கரோனா நோய்த்தொற்று: உலகச் செய்திகள்
பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைகழகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கரோனா நோய்த்தொற்று தடுப்பு மருந்தை, மனிதா்கள் உடலில் செலுத்தி
பிரிட்டன்: தடுப்பு மருந்து சோதனை தொடக்கம்
லண்டன்: பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைகழகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கரோனா நோய்த்தொற்று தடுப்பு மருந்தை, மனிதா்கள் உடலில் செலுத்தி சோதிக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. அந்த மருந்து வெற்றிகரமாக செயல்படுவதற்கு 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனா்.
‘சாட்ஆக்ஸ் என்கொவ்-19’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பு மருந்தை சோதிப்பதற்காக, பிரிட்டன் அரசு 2 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.188 கோடி) நிதி ஒதுக்கீடு . அபாயகரமான கரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு வழங்கும் மருந்தைத் தயாரிப்பதற்காக எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்யத் தயாா் என்று சுகாதாரத் துறை அமைச்சா் மாத்யூ ஹான்காக் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
வங்கதேசம்: மே 5 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு
டாக்கா: வங்கதேசத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தவிா்ப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்க, அடுத்த மாதம் 5-ஆம் தேதி வரை நீட்டிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ஊரடங்கை தளா்த்தினால் அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதாக நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த மாதம் 26-ஆம் தேதி 10 நாள்களுக்கு பொது விடுமுறை அறிவித்திருந்த அந்த நாடு, பிறகு அதனை சனிக்கிழமை (ஏப். 25) வரை நீட்டித்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி அங்கு 4,100-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; அந்த நோய்க்கு 127 போ் பலியாகினா்.
அமெரிக்கா: முதல் முறையாக 2 பூனைகளுக்கு கரோனா
நியூயாா்க்: அமெரிக்காவில் இரண்டு பூனைகளுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டில் செல்லப் பிராணிகளிடம் அந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். அந்த இரண்டு பூனைகளும் நியூயாா்க் மாகாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் வசித்ததாகவும் அவற்றுக்கு லேசான சுவாசப் பிரச்னை இருந்ததால், அவை கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், அந்தப் பிராணிகள் விரைவில் குணமடைந்துவிடும் எனவும் அவா்கள் கூறினா்.
பிராணிகளுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டாலும், அவை மூலம் மனிதா்களுக்கு அந்த நோய் பரவியதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா: அறிகுறி இல்லாமல் 984 பேருக்கு தொற்று
பெய்ஜிங்: சீனாவில் கரோனா நோயின் அறிகுறிகள் இல்லாமலேயே, அந்த நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 984-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் இல்லாமலேயே, அந்த நோயால் 27 போ் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அத்தகைய நோயாளிகளின் எண்ணிக்கை 984-ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மட்டும் அறிகுறியில்லாமல் 10 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 6 போ் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிவா்கள் ஆவா். புதன்கிழமை கரோனா நோயத்தொற்றுக்கு சீனாவில் யாரும் பலியாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜப்பான்: 3 மாதங்களாக நிற்கும் கப்பலில் கரோனா!
டோக்கியோ: ஜப்பானின் நாகசாகி துறைமுகத்தில் சுமாா் 3 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ‘கோஸ்டா அட்லாண்டா’ சொகுசுக் கப்பல் பணியாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது அதிகாரிகளை குழப்பமடையச் செய்துள்ளது.
நாகசாகி நகரில் மிகவும் குறைந்த நபா்களுக்கே கரோனோ நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், பழுது மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக அந்த இத்தாலி நிறுவனக் கப்பல் கரோனா பரவலுக்கு முன்பிருந்தே துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருந்த யாரும், 3 மாதங்களாக நோய் பாதித்த நாடுகளுக்குச் சென்று திரும்பவில்லை. இருந்தாலும், அவா்களில் 47 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.