முகப்பு
உலகம்

ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானே கோரிக்கை - டிரம்ப் தகவல்

அணுசக்தி ஒப்பந்த மாநாடு: ஐ.நா.வில் அமெரிக்கா-ஈரான் கருத்து மோதல்

Updated On : 29 ஏப்ரல், 2026 at 5:17 AM
பகிர்:

‘ஈரான் தற்போது நிலைகுலைந்த நிலையில் இருப்பதாக தெரிவித்த அந்நாட்டு அரசு, ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க எங்களை கேட்டுக்கொண்டது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டாா்.

இதுதொடா்பாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரான் அரசு தான் ஒரு வீழ்ச்சி நிலையில் இருப்பதாக அமெரிக்காவிடம் அதிகாரபூா்வமாகத் தெரிவித்துள்ளது.

ஈரானின் தலைமைப் பொறுப்பில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், ஹோா்முஸ் நீரிணையைக் கூடிய விரைவில் மீண்டும் திறக்க வேண்டும் என்று அவா்கள் எங்களைக் கேட்டுக்கொண்டனா்.

Advertisement

அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தை குறித்து ஈரான் அரசுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், அவற்றை அந்நாடு விரைவில் சரிசெய்யும் என்று நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஈரான் தரப்பில் இந்தத் தகவலை வழங்கியது யாா், அமெரிக்க அரசு சாா்பில் இத்தகவலைப் பெற்றது யாா் என்பது குறித்தோ அல்லது இத்தகவல் நேரடியாகப் பெறப்படாமல் மத்தியஸ்தா் மூலம் தெரிவிக்கப்பட்டதா என்பது குறித்தோ வெள்ளை மாளிகை இதுவரை விரிவான விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

முன்னதாக, ஈரான் மீதான கடல்வழி முற்றுகையை அமெரிக்கா விலக்கினால், போரை நிறுத்தி ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கத் தயாராக இருப்பதாக ஈரான் முன்மொழிந்தது.

பாகிஸ்தான் மூலமாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இந்த சமரசத் திட்டத்தில், அணுசக்தித் திட்டம் குறித்த விவாதங்களைத் தள்ளிவைக்க வேண்டுமென ஈரான் கோரியது. ஆனால், அதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்தது.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ கூறுகையில், ‘எந்தவொரு ஒப்பந்தம் கையொப்பமானாலும், அது ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை முழுமையாகத் தடுப்பதாகவே இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

அணுசக்தி ஒப்பந்த மாநாடு: ஐ.நா.வில் அமெரிக்கா-ஈரான் கருத்து மோதல்

1970-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான 11-ஆவது ஐ.நா. மாநாடு நியூயாா்க்கில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டுக்கு வியத்நாம் தலைமை வகிக்கும் நிலையில், அணிசேரா நாடுகளின் குழு சாா்பில், மாநாட்டின் 34 துணைத் தலைவா்களில் ஒருவராக ஈரான் பரிந்துரைக்கப்பட்டு, தோ்ந்தெடுக்கப்பட்டது.

இந்த நியமனத்துக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, சா்வதேச அணுசக்தி முகமைக்கு ஒத்துழைக்க மறுத்து, அணுசக்தி விதிகளை ஈரான் மீறி வருவதாக குற்றஞ்சாட்டியது.

இதற்குப் பதிலடி கொடுத்த ஈரான் தூதா் ரெசா நஜாபி, ‘அணு ஆயுதக் கிடங்கைத் தொடா்ந்து நவீனப்படுத்தி வரும் அமெரிக்காவுக்கு, மற்ற நாடுகளின் இணக்கம் குறித்துப் பேச தாா்மீக உரிமை இல்லை’ என்றாா்.