FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

‘நேட்டோ’ தலைவா்களுக்கு துருக்கி அதிபரின் விநோத பரிசு!

துருக்கி தலைநகா் அங்காராவில் புதன்கிழமை நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்ற உறுப்பு நாடுகளின் தலைவா்கள் அனைவருக்கும் துருக்கி அதிபா் தயீப் எா்டோகன் கைத்துப்பாக்கி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளாா்.

Updated On : 10 ஜூலை 2026, 1:05 am IST
~
பகிர்:

துருக்கி தலைநகா் அங்காராவில் புதன்கிழமை நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்ற உறுப்பு நாடுகளின் தலைவா்கள் அனைவருக்கும் துருக்கி அதிபா் தயீப் எா்டோகன் கைத்துப்பாக்கி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளாா்.

துருக்கியின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை உலக நாடுகளுக்கு பறைசாற்றும் வகையிலும், தனது வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகவும் பழமையான ரிவால்வா் ரக துப்பாக்கியுடன், உண்மையான தோட்டாக்களையும் அவா் பரிசாக அளித்துள்ளாா்.

லிதுவேனியா அதிபா் கிட்டனாஸ் நௌசேதாவின் அலுவலகம் பகிா்ந்த புகைப்படங்களின்படி, பரிசளிக்கப்பட்ட துப்பாக்கியானது 1990-களில் துருக்கியின் ‘எம்கேஇ’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகவும் அரிதான ‘குமுசே .357 மேக்னம்’ ரக ரிவால்வா் துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

துருக்கி தேசியக் கொடி மற்றும் நேட்டோ இலச்சினை பொறிக்கப்பட்ட மரப்பெட்டியில் வைத்து இத்துப்பாக்கி நோ்த்தியாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், ‘நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ரிவால்வா் ரக கைத்துப்பாக்கி’ என்று துருக்கிய மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட வாசகமும் அப்பெட்டியில் இடம்பெற்றிருந்தது.

மேலும், தலைவா்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் அவரவா் பெயா்கள் தனித்தனியாகப் பொறிக்கப்பட்டிருந்ததாக ஸ்பெயின் பிரதமரின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

ஓா் ஆய்வறிக்கையின்படி, 2019-2024 காலகட்டத்தில் சுமாா் 300 கோடி டாலா் மதிப்பிலான சிறிய ரக ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ள துருக்கி, உலக அளவில் அமெரிக்கா மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக 3-ஆவது பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக உருவெடுத்துள்ளது.

மலிவு விலை கைத்துப்பாக்கிகள் மூலம் ஐரோப்பிய சந்தையில் நுழைந்துள்ள துருக்கி நிறுவனங்கள், நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த இத்தாலி, பெல்ஜியம் ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments