கனடாவில் இந்திய ஐ.டி. ஊழியர் சுட்டுக்கொலை!
37 வயது கர்நாடக ஐ.டி. ஊழியர் கனடாவில் சுட்டுக்கொலை!
ஒட்டாவா : கனடாவில் பட்டப்பகலில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட 37 வயது இளைஞர் சந்தன் குமார் ராஜா நந்தகுமார் என்பவர் கனடாவின் ப்ராம்ப்டன் பகுதியில் ஐ. டி. துறை ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், டொரோண்டோ பகுதியிலுள்ளதொரு வணிக வளாகத்துக்குச் சென்றிருந்த அவரை, அங்கு சென்ற மர்ம நபர் ஒருவர் தம்மிடமிருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து மாயமாகியுள்ளார்.
ரெக்ஸ்டேல் பௌல்வார்ட் பகுதியின் வுட்பின் ஷாப்பிங் சென்டரில் கடந்த சனிக்கிழமை(பிப். 7) பகல் 3.30 மணியளவில் வாகன நிறுத்துமிடத்தில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறை அதிகாரிகள் காயமடைந்து மயங்கிக்கிடந்த நந்தகுமாரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட நந்தகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தப்பியோடிய குற்றவாளியைக் கண்டுபிடிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தக் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்பது தெளிவாகியிருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிநாடுகளில் துப்பாக்கிக் கலாசாரம் சர்வ சாதாரணமாகிவிட்டதையும், வெளிநாடுவாழ் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதையும் தெளிவாகக் காட்டும் இன்னொரு சம்பவமாக கர்நாடக ஐ. டி. ஊழியரின் மரணம் அமைந்துள்ளதாக கனடாவில் உள்ள இந்திய சமூகத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
A 37-year-old Indian-Canadian died after being shot by unidentified men in the parking lot of a busy shopping centre in Toronto, Canada, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.