அபூர்வமான வேணுகோபாலன்
கன்னட கல்வெட்டுடன் மரகதவல்லி தாயார் அருள்பாலிக்கும் பேளூர் கோயில்..
புனித நதியாகப் போற்றப்படும் வசிஷ்ட நதியின் தென்கரையில், சேலத்தில் உள்ள பேளூரில் ஆயிரமாண்டுகள் பழைமையான, அபூர்வமான அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது.
பாமா, ருக்குமணி சமேதராக அருள்பாலித்து வரும் மூலவருக்குத் தென் மேற்குப் பகுதியில் மரகதவல்லித் தாயாரும், பின்புறம் பூங்கோதை அம்மனும், வடமேற்குப் பகுதியில் ஆண்டாளும், மூலவர் கருவறை மண்டபத்தில் வட கிழக்குப் புறத்தில் ஆழ்வார்களும் அருள்கின்றனர். முன்புறம் கருடாழ்வார், ஆஞ்சநேயர் காட்சியளிக்கின்றனர். முன்புற தீபத்தூணில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளியுள்ளார்.
வசிஷ்ட நதிக்கரையில் வடபுறத்தில் சிறிய அளவில் அமைந்துள்ள நிலக்கொண்ட பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமி கோயிலுக்கு முன் தோன்றியதாக நம்பப்படுகிறது. இக்கோயிலின் வாசற்படியில் கன்னட மொழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
Advertisement
Advertisement
இதில் "தாத்தய்ய ஸதாஸிவா' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. "தாத்தய்ய' என்றால், ஆன்மிக குரு அல்லது தெய்வம் என்றும், "ஸதாஸிவா' என்றால் "எப்போதும் தொண்டு' என்றும் பொருள்படுமெனத் தெரிய வந்துள்ளது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன்னடம் மற்றும் தெலுங்குப் பேசும் மக்கள் வசிக்கும் இடங்களில் இத்
தகைய கல்வெட்டுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
சேலத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள பேளூருக்கு நேரடியாக பேருந்து வசதி உள்ளது.
- பெ.பெரியார் மன்னன்