மும்பை தாக்குதல் குறித்து கருத்து: நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ்
மும்பைத் தாக்குதல் சம்பவம் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக நடவடிக்கை எடுக்கக்கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில்,
மும்பைத் தாக்குதல் சம்பவம் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக நடவடிக்கை எடுக்கக்கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பனாமா ஆவண கசிவு விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப்பை தகுதிநீக்கம் செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், டான் பத்திரிகைக்கு கடந்த மே மாதம் அளித்த பேட்டியில், மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று நவாஸ் ஷெரீஃப் கூறியிருந்தார்.
மும்பைத் தாக்குதலுக்கும் தங்கள் நாட்டுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், நவாஸ் ஷெரீஃப் இவ்வாறு பேட்டியளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மும்பைத் தாக்குதல் தொடர்பான கருத்துகளுக்காக நவாஸ் ஷெரீஃப் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் அசார் சித்திகி என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார். அதில் அவர், பாகிஸ்தானின் பிரதமராக 3 முறை பதவி வகித்துள்ள நவாஸ் ஷெரீஃப், மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் நாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்துகளை பாகிஸ்தானின் எதிரிகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. அவரது கருத்துகள் குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூடி ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, பிரதமர் சாஹித் கான் அப்பாஸி, நவாஸை சந்தித்து, அவரது கருத்துக்கு ராணுவம் கவலை தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டார். பிரதமர் அப்பாஸியின் நடவடிக்கை, அவரது பதவி பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணத்துக்கு எதிரானதாகும்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி சையது மசாஹர் அலி அக்பர் நக்வி, நவாஸ் ஷெரீஃப்புக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். இதேபோல், பிரதமர் அப்பாஸி, நவாஸின் பேட்டியை வெளியிட்ட டான் பத்திரிகை செய்தியாளர் சிரில் அல்மெய்தா ஆகியோருக்கும் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடல்வழியாக ஊடுருவி பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 166 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார்.
நீதிமன்ற விசாரணையில், அவர் குற்றமிழைத்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.