சிரியாவில் இருக்கும் படைகளை வாபஸ் பெற தொடங்கியது அமெரிக்கா
சிரியாவில் இருக்கும் தங்கள் நாட்டுப் படையினரை அமெரிக்கா வாபஸ் பெறத் தொடங்கியுள்ளது.
சிரியாவில் இருக்கும் தங்கள் நாட்டுப் படையினரை அமெரிக்கா வாபஸ் பெறத் தொடங்கியுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆஸாதுக்கு ஆதரவான படையினர், ஐ.எஸ். பயங்கரவாதிகள் இடையே நடைபெற்று வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இந்த உள்நாட்டுச் சண்டையில், குர்து இனப் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் 2,000 வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுட்டுரையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், சிரியாவுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்காக மட்டுமே, அமெரிக்க படையினரை அனுப்பினேன்.
அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளை அமெரிக்கா தோற்கடித்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் இவ்வாறு பதிவுகளை வெளியிட்ட பிறகு, சிரியாவில் இருக்கும் படைகளை வாபஸ் பெறும் பணி தொடங்கப்பட்டு விட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, ஐஎஸ் அமைப்பு சக்திவாய்ந்த, அபாயகரமான பயங்கரவாத அமைப்பாக திகழ்ந்தது. அந்த அமைப்பை அமெரிக்கா தற்போது தோற்கடித்து விட்டது. சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக கிடைத்துள்ள இந்த வெற்றிகளைக் கொண்டு, பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் உலகளாவிய நடவடிக்கை அல்லது பிரசாரம் முடிவுக்கு வந்து விட்டதாக கருதக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராப் மேனிங்கிடம் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில், அப்பிராந்தியத்தில் இப்போது வரையிலும் அமெரிக்கா, பிற நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது என்றார்.
அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், டிரம்ப் எதிர்பாராத முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், இது மிகவும் மோசமான முடிவு என்று டிரம்ப் நிர்வாகத்தை எச்சரித்துள்ளனர்.
சிரியாவில் குர்து போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்க படையினர் சண்டையிட்டு வந்தனர்.
இந்த குர்து இன போராளிகளை துருக்கி நாடு, பயங்கரவாதிகள் எனத் தெரிவித்து வருகிறது. குர்து போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப் போவதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சிரியாவில் இருக்கும் அமெரிக்க படையினர் வாபஸ் பெறத் தொடங்கியிருப்பது குர்து போராளிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.