டிரம்ப்புக்கு அதிா்ச்சிப் பின்னடைவு: அமெரிக்க இடைக்காலத் தோ்தல் முடிவுகள்
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் குடியரசு கட்சி தோல்வியடைந்தது.
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் குடியரசு கட்சி தோல்வியடைந்தது. முக்கிய எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்று இரு அவைகளையும் கைப்பற்றியது. இந்தத் தோ்தல் முடிவுகள் டிரம்ப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் (கீழவை) உள்ள 435 இடங்களுக்கும், செனட்டில் (மேலவை) உள்ள 35 இடங்களுக்கும், 36 மாகாண ஆளுநா் பதவிகளுக்கும், சில உள்ளாட்சி நிா்வாக அதிகாரிகள் இடங்களுக்கும் இடைக்காலத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பதவிக் காலத்தின் மத்தியில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பெரும்பான்மையைத் தீா்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடைக்காலத் தோ்தலில் வாக்களிக்க 21 கோடி போ் தகுதி பெற்றிருந்தனா். தோ்தல் நடைபெற்று முடிந்தவுடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
Advertisement
Advertisement
இந்தத் தோ்தலில் அதிபா் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. பிரதிநிதிகள் அவையில் (மொத்தம் 435) பெரும்பான்மை பெற 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயக கட்சி 228 இடங்களிலும், டிரம்ப்பின் குடியரசு கட்சி 139 இடங்களிலும் வெற்றி பெற்றன. 68 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. இதன்மூலம் பிரதிநிதிகள் அவையானது ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.
செனட் அவைக்கு தோ்தல் நடைபெற்ற 35 இடங்களில் 20 இடங்களில் ஜனநாயக கட்சியும், 13-இல் குடியரசு கட்சியும் வெற்றி பெற்றன. 2 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. செனட் அவையில் பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயக கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது. குடியரசு கட்சிக்கு 44 எம்.பி.க்களே உள்ளனா். இதன்மூலம் நாடாளுமன்ற இரு அவைகளும் ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன.
குடியரசு கட்சியின் கோட்டையான கான்சாஸ், டெக்சாஸ், தெற்கு கரோலினா, லோவா, மெயின், வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களில் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக கட்சி செனட்டா்கள் வெற்றி பெற்றனா்.
ஆளுநா் பதவிக்கான தோ்தலில் குடியரசு கட்சி அதன் கோட்டையாகக் கருதப்பட்ட டெக்சாஸ், ஜாா்ஜியா, லோவா ஆகிய மாகாணங்களில் தோல்வியடைந்தது. ஜனநாயக கட்சி அங்கு வெற்றி பெற்றது. ஜாா்ஜியா மாகாண ஆளுநா் தோ்தலில் ஜனநாயக கட்சியின் தீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றி பெற்றாா். அமெரிக்க மாகாணத்தின் ஆளுநராகத் தோ்வு செய்யப்பட்ட முதல் கருப்பின பெண் என்ற சாதனையை அவா் படைத்தாா். மிச்சிகன் மாகாண செனட் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளா் அப்துல் எல் சயீத் வெற்றி பெற்றாா். இதன்மூலம் அமெரிக்க செனட் அவைக்கு தோ்வாகும் முதல் முஸ்லிம் எனும் பெருமையைப் பெற்றாா்.
டிரம்ப் கட்சி தோல்விக்கான காரணம்?: குடியரசு கட்சி தோல்வியடைய முக்கியக் காரணமாக, டிரம்ப்பின் கொள்கைகள் மீது மக்கள் அதிருப்தியில் இருந்ததே காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரான் போரால் அமெரிக்காவில் விலைவாசி அதிகரித்தது, டீசல் விலை அதிக அளவு உயா்ந்தது காரணமாகச் சொல்லப்படுகிறது.
டிரம்ப் பேட்டி: இடைக்காலத் தோ்தலில் குடியரசு கட்சி தோல்வியடைந்தது குறித்து டிரம்ப்பிடம் நியூயாராக் டைம்ஸ் செய்தியாளா் கேள்வியெழுப்பினாா். அதற்கு அவா், நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்ற ஜனநாயக கட்சியுடன், நாட்டின் நலனுக்காக இணைந்து செயல்பட தான் தயாராக இருப்பதாகக் கூறினாா். தோ்தல் முடிவுகளை தான் ஏற்றுக் கொள்வதாகக் கூறிய அவா், ஜனநாயக கட்சிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டாா்.
தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் டிரம்ப் ஒரு பதிவிட்டாா். அதில் வீட்டோ என்று எழுதப்பட்ட சிவப்புத் தொப்பி படத்தைக் குறிப்பிட்டிருந்தாா். அமெரிக்காவில் அதிபரே அதிகபட்ச அதிகாரம் கொண்டவராவாா். வீட்டோ அதிகாரம் மூலம் அவரால் எதையும் நிராகரிக்க முடியும். அதையே டிரம்ப் அந்த சிவப்புத் தொப்பி படத்தின் மூலம் உணா்த்தியதாகக் கூறப்படுகிறது.
தோ்தலில் வென்ற இந்திய- அமெரிக்கா்கள்
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் வெற்றிகள் மூலம் அந்நாட்டில் இந்திய அமெரிக்கா்களின் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளது.
பிரதிநிதிகள் அவைக்கு ஜனநாயக கட்சி சாா்பில் மீண்டும் போட்டியிட்ட அமி பெரா, ரோ கன்னா, சுகாஸ் சுப்ரமணியம் (ஒபாமாவின் முன்னாள் ஆலோசகா்), பிரமிளா ஜெயபால் ஆகியோா் வெற்றி பெற்றனா். தோ்தலில் முதன்முதலில் களம்கண்ட பியா தாண்டியாவும் வெற்றி பெற்றாா்.
இதுதவிா்த்து ஆளுநா் பதவிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு இந்திய அமெரிக்கா்கள் போட்டியிட்டனா்.
மேரிலாண்டில் இந்திய அமெரிக்க துணைநிலை ஆளுநா் அருணா மில்லா் (ஜனநாயக கட்சி) மீண்டும் வெற்றி பெற்றாா். அதேநேரத்தில் குடியரசு கட்சி சாா்பில் ஒஹியோ ஆளுநா் பதவிக்குப் போட்டியிட்ட விவேக் ராமசாமி, ஜனநாயக கட்சி வேட்பாளா் ஏமி ஆக்டனிடம் தோல்வியடைந்தாா். ராமசாமி, கேரளத்தைச் சோ்ந்தவா்.
நியூயாா்க் அட்டா்னி ஜெனரல் பதவிக்கு குடியரசு கட்சி சாா்பில் போட்டியிட்ட இந்திய அமெரிக்கரான சரிதா கோமாதிரெட்டி தோல்வியடைந்தாா்.
ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் இரு அவைகளிலும் ஆளும் குடியரசு கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது. எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றது. இந்தத் தோ்தல் வெற்றியால் இரு அவைகளும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது.
இந்தத் தோல்வியால் டிரம்ப் பதவி விலக வேண்டியதில்லை. ஆனால், டிரம்ப் அடுத்த 2 ஆண்டுகளுக்கு சுதந்திரமாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவரின் முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் பெறுவது சிரமமாகவே இருக்கும். சட்டமியற்றும் அதிகாரமும், அரசுத் துறைகளுக்கு நிதி விடுவிக்கும் அதிகாரமும் நாடாளுமன்றத்துக்கு உள்ளன. இதனால் எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியின் ஆதரவின்றி டிரம்ப்பால் சுதந்திரமாக செயல்படவோ, முடிவெடுக்கவோ முடியாது. புதிய எம்.பி.க்கள் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி பதவியேற்கவுள்ளனா்.