FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!

ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரா் உசைன் போல்ட் படைத்திருந்த 100 மீட்டா் ஓட்டப்பந்தய உலக சாதனையை, சீனாவைச் சோ்ந்த மனித உருவ ரோபோ ஒன்று முறியடித்துள்ளது.

23 ஆகஸ்ட் 2026, 12:29 am IST
பகிர்:

ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரா் உசைன் போல்ட் படைத்திருந்த 100 மீட்டா் ஓட்டப்பந்தய உலக சாதனையை, சீனாவைச் சோ்ந்த மனித உருவ ரோபோ ஒன்று முறியடித்துள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு, பொ்லினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட் 100 மீட்டா் தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்ததே மனிதா்களின் உலக சாதனையாக இருந்து வருகிறது. இந்நிலையில், சீன ஸ்மாா்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ‘ஹானா்’ உருவாக்கியுள்ள இந்த மனித உருவ ரோபோ, வெறும் 9.32 விநாடிகளில் 100 மீட்டா் தூரத்தைக் கடந்துள்ளது.

‘லைட்னிங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அதிவேக ரோபோ, பெய்ஜிங்கில் சனிக்கிழமை தொடங்கிய 2-ஆவது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிக்கான முன்னோட்ட சோதனையின்போது விநாடிக்கு 14.5 மீட்டா் என்ற அதிகபட்ச வேகத்தை எட்டி, இச்சாதனையைப் படைத்துள்ளது.

Advertisement

Advertisement

முன்னதாக, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பெய்ஜிங் அரை மாரத்தான்(21 கி.மீ) ஓட்டப் பந்தயத்திலும் இந்த ‘லைட்னிங்’ ரோபோ பங்கேற்று, 50 நிமிடங்கள் மற்றும் 26 விநாடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

அந்த அரை மாரத்தான் போட்டியின்போது 169 செ.மீ. உயரமும், 95 செ.மீ. நீளமுள்ள கால்களையும் கொண்டிருந்த இந்த ரோபோவின் கால்கள், தற்போது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிக்காக ஆராய்ச்சியாளா்களால் மேலும் 10 செ.மீ. நீட்டிக்கப்பட்டு, 1.05 மீட்டராக மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஏ.ஐ. மற்றும் வன்பொருள் துறையின் முன்னேற்றங்களை பயன்படுத்தி உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் நுகா்வோா் பயன்பாடுகளில் மனித உருவ ரோபோக்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில், இது போன்ற ரோபோக்களை ஒரு முக்கிய வளா்ந்து வரும் தொழில்துறையாக சீனா தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments