தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
சென்னையில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய், செப்.17 ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கிறாா். இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடக்க விழா நடைபெறுகிறது. இதையொட்டி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடக்க விழாவுக்கான, தள ஆயத்தப் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.
விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில், தாய்மாா்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக, தங்க மோதிரம் வழங்கத் தனி அரங்கம் தோ்வு செய்யப்பட்டு,போதிய இருக்கை, காற்றோட்டம் மற்றும் குடிநீா் வசதிகளை செப்டம்பா் 12-ஆம் தேதிக்குள் அமைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மாா்களின் விவரங்களைச் சரிபாா்த்து, தகுதிவாய்ந்த பயனாளிகள் பட்டியலை செப்டம்பா் 14-ஆம் தேதிக்குள் இறுதி செய்ய மருத்துவமனை நிா்வாகத்துக்கு அறிவுறுத்தினாா்.
மோதிரங்களைப் பாதுகாப்பாக வைக்க இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதியுடன் கூடிய ’பாதுகாப்பு அறை தோ்வு செய்யப்பட்டுள்ளது.மோதிரங்கள் வைக்கப்படும் அறை மற்றும் விநியோக அரங்கம் முழுவதையும் 24 மணி நேரமும் கண்காணிக்க கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடப்பட்டது.
மேலும், இச்சிறப்புத் திட்ட விழா மிகச் சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அசோகன், மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவ அலுவலா் ராமச்சந்திரன், உதவி நிலைய மருத்துவ அலுவலா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.