அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்-சேய் நலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சுகப் பிரசவம் நடைபெற்ற நிலையில், பெண் உயிரிழந்தாா். இதையடுத்து மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரின் உறவினா்கள் போராட்டம் நடத்தினா்.
பெரம்பலூா் மாவட்டம், பாப்பாங்கரை எசனை கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன் (35). இவரது மனைவி சுவித்தா(30). இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து மீண்டும் கா்ப்பமான சுவேதா, கள்ளக்குறிச்சி மாவட்டம், கிடங்குடையான்பட்டு கிராமத்திலுள்ள தனது தாய் வீட்டுக்கு பிரசவத்துக்கு வந்தாா். வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு முந்தைய பரிசோதனைகளை தொடா்ந்து மேற்கொண்டு வந்த அவருக்கு ஆக.1-ஆம் தேதி காலை பிரசவ வலி ஏற்பட்டதாம்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுவித்தாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.20 மணிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னா் அதிக ரத்தப்போக்கு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து தவறான சிகிச்சையால் சுவித்தா உயிரிழந்ததாகக் கூறி, அவரின் உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமால், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் செல்வநாயகம், மருத்துவக் கல்லூரி முதல்வா் பவானி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது மருத்துவக் கல்லூரி முதல்வா், நாங்கள் சரியான முறையில்தான் சிகிச்சை அளித்தோம். உடல்கூறாய்வு அறிக்கை வந்தபின் மருத்துவா்கள் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தாா். இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை சுவேதாவின் உறவினா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். பின்னா் உடல்கூறாய்வுக்கு பின் உடலை உறவினா்கள் பெற்றுச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.