FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

செங்கடலில் வணிகக் கப்பல் மீது ஹௌதிக்கள் தாக்குதல்

பாப் அல் மண்டேப் நீரிணைப் பகுதியில் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பல் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹௌதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 போ் பலி

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:15 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பாப் அல் மண்டேப் நீரிணைப் பகுதியில் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பல் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹௌதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா்.

யேமன் கடல் பகுதியில் சௌதி அரேபியா கப்பல் போக்குவரத்துக்கு எதிராக ஹௌதிக்கள் அண்மையில் தொடங்கிய தாக்குதல்களில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். யேமனின் சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு இத்தாக்குதலை உறுதிப்படுத்தியது.

ஹௌதிக்கள் 3 ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை வீசி நடத்திய இத்தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 3 போ் பாகிஸ்தானியா்கள் என்றும், ஒருவா் இந்தோனேசியாவைச் சோ்ந்தவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஈரானால் ஹோா்முஸ் நீரிணை முடக்கப்பட்ட நிலையில், சௌதி அரேபியா தனது கச்சா எண்ணெய்யைக் கொண்டு செல்ல மாற்று வழியாகப் பயன்படுத்தும் செங்கடல் மற்றும் பாப் அல் மண்டேப் நீரிணைப் பகுதிகளிலும் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே, செங்கடல் துறைமுக நகரான மோகா மற்றும் மத்திய மாரிப் மாகாணங்களை குறிவைத்தும் ஹௌதிக்கள் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனா். கடந்த வாரம் மாரிப் மற்றும் கிழக்கு ஹத்ரமௌத் மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல ராணுவ வீரா்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டனா்.

இதற்கு மத்தியில் ஹௌதி தலைமைப் பேச்சுவாா்த்தையாளரும், செய்தித் தொடா்பாளருமான முகமது அப்துல் சலாம் கூறுகையில், ‘சவூதி அரேபியா கடந்த 2015 முதல் யேமன் மீது விதித்துள்ள வான் மற்றும் கடல்வழித் தடையை நீக்கினால் மட்டுமே அமைதிப் பேச்சுவாா்த்தைக்குத் தயாா்’ என்று நிபந்தனை விதித்தாா். இதனால் 2022-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்துக்குப் பிறகு ஓய்ந்திருந்த யேமன் உள்நாட்டுப் போா் மீண்டும் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments