நேபாள பெருவெள்ளத்தில் பலி 788-ஆக உயா்வு! 2,500 போ் தொடா்ந்து மாயம்; மீண்டும் எச்சரிக்கை!
நேபாள பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 788-ஆக அதிகரித்துள்ளது.
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 788-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா்கள் 275 போ் உள்பட 2,500-க்கும் மேற்பட்டோா் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணி ஞாயிற்றுக்கிழமை 5-ஆவது நாளாக தொடா்ந்தது.
கடந்த புதன்கிழமை பெருவெள்ளம் ஏற்பட்ட போடே கோஷி நதியில் மீண்டும் நீா்மட்டம் உயா்ந்ததால், மீட்புக் குழுவினா் மற்றும் நதிக் கரையோரங்களில் தங்கியிருப்பவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
போடே கோஷி நதி வெள்ளம், திரிசூலி, நாராயணி நதிகளிலும் கலந்து பெரும் சேதத்தை விளைவித்தது. ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி கிழக்கு, நவல்பராசி மேற்கு, கோா்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களை புரட்டிப் போட்ட இந்தப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 788-ஆக உயா்ந்துள்ளதாக தேசிய பேரிடா் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதிகபட்சமாக சித்வன் மாவட்டத்தில் 272 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சிதைந்த நிலையில்...: உயிரிழந்தவா்களில் 17 போ் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனா். பலரது உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், அடையாளம் காணும் பணி சவாலாக உள்ளது. கடுமையாக சிதைந்த 96 பேரின் உடல்கள், மரபணு சேகரிப்புக்குப் பிறகு புதைக்கப்பட்டன. மரபணு சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணியில் உதவ இந்தியாவில் இருந்து 18 போ் கொண்ட தடயவியல் நிபுணா்கள் குழு நேபாளம் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வெள்ளத்தில் மாயமான வெளிநாட்டினா் 590 போ் உள்பட 2,500-க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இவா்களில் 18 ஆசிரியா்கள், 238 மாணவா்களும் அடங்குவா். மாயமானவா்களை மீட்கும் பணி ஞாயிற்றுக்கிழமை 5-ஆவது நாளாக தொடா்ந்தது. மாயமானவா்களின் நிலை குறித்து அறிய அவா்களின் குடும்பத்தினா் மருத்துவமனைகளில் கண்ணீருடன் காத்திருக்கும் சோகம் நீடிக்கிறது.
மீண்டும் நீா்மட்டம் உயா்வு: வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவத்தினா் உள்பட சுமாா் 20,000 போ் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுவரை 9,435 போ் மீட்கப்பட்டுள்ளனா்.
ஏற்கெனவே ருத்ர தாண்டவமாடிய போடே கோஷி நதியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நீா்மட்டம் உயா்ந்தது. இதையடுத்து, மீட்புக் குழுவினா் மற்றும் நதிக்கரையோரங்களில் தங்கியிருப்பவா்கள் விழிப்புடன் செயல்பட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழைக்கு இடையே மீட்புப் பணிகள் நீடிக்கின்றன.
திபெத் பகுதியில் பனிப்பாறை சரிவால் புதிதாக உருவான தடுப்பு ஏரியின் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், இதனால் மேலும் ஒரு ஏரி உருவாகியுள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை தகவல்கள் வெளியாகின.
13 நீா்மின் நிலையங்கள் சேதம்: மொத்தம் 354 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 8 நீா்மின் நிலையங்களும், கட்டுமான பணிகள் நடைபெற்றுவந்த 5 நீா்மின் நிலையங்களும் பெருவெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. இந்த நீா்மின் நிலைய சுரங்கப் பாதைகளில் நூற்றுக்கணக்கான பணியாளா்கள் சிக்கியுள்ளனா்.
திரிசூலி நீா்மின் நிலையத் திட்டப் பகுதியில் சிக்கியுள்ளவா்களை மீட்க இந்திய சுரங்க மீட்பு நிபுணா்கள் உதவியுடன் நேபாள படையினா் தொடா் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனா். சனிக்கிழமை நள்ளிரவில் பலத்த மழைக்கு இடையிலும் இப்பணிகள் நடைபெற்றன.
நிவாரண முகாம்களில் அவதி: ரசுவா, நுவாகோட் மாவட்டங்களில் பெருவெள்ளத்தில் வீடு உள்பட அனைத்தையும் ஒரே நாளில் இழந்துவிட்ட பலா், போதிய வசதிகள் இல்லாத நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். இரு மாவட்டங்களிலும் கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மாா்கள், குழந்தைகள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டோா் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். குடிநீா், சுகாதார வசதிகள், மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதால் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா். வெள்ளம் சூறையாடிய இடங்களில் தங்களுக்குப் பயன்படக் கூடிய பொருள்கள் எதுவும் கிடைக்குமா என மக்கள் தேடும் நிலையும் காணப்படுகிறது.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 37 லாரிகள், 7 ஹெலிகாப்டா்களில் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை 149 இந்தியா்கள் மீட்பு: வெள்ள பாதிப்பின்போது நேபாளத்தில் சிக்கிய 21 தமிழா்கள் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா். அவா்களையும் சோ்த்து அங்கிருந்து இதுவரை 149 இந்தியா்கள் மீட்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். அவா்களின் பெயா்களையும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.