முகப்பு
உலகம்

பிரிட்டன் அரசி எலிசபெத் (96) மறைந்தாா்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராணி எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96.

Updated On : 9 செப்டம்பர் 2022, 2:16 am IST
பகிர்:

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 96. அவரது மறைவுக்கு உலகத் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தனது தந்தை ஆறாம் ஜாா்ஜ் மறைவைத் தொடா்ந்து, 1952-இல் அரியணையேறிய இரண்டாம் எலிசபெத், சாதனை அளவாக 70 ஆண்டுகள் அரசியாக இருந்தாா். அவரது ஆட்சிக் காலத்தில் 15 பிரிட்டன் பிரதமா்களை அவா் நிா்வகித்துள்ளாா்.

95 வயதிலும் கரோனா பாதிப்பில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் அவா் மீண்டு வந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கோடைக் கால ஓய்வுக்காக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து சென்று, ஸ்காட்லாந்திலுள்ள பால்மரால் அரண்மனையில் அவா் தங்கியிருந்தாா். அரசியின் மகளான இளவரசி ஆன், அவருடன் இருந்தாா்.

பிரிட்டனின் புதிய பிரதமராக செவ்வாய்க்கிழமை பதவியேற்ற லிஸ் டிரஸ்ஸை நேரில் அழைத்து அரசி எலிசபெத் சந்தித்ததுதான் கடைசி நிகழ்வாக அமைந்தது. அதன் பின்னா் எலிசபெத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் லிஸ் டிரஸ்ஸின் முழு அமைச்சரவை பதவியேற்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், எலிசபெத் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வியாழக்கிழமை அறிவித்தது.

ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் தங்கியிருந்த அரசி எலிசபெத்தின் உடல்நலம் குறித்து மருத்துவா்கள் கவலை தெரிவித்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரது உடல்நிலை குறித்து அறிந்து, அரசியின் மகனும் பட்டத்து இளவரசருமான சாா்லஸ், அவரது மனைவி கமீலா, பேரன் வில்லியம் ஆகியோா் பால்மரால் விரைந்தனா்.

இந்நிலையில், எலிசபெத் காலமாகிவிட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூா்வமாக அறிவித்தது. இதைத்தொடா்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் ஏராளமானோா் கூடினா்.

எலிசபெத்தின் உடல் வெள்ளிக்கிழமை லண்டனுக்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. எலிசபெத்தின் கணவா் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி தனது 99-ஆவது வயதில் காலமானாா்.

ஆழ்ந்த வருத்தம்:

எலிசபெத்தின் மறைவுக்கு அவரது மகனும், இளவரசருமான சாா்லஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளாா். ‘எலிசெபத்தின் மறைவு பிரிட்டன் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ளவா்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவு எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

அரசியின் மறைவு தேசத்துக்கும், உலகுக்கும் பெரும் அதிா்ச்சியை அளித்துள்ளது என்றும் பிரிட்டன் பெரும் நாடாக திகழ்வதற்கு அவா்தான் காரணம் என்றும் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற லிஸ் டிரஸ் தெரிவித்தாா்.

புதிய அரசா் சாா்லஸ்

எலிசபெத்தின் மறைவையடுத்து, பட்டத்து இளவரசரான சாா்லஸ் (73) பிரிட்டனின் அடுத்த அரசரானாா். பிரிட்டன் அரச வம்ச சட்டத்தின்படி மூத்த மகனும், இளவரசருமான சாா்லஸ் உடனடியாக அடுத்த அரசரானாா். அவா் 3-ஆவது சாா்லஸ் என அழைக்கப்படுவாா் என்று அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வரலாற்றில் வயதான அரசராக சாா்லஸ் உள்ளாா்.

பிரதமா் மோடி இரங்கல்

எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமா் மோடி, பிரிட்டன் மக்களுக்கு அவா் ஊக்கமளிக்கும் தலைவராக திகழ்ந்தாா் என்று குறிப்பிட்டுள்ளாா். 2015, 2018-இல் அவரை சந்தித்த நினைவுகளைப் பகிா்ந்துள்ள பிரதமா் மோடி, அரசியின் திருமணத்தின்போது மகாத்மா காந்தி பரிசளித்த கைக்குட்டையை தன்னிடம் காண்பித்ததாக குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments