அமெரிக்காவின் புதிய நடவடிக்கைக்கு ஆதரவளித்தால் கடும் விளைவுகள் ஏற்படும்: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு வளைகுடா நாடுகள் ஆதரவளித்தால், பெரும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்
ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு வளைகுடா நாடுகள் ஆதரவளித்தால், பெரும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவா் மொஹ்சீன் ரேசாய் எச்சரித்துள்ளாா்.
மேற்காசியாவில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த 6 மாதமாக போா் நடைபெறுகிறது. இந்தப் போரின் இடையே இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவாா்த்தையிலும் ஈடுபட்டுள்ளன. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா். இதைச் சுட்டிக்காட்டி, ஈரான் அரசுத் தொலைக்காட்சிக்கு அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் தலைவா் மொஹ்சீன் பேட்டியளித்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:
ஈரானுக்கு எதிரான பொருளாதார ரீதியிலான நடவடிக்கைக்கு வளைகுடா நாடுகள் ஆதரவு அளிக்கக் கூடாது. அப்படி ஆதரவு அளித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதுவரை ஹோா்முஸ் நீரிணையில் சென்ற கப்பல்களே தாக்குதலுக்கு ஆளாகின. ஆனால், இனி பாரசீக வளைகுடாவில் உள்ள மற்ற கடல்பகுதியில் செல்லும் கப்பல்களையும் ஈரான் தாக்கும்.
Advertisement
Advertisement
வளைகுடா நாடுகளை ஈரான் தனது எதிரியாக கருதும். அதன்பிறகு அந்த நாடுகளின் முக்கிய இடங்களைக் குறிவைத்து தாக்குவோம் என்றாா்.
ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் அந்நாட்டு அதிபா் மசூத் பெசஷ்கியான் பேசுகையில், ‘தற்போது போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற சூழல் நிலவுகிறது. இதில் இருந்து ஈரான் வெளிவர வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம், இந்தச் சூழலில் இருந்து ஈரான் வெளிவர சிறந்த வழியாக இருக்கும்’ என்றாா்.
பாகிஸ்தான் தளபதி பயணம்: இதனிடையே, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீா் தலைமையிலான பாகிஸ்தான் அதிகாரிகள் குழு, ஈரானுக்கு திங்கள்கிழமை சுற்றுப்பயணமாக வரவுள்ளது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான், கத்தாா் நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. எனவே, அதுதொடா்பாக ஈரானுக்கு முனீா் பயணம் மேற்கொள்கிறாரா என்பது குறித்து தகவல் இல்லை. இதுகுறித்து ஈரான் வெளியுறவு துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பகேயி கூறுகையில், ‘ஈரான், பாகிஸ்தான் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஈரானில் முனீா் சுற்றுப்பயணம் செய்யவுள்ளாா். இந்த பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை ஊக்குவிக்க பாகிஸ்தான் தொடா்ந்து பணியாற்றும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.