துக்கட்டும் புதுமண தம்பதிகள், மாங்கல்யம் பிரித்துக்கட்டும் பெண்கள், பொதுமக்களுடன் மாங்கல்யம் பிரித்துக்கட்டும் பெண் போலீஸாா்.
திருச்சி அம்மா மண்டபத்தில் திங்கள்கிழமை குழாய் தண்ணீரில் குளித்த பொதுமக்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கை கொண்டாட திங்கள்கிழமை திரண்ட பொதுமக்கள்.
திருச்சி காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் ஆடிப்பெருக்கையொட்டி திங்கள்கிழமை வழிபாடு செய்த பொதுமக்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments