பீம்ஸ்டெக் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதி
பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்திலும், பிற முக்கிய துறைகளிலும், பீம்ஸ்டெக் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டிருப்பதாக பிரதமர்
காத்மாண்டு: பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்திலும், பிற முக்கிய துறைகளிலும், பீம்ஸ்டெக் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் பீம்ஸ்டெக் அமைப்பின் 4ஆவது உச்சி மாநாடு 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: பீம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையே வர்த்தக தொடர்பு, பொருளாதார தொடர்பு, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் தொடர்பு ஆகியவற்றிலும், பரஸ்பரம் மக்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்துவதிலும் மிகப்பெரிய வாய்ப்புள்ளது. பிராந்திய தொடர்பை அதிகரிக்கும் வகையில், பீம்ஸ்டெக் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியா கடைப்பிடித்து வரும் அண்டை நாடுகளுக்கு முதலில் முக்கியத்துவம், கிழக்கத்திய நாடுகளுடன் நட்புறவு என்ற கொள்கைகளின் சந்திப்பு மையமாக இப்பிராந்தியம் உருவெடுத்துள்ளது. பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றில் வங்காள விரிகுடாவுக்கு நமது நாடுகள் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் போன்ற எல்லைக் கடந்த குற்றங்களால், இப்பிராந்தியத்தில் பாதிக்கப்படாத நாடுகளே இல்லை. எனவே போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான திட்டத்தை வகுப்பது குறித்து ஆலோசிக்க பீம்ஸ்டெக் மாநாட்டை நடத்துவதற்கு இந்தியா தயாராக உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது குறிப்பிட்ட ஒரு நாடு சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. ஆதலால், இந்த பிரச்னையில் பீம்ஸ்டெக் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
இமயமலை மற்றும் வங்காள விரிகுடா கடல் ஆகியவற்றுக்கு மத்தியில் அமைந்துள்ள பீம்ஸ்டெக் நாடுகள், வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றன. ஆதலால், இந்நாடுகள் தங்களுக்கு இடையே மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரித்து கொள்ள வேண்டும். தனியாக எந்தவொரு நாடும், அமைதி, வளர்ச்சி, அபிவிருத்தியை நோக்கி செல்ல முடியாது. இதை கவனத்தில் கொண்டு, பீம்ஸ்டெக் நாடுகள் தங்களுக்கு இடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பீம்ஸ்டெக் நாடுகளுடன் ராஜ்ஜீய தொடர்புகளை மட்டும் இந்தியா கொண்டிருக்கவில்லை. இந்நாடுகளுடன் கலாசாரம், வரலாறு, கலை, மொழி, நாகரிகம், உணவு வழக்கம் ஆகியவற்றில் வலுவான தொடர்பை இந்தியா கொண்டுள்ளது. பீம்ஸ்டெக் நாடுகளின் மக்கள் பயனடையும் வகையில், விவசாய ஆராய்ச்சி மற்றும் ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான மாநாடுகளை நடத்துவதற்கு இந்தியா தயாராக இருக்கிறது. வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உள்ள கலை, கலாசாரம் மற்றும் பிற துறைகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக நாளந்தா பல்கலைக்கழகத்தில் பிரத்யேக மையத்தை இந்தியா ஏற்படுத்தவுள்ளது.
வரும் 2020ஆம் ஆண்டில் சர்வதேச புத்தமத மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் பீம்ஸ்டெக் நாடுகள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். டிஜிட்டல் தொடர்பு துறையில் இருக்கும் தனது அனுபவத்தை இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா உறுதிபூண்டிருக்கிறது. இந்தியாவில் அடுத்த மாதம் பீம்ஸ்டெக் நாடுகள் கூட்டாக ராணுவ ஒத்திகை நடத்தவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் பிரதமர் மோடி.
நேபாள பிரதமர் ஒலி பேசுகையில், "பீம்ஸ்டெக் அமைப்பானது சார்க் அமைப்பின் கிளை அமைப்பு கிடையாது; இரண்டு அமைப்பும் பரஸ்பரம் பிற அமைப்பால் பயனடைய முடியும்' என்றார்.
சிறீசேனா, ஷேக் ஹசீனாவுடன் சந்திப்பு: மாநாட்டின் இடையே இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவும், பிரதமர் மோடியும் தனியே சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறீசேனாவிடம், இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியா தயாராய் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் விஜய் கோகலே கூறுகையில், "இலங்கையில் இந்தியா செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில், இலங்கைக்கு தேவையான உதவியை அளிக்க இந்தியா உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்' என்றார்.
பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் தனியே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொருளாதார, கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
நேபாள அதிபருடன் சந்திப்பு: இதேபோல், பிரதமர் மோடி மற்றும் மாநாட்டில் கலந்து கொண்ட பீம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் ஆகியோர் நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரியை கூட்டாக நேரில் சென்று சந்தித்தனர்.
பீம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான், நேபாளம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. மொத்த உலக மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர், இந்நாடுகளில்தான் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.