முகப்பு
உலகம்

வெடித்துச் சிதறியது டைட்டன் நீர்மூழ்கி! டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற 5 பேரும் பலி

புகழ்பெற்ற டைட்டானிக்  கப்பலைப் பார்வையிடுவதற்காக 5 பேருடன் ஆழ்கடலுக்குச் சென்று மாயமான டைட்டன் நீர்மூழ்கி, வெடித்துச் சிதறிவிட்டதாக மீட்புக் குழுவினர் வியாழக்கிழமை அறிவித்தனர்.

Updated On : 23 ஜூன் 2023, 8:47 am IST
கடலுக்குள் மாயமான டைட்டன் நீா்மூழ்கி.
பகிர்:

பாஸ்டன்: புகழ்பெற்ற டைட்டானிக்  கப்பலைப் பார்வையிடுவதற்காக 5 பேருடன் ஆழ்கடலுக்குச் சென்று மாயமான டைட்டன் நீர்மூழ்கி, வெடித்துச் சிதறிவிட்டதாக மீட்புக் குழுவினர் வியாழக்கிழமை அறிவித்தனர்.

அதையடுத்து, அதிலிருந்த பாகிஸ்தானிய தொழிலதிபர், அவரது மகன் உள்ளிட்ட 5 பேரும் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.

இது குறித்து, டைட்டன் நீர்மூழ்கியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடலோர காவல் படைப் பிரிவு தளபதி ஜான் மாகர் கூறியதாவது:

Advertisement

Advertisement

டைட்டன் நீர்மூழ்கி மாயமான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியின்போது, அந்த நீர்மூழ்கியின் சிதறிய பாகங்கள்  ரிமோட் நீர்மூழ்கி சாதனம் (ஆர்ஓவி) மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

டைட்டானிக் கப்பல் உடைந்து கிடக்கும் பகுதிக்கு சுமார் 1,600 அடி தொலைவில் அந்த நீர்மூழ்கியின் பாகங்கள் கடல் படுகையில் சிதறிக் கிடக்கின்றன.

கடலுக்குள் அழுத்தத்தைத் தாங்குவதற்கான டைட்டன் நீர்மூழ்கியின் பகுதி, உள்வெடிப்புக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.

அவர்களது உடல்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். மேலும், டைட்டன் நீர்மூழ்கி எவ்வாறு வெடித்தது என்பதை அறிந்துகொள்வதற்காக அந்தப் பகுதியில் தேடுதல் பணிகள் தொடரும் என்றார் அவர்.

பிரிட்டனிலிருந்து அமெரிக்கா நோக்கி கடந்த 1912-ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல், வழியில் பனிப்பாறை மோதி கடலுக்குள் மூழ்கியதில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

கடலுக்குள் மூழ்கிய அந்தக் கப்பல், அமெரிக்காவின் நியூஃபெளண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கடலடியில் உடைந்து கிடந்தது கடந்த 1985-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

அதன் பிறகு, அந்தக் கப்பலை கடல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், திரைப்படத் துறையினர் போன்றவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று பார்வையிட்டு வந்தனர்.

இந்த நிலையில், டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் நீர்மூழ்கி ஒன்றை வடிமைத்தது.

'டைட்டன் நீர்மூழ்கி' என்று பெயரிடப்பட்ட அதில் அதிகபட்சமாக 5 பேர் வரை பயணிக்க முடியும். எனினும், அந்த நீர்மூழ்கியின் பாதுகாப்புத் தன்மை போதிய அளவுக்கு சோதிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், எம்வி போலார் பிரின்ஸ் என்ற கப்பல் மூலம் டைட்டானிக் கப்பல் விழுந்துள்ள கடல் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை எடுத்துவரப்பட்ட டைட்டன் நீர்மூழ்கி, வியாழக்கிழமை காலை கடலுக்குள் இறக்கப்பட்டது.

அதில் பிரிட்டன் தொழிலதிபர் ஹமீஷ் ஹார்டிங், ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ், நீர்மூழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் கமாண்டோவுமான பால்-ஹென்றி நார்கியோலே, பாகிஸ்தான் தொழிலதிபர் ஷேஸôதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 பேர் இருந்தனர்.

சுமார் 4 கி.மீ. ஆழத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த நீர்மூழ்கிக்கும் போலார் பிரின்ஸ் கப்பலுக்கும் இடையே இருந்த தகவல் தொடர்பு சுமார் 1 மணி நேரம் 45 நிமிஷத்துக்குப் பிறகு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், 4 நாள்களாக நடைபெற்ற தேடுதல் பணிகளுக்குப் பிறகு அந்த நீர்மூழ்கி கடலுக்குள் வெடித்துச் சிதறி, அதிலிருந்த 5 பேரும் உயிரிழந்தது தற்போது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.