சகல ஐஸ்வர்யமும் பெற...
அகிலத்தில் அதர்மம் பெருகியபோது, தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க மகா விஷ்ணு எடுத்தது கிருஷ்ண அவதாரம்.
அகிலத்தில் அதர்மம் பெருகியபோது, தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க மகா விஷ்ணு எடுத்தது கிருஷ்ண அவதாரம். குருஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்து, வாழ்வின் தத்துவத்தையும், கர்ம யோகத்தையும் உலகுக்கு வழங்கிய மகா புருஷர் பகவான் கிருஷ்ணர். நம் நாட்டில் தொன்று தொட்டு கிருஷ்ண வழிபாடு இருந்து வருவதோடு, அவருக்குக் கோயில்களும் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் பகவான் கிருஷ்ணருக்கு அமைந்த சிறப்புமிக்கக் கோயில்களுள் ஒன்று, சென்னை அருகே சோழிங்கநல்லூர் பகுதியில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் (இ.சி.ஆர்.) அக்கரை என்ற இடத்தில் உள்ள "இஸ்கான் கோயில்' என்று அழைக்கப்படும் ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணர் கோயில்.
கிருஷ்ணா பக்தி இயக்கத்தைப் பரப்ப அபய் சரண் பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல ஸ்ரீபிரபு பாதரால் நிறுவப்பட்ட அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) அமைப்புக்கு உலகம் முழுவதும் பல கோயில்கள் உள்ளன. அதில் ஒன்றான சென்னை இ.சி.ஆர். இஸ்கான் கோயில், 2012} ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
Advertisement
Advertisement
1.5 ஏக்கர் பரப்பளவில் ஐந்து அடுக்குகளைக் கொண்ட இந்தக் கோயிலில், அடித்தளத்தில் பக்தர்களுக்கு பிரசாதம், உணவு வழங்குவதற்கான மண்டபமும், தரைத்தளத்தில் கலாசார, ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அரங்கமும், முதல் தளத்தில் 7000 சதுர அடியில் பிரார்த்தனை மண்டபமும் அமைந்துள்ளன.
நுழைவுவாயிலில் இரு கல் யானைகள் நிற்கின்றன. இவை பல்லவர் கலைப்பாணியில் செதுக்கப்பட்டுள்ளன. யானைகளுக்குப் பின்னால், தரையில் பூமண்டலம் வரையப்பட்டுள்ளது. படிக்கட்டுகளில் அமைந்துள்ள கோயில் புருஷரை அலங்கரிக்கும் சக்கரங்கள், எட்டுத் திசைகளையும் ஆளும் இறைவனின் அவதாரங்களைச் சித்திரிக்கும் கவர்ச்சிகரமான கண்ணாடி ஓவியங்கள் உள்ளிட்ட பல சிறப்புகள் கோயிலின் அழகை மேலும் சிறப்பிக்கின்றன. நுழைவுப் பகுதியின் முகப்பை அழகுபடுத்தும் வகையில், கன்றுக்குப் பால் கொடுக்கும் பசுவின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, இமயமலைப் பளிங்கு குவார்ட்ஸ் படிகங்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான சரவிளக்கு திகழ்கிறது. இந்த சரவிளக்கு ஆன்மிக மாற்றத்தின் சக்திவாய்ந்த அடையாளமாகக் கருதப்படுகிறது.
பிரதான மண்டபத்தின் மையப் பீடத்தில் ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணர்; இருபுறமும் அவர்களது தோழியர் லலிதா, விசாகையுடன் தரிசனம் தருகிறார். இடப்புற பீடத்தில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவும், ஸ்ரீ நித்யானந்த பிரபுவும். வலப்புற பீடத்தில் ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலதேவர், ஸ்ரீ சுபத்திரை. மண்டபச் சுவர்களில் உள்ள ஓவியங்கள் கிருஷ்ணரின் லீலைகளைச் சொல்கின்றன.
"ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணைந்த தத்துவமே ராதாகிருஷ்ணன். இவர்களை வழிபட்டால் கணவன் } மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும்; குடும்ப ஒற்றுமை பலப்படும்; நோய்களும், கஷ்டங்களும் விலகும்; மணப்பேறு, மகப்பேறு அமையும்; சகல ஐஸ்வர்யமும் கிட்டும்' என்பது நம்பிக்கை.
கோயிலுக்கு வருபவர்களுக்கு "ஜப நடை' என்ற பயிற்சி உண்டு. 108 படிகளில் நடந்தபடி மகாமந்திரத்தை ஜபிக்க வழிகாட்டப்படுகிறது. அதை நாள்தோறும் தொடரும் பழக்கமாக மாற்றிக்கொள்ளுமாறு அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பகவத் கீதையின் அடிப்படைகளை ஏழு வாரங்களில், தலா இரண்டு மணி நேரம் கொண்ட ஏழு அமர்வுகளாகக் கற்பிக்கும் வகுப்பு இங்கே நடக்கிறது. 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரந்தோறும் பக்த பிரகலாத பள்ளி நடக்கிறது. கீதை சுலோகங்கள், மந்திர தியானம், புராணக் கதைகள், பஜனை, விளையாட்டு, பாடல்களுடன் முடிவில் பிரசாதமும் வழங்கப்படுகிறது.
நூல்களை அறிவியல் நோக்கில் அணுக விரும்புவோருக்கு இஸ்கான் இளையோர் சேவை மாதாந்திரக் கூடுகைகளையும் ஆண்டுக் கூடுகைகளையும் நடத்துகிறது.
பெண்களுக்கான இஸ்கான் சென்னை வைஷ்ணவி சங்கத்தில் சுலோகப் பாராயணம், பஜனை, இல்லறம், குழந்தை வளர்ப்பு ஆகியன இடம்பெறுகின்றன.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பெருங்கூடுகை நிகழ்கிறது. பஜனையுடன் தொடங்கி, பகவத் கீதை சொற்பொழிவு, ஆரத்தி, கீர்த்தனம், நடனம் என நீண்டு, இறுதியில் வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
வளாகத்தில் நூல் அரங்குகள் உள்ளன. பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றுடன், பக்தி யோகத்தை விளக்கும் ஸ்ரீலஸ்ரீ பிரபு பாதரின் சொற்பொழிவுகள், உரையாடல்கள் அடங்கிய சிறு நூல்களும், குழந்தைகளுக்கான கதை நூல்களும் முக்கிய மொழிகள் அனைத்திலும் கிடைக்கின்றன.
கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ ஜெகநாத் ரத யாத்திரை, புஷ்ப அபிஷேகம், கெüரா பூர்ணிமா, ஜூலன் யாத்ரா, பலராம பூர்ணிமா, ராதா அஷ்டமி, ராம நவமணி, நரசிம்ம சதுர்த்தசி, ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதர் வைசிய பூஜை உள்ளிட்ட விழாக்கள் இங்கு முக்கியமானவை. ஆண்டு விழாக்கள் சந்திர நாள்காட்டியைப் பின்பற்றுவதால், ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு மாதங்களிலும் தேதிகளிலும் வருகின்றன.
இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் அதிகாலை 4.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கி, நள்ளிரவு 12 மணிக்கு மகா ஆரத்தி மற்றும் பிரசாத விநியோகத்துடன் நிறைவு பெறுகிறது. முக்கிய நிகழ்வுகளாக காலை 8 மணிக்கு தரிசன ஆரத்தி, குருபூஜை, காலை 10 மணிக்கு அபிஷேக சேவை, கீர்த்தன மேளா, இரவு 10.20 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகின்றன. சனிக்கிழமை (செப்டம்பர் 5) நடைபெறும் ஸ்ரீல ஸ்ரீபிரபு பாதரின் வியாஸ பூஜை அதிகாலை 4.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கி, நண்பகல் 12.30 மணிவரை பல்வேறு உற்சவங்களுடன் நடைபெறுகிறது.
தரிசனத்துக்காக காலை 7.30 மணிமுதல் மதியம் 1 மணிவரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
- மு.வெங்கடேசன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.