திருப்பதிக்குச் செல்ல முடியாத பக்தர்களுக்கு அரிய வாய்ப்பு!
திருப்பதி பெருமாள் வடிவில் கிருஷ்ணர்...
ஆவணி மாத ரோகிணி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைதான். திருமாலின் அவதாரமான கண்ணன் பிறந்த தினமாக இதனை கொண்டாடி மகிழ்கிறோம்.
தசாவதாரங்களில் கிருஷ்ணாவதாரம் தனிச் சிறப்புடையது. அத்தகு சிறப்புமிக்க கிருஷ்ணரின் அம்சமாகவே அவதரித்த அருளாளர் ஒருவர் மகா ஞானியாக காவிரி தேசத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பதும், அவருக்காகவே கிருஷ்ணர் சீனிவாசப்பெருமாள் ரூபத்தில் எழுந்தருளி கோயில் கொண்டிருக்கிறார் என்பதும் பலரும் அறியாத செய்தி.
அது யார்? அந்த ஊர் எங்கிருக்கிறது?
Advertisement
Advertisement
தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்துக்கு அருகிலுள்ள சேய்ஞலூர் என்பது சண்டிகேஸ்வரர் அவதரித்த திருத்தலம். சங்கநல்லூர் எனப்பட்ட இவ்வூர் இன்றைய நாள்களில் சேங்கனூர் என்று வழங்கப்படுகிறது.
இத்தலத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் யாமுனாச்சாரியார் - நாச்சியாரம்மாள் தம்பதியருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. கிருஷ்ணரின் அருளால் அருந்தவத்துக்கு வரமாகக் கிடைத்த குழந்தை. கிருஷ்ண ஜெயந்தி அன்று பிறந்ததால் அக்குழந்தைக்கு "கிருஷ்ண பாதர்' என்று பெயரிட்டனர். பெயருக்கேற்றவாறு கிருஷ்ண பக்தியில் தனித்து விளங்கிய அக்குழந்தை வளர வளர அபாரமான ஞானமும் கூடவே வளர்ந்தது.
சாத்திரநூல்களிலும், வைணவ பக்தி இலக்கியங்களிலும் அபார ஞானத்துடன் திகழ்ந்த கிருஷ்ணபாதரை வியாக்கியான சக்கரவர்த்தி என்றும், அபயப்ரயாசர் என்றும் போற்றினர். ஞான ஆசிரியர்களை ஆச்சான் என்று குறிப்பிடுவது வழமை. அற்புதமான ஞானத்தினை உடையவராகத் திகழ்ந்தமையால் இவரை பெரியவாச்சான் பிள்ளை என்றே அழைத்தனர். இவருக்கான அவதார ரகசியம் என்றும் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள்.
ஒரு சமயம் திருக்கண்ணமங்கையில் கோயில் கொண்டிருக்கும் கண்ணபிரான் திருமொழியின் விளக்கத்தினை அறிந்து மகிழ ஆசைப்பட்டாராம். பிற்பாடு அதனை இயற்றிய திருமங்கையாழ்வாரானவர் திருக்கலிக்கன்றிதாசர் என்கிற திருநாமத்துடன் சோழநாட்டில் மீண்டும் அவதரித்தார். முன்பு சொன்ன வண்ணம் அங்கேயே கிருஷ்ணரும் அவதரித்தாராம். அவர்தான் இந்த கிருஷ்ண பாதர் எனப்படும் பெரியவாச்சான் பிள்ளை. இவரே நம்பிள்ளையைக் குருவாக ஏற்று மொழி நூல்களைக் கற்றறிந்து, ஏராளமான திவ்விய பிரபந்த செய்யுள் நுட்பங்களை உணர்ந்து மகிழ்ந்ததுடன் அவற்றை உலகுக்கும் வெளிப்படுத்தியதாக வரலாறு.
எல்லாம் வல்ல பரம்பொருளே சீடனாக இருந்து வைணவத் தமிழ் வளர்த்த புண்ணிய தலம் இந்த சேங்கனூர்.
பிறந்தது முதற்கொண்டே கிருஷ்ண பக்தியிலேயே திளைத்திருந்த பெரியவாச்சான் பிள்ளைக்கு அவரது பெற்றோர் உரிய காலத்தில் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், அவரோ மனைவியுடன் திருமலை யாத்திரைக்குப் புறப்பட்டார். திருமலை சீனிவாசப் பெருமாளைச் சரணடைந்தவர், அவரைப் பிரிய மனமில்லாது அங்கேயே தங்கிவிட்டார். இதனால் பெருமாளே ஒரு பிரமச்சாரி வடிவத்தில் தோன்றி, தம்முடைய வடிவமான ஒரு சாளக்கிராமத்தினை அளித்து, ஊருக்குத் திரும்பச் சொல்லிப் பணிக்கிறார். வழியிடையில், கொள்ளிடக்கரையில் குளிக்கும்போது அந்தச் சாளக்கிராமம் மறைந்துவிடுகிறது.
கலங்கி நின்ற ஆச்சார்யார் கனவில் தோன்றிய கிருஷ்ணர், தாம் மணலிடையில் அர்ச்சாவதாரமாகப் புதைந்து கிடப்பதாக அருளுகிறார். அப்படித் தேடியபோது மணலுக்குள் இருந்து அழகியதொரு பெருமாளின் முழு உருவத் திருமேனி கிடைக்கிறது. ஊர் மக்களின் உதவியுடன் அதைக்கொண்டு வந்து சேங்கனூரில் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு.
பெரியவாச்சான் பிள்ளையால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சீனிவாசப்பெருமாள்தான் இப்பொழுது கோயிலில் நாம் தரிசிப்பது. மிகப் பெரிய அழகிய கல் திருமேனி. அச்சு அசலாக திருப்பதி பெருமாள் போலவே காட்சியளிப்பது தனிச்சிறப்பு.
ஸ்ரீதேவி, பூதேவியரை தம்முடைய திருமார்பில் திருவாபரணமாக தரித்துள்ளார் என்பது தனிச்சிறப்பு. சர்வ அலங்காரதாரியாக நின்று சேவை சாதிக்கும் கோலத்தில் இவரை தரிசிப்பதே பெரும் பரவசம்.
அர்த்த மண்டபத்தில் பக்கவாட்டு திண்ணையிலேயே உற்சவர் திருமேனியையும் தாயாருடன் தரிசிக்கலாம். அருகிலேயே உள்ள ஆனந்த மயமான கிருஷ்ணர், பாமா - ருக்மணி தாயார் திருமேனிகள் வெகு அழகானவை.
கிருஷ்ணரே திருப்பதி பெருமாள் வடிவத்தில் இங்கு உறைந்திருப்பதாகக் கருதுகிறார்கள். தனித்த தாயார் சன்னதி கிடையாது.
ஆரவாரமில்லாத அமைதியான சூழலில் சற்று உள்ளடங்கி அமைந்துள்ள கோயில். திருப்பதி பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள், அவரின் பிரதி பிம்பமான இவரை தரிசிக்கலாம்.
தரிசனத்துக்காக காலை 7 முதல் 10 மணிவரையும், மாலை 5 மணிமுதல் இரவு 7 மணிவரையும் திறந்திருக்கும் இந்தக் கோயில், கும்பகோணத்திலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் திருப்பனந்தாளுக்கு அருகில் சேங்கனூரில் அமைந்துள்ளது.
- சுஜாதா மாலி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.