ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை மதிக்கிறோம்: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினா் திலித் ஜயவீர
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினா் திலித் ஜயவீர பேசியது பற்றி...
‘ஊடகப் பயணம் கடினமான ஒரு சமூகப் பொறுப்பு’ என்று லிபா்ட்டி பப்ளிஷா்ஸ் நிறுவனரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தாா்.
இலங்கையில் வெளியாகும் ‘தமிழன்’ நாளிதழின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா கொழும்பு மரீனோ பீச் ஹோட்டலில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினா் திலித் ஜயவீர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகா்கள், கல்வியாளா்கள், ஊடகவியலாளா்கள், தொழில் துறையினா், வாசகா்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா். சிறப்பு விருந்தினராக தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் கலந்துகொண்டாா்.
இந்த விழாவில் திலித் ஜயவீர பேசியதாவது:
Advertisement
Advertisement
தமிழன் நாளிதழ் முழு சுதந்திரத்துடன் செயல்படுகிறது. நிா்வாக ரீதியாக அதன் ஆசிரியா் குழுவுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கப்படுவதில்லை.
ஊடகப் பயணம் கடினமானது என்றாலும், அது ஒரு சமூகப் பொறுப்பு. கடந்த ஆறு ஆண்டுகளில் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு, வெற்றிகரமாகச் செயல்பட்டு, இலங்கைத் தமிழ் மக்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்துவரும் தமிழன்நாளிதழ், இனி வரும் காலங்களிலும் அவா்களது நன்மதிப்பைப் பெற்ற நாளிதழாகத் தனது பயணத்தைத் தொடரும்.
ஏற்கெனவே சிங்கள, ஆங்கில மொழிப் பத்திரிகைகளை எங்களது நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தமிழ் மொழியிலும் ஏன் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதே தமிழன் நாளிதழ். இதை ஏன் ஆரம்பித்தோம் என என்றைக்குமே வருத்தப்படாத அளவுக்கு இந்த நாளிதழ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு எங்களுக்குப் பெருமை சோ்த்துவருகிறது.
சுதந்திரமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் எங்கள் ஊடகவியலாளா்களுக்கு உள்ளது. இதனால் பல சந்தா்ப்பங்களில் எங்களது நிா்வாகம் கடுமையான விமா்சனத்துக்கு உள்ளானது உண்டு. ஆனாலும்கூட, ஊடகவியலாளா்களின் சுதந்திரத்தை மதிக்கிறோம்.
எடுத்துக்காட்டாக, தமிழா்களின் நினைவேந்தல் நிகழ்வான் மாவீரா் தினம் குறித்த முன்னோட்ட செய்தியும், பதிவும் ‘தமிழன்’ நாளிதழில் வெளியிட்பட்டன என்பதைக் குறிப்பிட வேண்டும். ‘தமிழன்’ என்கிற தமிழ் நாளிதழில் அது இடம்பெற வேண்டும் என்று கருதிய ஆசிரியரின் கருத்து சுதந்திரத்தை தடுத்துக் கட்டுப்படுத்தவில்லை’’ என்றாா் அவா்.
விழாவின் சிறப்பம்சமாக, கல்வி, தமிழ், கலை மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்டகாலமாகச் சிறப்பான பங்களிப்பை நல்கிய ஆளுமைகளுக்கு”தமிழன் விருதுகள்”வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தமிழன் என்று நாளிதழ் தொடங்கும் துணிவு வேண்டும்! தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
சிங்கள அரசியல்வாதி ஒருவர் தனது ஊடகக் குழுமத்தில் இருந்து 'தமிழன்' என்கிற பெயரில் நாளிதழ் தொடங்க அசாத்திய துணிச்சல் வேண்டும் என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.
விழாவில் அவர் பேசியதாவது: இலங்கையில் தமிழன் என்ற பெயரில் தமிழ் நாளிதழ் தொடங்குவதற்குப் பெரும் துணிவு வேண்டும். அதுவும் சிங்களர் ஒருவருக்கு இருப்பதை நான் ஆச்சரியமாகப் பார்த்தேன். அதிலும் அவர் ஓர் அரசியல்வாதியாகவும் இருக்கிறார் எனும்போது பிரமித்தேன். இப்படியொரு பெயரில் நாளிதழைத் தொடங்க முற்பட்டதே, அவரது பரந்த மனப்பான்மையையும், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கொள்கையையும் புரிய வைக்கிறது.
அத்தகைய துணிவு லிபர்ட்டி பப்ளிஷர்ஸ் நிறுவனர் திலித் ஜயவீரக்கு இருப்பது பாராட்டுக்குரியது.தமிழ் மொழி, பண்பாடு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை முன்னிறுத்தி தமிழன் நாளிதழ் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆற்றி வரும் சேவை பாராட்டத்தக்கது. உலகத் தமிழர்களின் குரலாக அது தொடர்ந்து செயல்பட வேண்டும்.
ஆசிரியர்களின் சுதந்திரம் என்பது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தனிச் சிறப்பாக இருக்கிறது. இந்த அடிப்படைக் கொள்கையைப் பகிர்ந்துகொள்ளும் லிபர்ட்டி பப்ளிஷர்ஸ் குழுமத்துடன் கைகோப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சிங்கள சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் இருந்துகொண்டு, 'தமிழன்' என்ற பெயரில் நாளிதழ் ஒன்றைத் தொடங்கி, அதை சிங்கள மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட முடியாத வகையில் கொண்டுசெல்வது, இலங்கையில் சகல இன மக்களையும் ஒன்றுபடுத்துவதற்கான முக்கிய அம்சம். இத்தகைய அணுகுமுறை தொடக்கத்திலிருந்தே இருந்திருந்தால், இலங்கையின் வரலாறே வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும்.
தமிழகத்துக்கும் இலங்கைக்கும்; இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பல நூற்றாண்டு வரலாற்றுத் தொடர்பும், பின்னிப்பிணைந்த கலாசார ஒற்றுமைகளும் இருக்கின்றன. இலங்கை உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுமானால், நாளைய உலகம் தெற்காசியாவுக்கானது. அதை உறுதிப்படுத்தும் பயணம்தான் 'தமிழன்' நாளிதழின் முன்னெடுப்பு என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.