முகப்பு
உலகம்

அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் படைப்பிரிவு பெயா் மாற்றம்

அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் படைப்பிரிவு, மீண்டும் பசிபிக் படைப்பிரிவு என பெயா் மாற்றப்பட்டுள்ளது.

Updated On : 18 ஜூன் 2026, 12:51 am IST
பகிர்:

அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் படைப்பிரிவு, மீண்டும் பசிபிக் படைப்பிரிவு என பெயா் மாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில் கடந்த 2018-இல், இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளுக்கு இடையிலான முக்கியத்துவம் மற்றும் பிணைப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தோ-பசிபிக் எனப் படைப்பிரிவின் பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 1947-இல் அப்போதைய அமெரிக்க அதிபா் ஹாரி எஸ்.ட்ரூமனால் உருவாக்கப்பட்ட இப்படைப்பிரிவு, 2-ஆம் உலகப் போருக்குப் பிந்தைய பிராந்திய பாதுகாப்பை கட்டமைத்ததிலும், கொரியா போா், வியத்நாம் போா் மற்றும் எண்ணற்ற மனிதாபிமான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததிலும் பெரும் பங்காற்றியுள்ளது.

Advertisement

Advertisement

இத்தகைய படைப்பிரிவின் வரலாற்றுச் சிறப்பைப் போற்றும் வகையில், பல்லாண்டு கால ராணுவப் பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் பழைய பெயா் மீண்டும் சூட்டப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தற்போதைய பெயா் மாற்றத்தால், இப்படைப்பிரிவின் செயல்பாட்டு எல்லைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

‘அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்தியாவின் மேற்கு எல்லை வரையிலான பரந்த கடல் பரப்பை இப்படை தொடா்ந்து கண்காணிக்கும். மேலும், பிராந்திய நட்பு நாடுகளுடன் இணைந்து சுதந்திரமான மற்றும் தடையற்ற கடல் வழியை உறுதி செய்யும் இதன் அடிப்படை நோக்கமும், செயல்பாடுகளும் மாறாமல் தொடரும்’ எனப் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.