கர்நாடக எஸ்ஐஆர்! முதல்வரின் தாயார், சிவ ராஜ்குமார் உள்ளிட்ட பலருக்கும் நோட்டீஸ்!
கர்நாடக எஸ்ஐஆர் பணிகளைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய நபர்களின் விவரங்களில் முரண்பாடு எழுந்துள்ளதாக நோட்டீஸ்...
கர்நாடகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளைத் தொடர்ந்து, தனி விவரங்களில் முரண்பாடு எழுந்துள்ளதாக முதல்வர் டி.கே. சிவகுமாரின் தாயார் மற்றும் நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்) தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆக. 17 ஆம் தேதி வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் அக்.19 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இதில், வாக்காளர் வரைவுப் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் மற்றும் தகவல்களில் தவறு இருப்பவர்கள் இறுதிப் பட்டியல் வெளியாவதற்கு தங்களின் விவரங்களைத் திருத்தி மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சிவகுமாரின் தாயார் கௌரம்மா, பிரபல நடிகர் சிவராஜ்குமார், இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோரின் விவரங்களில் முரண்பாடு உள்ளதாக, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
கர்நாடகத்தின் கனகபுரா சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளரான கௌரம்மாவின் (முதல்வர் சிவகுமாரின் தாயார்) பெயரில் முரண்பாடு எழுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நிலேகனி அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களும், கன்னட நடிகர் சிவ ராஜ்குமாரின் பெயரும் கடந்த 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, வாக்காளர் பட்டியலில் பாரத ரத்னா விருது பெற்ற 92 வயது விஞ்ஞானி சி.என்.ஆர். ராவின் பெயரில் முரண்பாடு இருப்பதாகவும், இதுபற்றி அவர் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டுமெனவும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இருப்பினும், மாநிலத்தின் முக்கிய நபர்கள் மற்றும் விஐபி-களின் விவரங்கள் சரிபார்ப்பு குறித்து அதிகாரிகள் அவர்களை நேரில் சந்தித்து அதற்கான பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Following the SIR in Karnataka, notices have been issued to CM D.K. Shivakumar's mother and actor Shiva Rajkumar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.