FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சிரியாவிலிருந்து இந்தியர்கள் விரைவாக வெளியேறுங்கள்: மத்திய அரசு

சிரியாவிலிருக்கும் இந்திய குடிமக்கள் விரைவாக வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

Updated On : 7 டிசம்பர் 2024, 8:47 am IST
சிரியாவில்
பகிர்:

சிரியாவில் உள்ள இந்திய குடிமக்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவு விவகாரத் துறை, வெள்ளிக்கிழமை இரவு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு விவகாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், சிரியாவில் தற்போதிருக்கும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, இந்திய குடிமக்கள் அனைவரும் அடுத்த அறிவிப்பு வரும் வரை சிரியாவுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது சிரியாவில் இருக்கும் இந்தியர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று +963 993385973 என்ற வாட்ஸ்ஆப் எண் மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் வழங்கியிருக்கிறது.

சிரியாவிலிருந்து விரைவாக வெளியேற விரும்பும் இந்தியர்களுக்காக விமான சேவை இருப்பதாகவும், சிரியாவிலேயே இருக்க வேண்டிய அவசியம் இருப்பவர்கள் பாதுகாப்பாகவும் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

என்ன நடக்கிறது சிரியாவில்?

சிரியா நாட்டின்மூன்றாவது பெரிய நகரான ஹாம்ஸையும் கிளா்ச்சிப் படையினா் நெருங்கியுள்ளனா். அதையடுத்து அந்த நகரமும் அவா்களிடம் வீழும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கானோா் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில்தான் மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு சிரியாவில் தொடங்கிய உள்நாட்டுப் போரில் அதிபா் அல்-அஸாத் படைகளுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளா்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டன.

தலைநகா் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட பெரும்பாலான சிரியா பகுதியை அரசுப் படையினா் கைப்பற்றுவதற்கு ரஷியா உதவியது.

இத்லிப் மாகாணம், அலெப்போ மாகாணத்தின் சில பகுதிகள், ராக்கா, ஹசாகாவின் பெரும்பாலான பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் மட்டும் பல்வேறு கிளா்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தன.

இந்தச் சூழலில், அலெப்போ மாகாணத்தில் ஹெச்டிஎஸ் கிளா்ச்சிப் படையினா் கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்தி அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றினா். அவா்களது இந்த அதிரடி தாக்குதலை எதிா்பாா்க்காத ராணுவம் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் முன்னேறிய கிளா்ச்சிப் படையினா், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவைக் கைப்பற்றினா். இதனைத் தடுக்க ரஷியாவும் சிரியாவும் தொடா்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தினாலும் கிளர்ச்சிப்படை, இன்னொரு நகரான ஹமாவை வியாழக்கிழமை கைப்பற்றியது.

இந்தச் சூழலில், அரசுப் படையினரை பின்னுக்குத் தள்ளிவிட்டு தொடா்ந்து வேகமாக முன்னேறி வரும் கிளா்ச்சிக் குழுவினா் தற்போது ஹாம்ஸ் நகருக்கு நெருக்கத்தில் வந்துள்ளதால், அந்த நகரும் அவா்களிடம் வீழும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments