இஸ்ரேலின் புதிய பிரதமர் காடி ஐசென்கோட்! ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு!
இஸ்ரேலின் புதிய பிரதமராக ஆட்சி அமைக்க காடி ஐசென்கோட்டுக்கு அதிபர் ஹெர்சாக் அழைப்பு...
இஸ்ரேலின் புதிய பிரதமராகப் பதவியேற்று ஆட்சி அமைக்க யஷார் கட்சித் தலைவர் காடி ஐசென்கோட்டுக்கு அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியின் கூட்டணி 53 இடங்களில் மட்டுமே வென்றன.
அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் கூட்டணி 48 இடங்களையும், முதல்முறையாக அரபு கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
Advertisement
Advertisement
120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களை எந்தவொரு கட்சியும் கைப்பற்றவில்லை. இதனால், அரபு கட்சிகள் கிங் மேக்கர்களாக உருவாகின.
இதனைத் தொடர்ந்து, புதிய ஆட்சி அமைப்பது குறித்து இஸ்ரேலிய அதிபர் ஹெர்சாக் உடனான சந்திப்பில் ஐசென்கோட் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு அரபு கட்சிகளின் கூட்டணி ஆதரவளித்தன. இதனால், அவருக்கு ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பிரதமராகப் பதவியேற்று புதிய அரசை அமைப்பதற்கு காடி ஐசென்கோட்டுக்கு, கடந்த சனிக்கிழமை (நவ. 7) இரவு அதிபர் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புதிய கூட்டணி அரசை அமைப்பதற்கு அவருக்கு 6 வாரங்கள் கால அவகாசம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதுபற்றி, ஐசென்கோட் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“ஒரு தேசிய அவசரகால அரசை அமைப்பதற்கு இதுவே சரியான தருணம். நாம் தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்க என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நெதன்யாகு கூட்டணியில் இடம்பெற்று 7 இடங்களைக் கைப்பற்றிய யுனைடெட் தோரா ஜுடாயிஸம் எனும் கட்சி அவர் பிரதமராகத் தொடர ஆதரவு அளிக்க மறுத்து அவரது கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.