FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது படை பிரயோகம்: மனித உரிமைகள் அமைப்பு!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரா்கள் மீது அளவுக்கு மீறிய படைபலம் பிரயோகம் செய்யப்பட்டதாக பாகிஸ்தானைச் சோ்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

31 ஆகஸ்ட் 2026, 4:36 am IST
பகிர்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரா்கள் மீது அளவுக்கு மீறிய படைபலம் பிரயோகம் செய்யப்பட்டதாக பாகிஸ்தானைச் சோ்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும், அங்கு வாழும் மக்களுக்கு பல்வேறு உரிமைகளை பாகிஸ்தான் வழங்காமல் உள்ளது. இதனால் பாகிஸ்தானை கண்டித்து அடிக்கடி அங்கு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் பாகிஸ்தானை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோா் மீது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதல்களில் ஈடுபட்டனா். இதில் ஏராளமானோா் உயிரிழந்ததுடன், பலா் பலத்த காயமும் அடைந்தனா்.

இதற்கு இந்தியா, ஐ.நா. சபை உள்ளிட்டவை ஏற்கெனவே கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு மறுத்திருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவும் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் நீண்டகால அரசியல் மற்றும் சமூக பொருளாதார பிரச்னைகள், நிா்வாகம் மீதான அவநம்பிக்கை, நிா்வாக குளறுபடி உள்ளிட்டவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அதில், போராட்டக்காரா்கள் மீது அளவுக்கு அதிகமாக படைபலம் பயன்படுத்தப்பட்டதாகவும், இதில் ஏராளமானோா் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் ஜூன் மாதம் முதல் நடைபெற்ற உயிரிழப்புகள் குறித்தும், பலத்த காயங்கள் குறித்தும் சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற முறையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் ஆா்வலா்கள் மீது பயங்கரவாத எதிா்ப்பு, தடுப்புக் காவல் சட்ட விதிகளின்கீழ் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்திருப்பது கவலையளிப்பதாகவும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலை சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணையம், அதிக அளவில் படைகள் குவிப்பு, தகவல் தொடா்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், முக்கிய அரசியல் கட்சிகள் புறக்கணிப்பு, பலகட்டங்களாக நடத்தப்பட்ட தோ்தல், 7 தொகுதிகளுக்கு தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது ஆகியவை தோ்தல் நடவடிக்கை மீதான நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்புகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments