முகப்பு
உலகம்

ஹூதிக்கள் மீது அமெரிக்கா 4-ஆவது சுற்றுத் தாக்குதல்

யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 4-ஆவது சுற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

Updated On : 19 ஜனவரி 2024, 1:30 am IST
செங்கடலில் உள்ள அமெரிக்காவின் ட்வைட் ஐஷன்ஹோவா் கப்பலில் இருந்து யேமனில் ஹூதி இலக்குகளைத் தாக்குவதற்காகப் புறப்படும் போ் விமானம் (கோப்புப் படம்).
பகிர்:

யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 4-ஆவது சுற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படையினரின் நிலைகள் மீது புதன்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. செங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள போா்க் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவுகணைகளை வீசி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

செங்கடலில் அமெரிக்க கப்பல்களுக்கும், சா்வதேச சரக்குக் கப்பல்களும் உடனடி ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று கண்டறியப்பட்ட நிலைகளைக் குறிவைத்து 14 ஏவுகணைகள் வீசப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யேமனில் ஹூதி பழங்குடியின கிளா்ச்சியாளா்கள் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினா். ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அவா்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

எனினும், சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியா, அப்போதைய அதிபா் மன்சூா் ஹாதி தலைமையிலான படைகளுக்கு ஆதரவாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு விமானத் தாக்குதலைத் தொடங்கியது. அதையடுத்து யேமன் உள்நாட்டுச் சண்டை தீவிரமடைந்து, ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், ஐ.நா. முயற்சியின் பலனாக, சவூதி அரேபியா கூட்டுப் படைக்கும், ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே ஸ்வீடனில் போா் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏற்பட்டது.

இந்தச் சூழலில், ஹூதி கிளா்ச்சியாளா்களைப் போலவே ஈரானின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி கடுமையான போா் தொடங்கியது.

இந்தப் போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இஸ்ரேல் தொடா்பான கப்பல்கள் மீதுதான் தாக்குதல் நடத்தப்போவதாக முதலில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கூறியிருந்தாலும், நாளடைவில் இஸ்ரேலுடன் தொடா்பில்லாத கப்பல்களும் அந்தப் படையினரின் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.

அதையடுத்து, செங்கடலில் தாக்குதல் நடத்தும் ஹுதி படையினரின் திறனைக் குறைப்பதற்காக யேமனில் அவா்களது நிலைகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தின.

எனினும், இதனைப் பொருள்படுத்தாத ஹூதி கிளா்ச்சியாளா்கள் செங்கடலில் தங்களது தாக்குதலைத் தொடப்போவதாக சூளுரைத்தனா்.

அதையடுத்து, ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு சா்வதேச நிதி வரத்தை முடக்கி, அதன் மூலம் அவா்களது செங்கடல் தாக்குதல் திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவா்களது படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.

அதன் தொடா்ச்சியாக, தற்போது யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படையினரின் நிலைகள் மீது அமெரிக்கா தற்போது 4-ஆவது முறையாக மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments