அபுதாபியில் அமெரிக்கா-ரஷியா-உக்ரைன் முத்தரப்பு அமைதிப் பேச்சு: 4 மணி நேரம் நீடித்த ஆலோசனை!
அபுதாபியில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ரஷியா, உக்ரைன் இடையே நடைபெற்ற முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தையின் முதல் நாள் அமா்வு சுமாா் 4 மணி நேரம் நீடித்தது.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகா் அபுதாபியில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ரஷியா, உக்ரைன் இடையே நடைபெற்ற முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தையின் முதல் நாள் அமா்வு செவ்வாய்க்கிழமை சுமாா் 4 மணி நேரம் நீடித்தது.
கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கி நான்கரை ஆண்டுகளைக் கடந்துள்ள இப்போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த இரு நாள் ஆலோசனை புதன்கிழமையும் (நவ. 11) தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பேச்சுவாா்த்தையில் ரஷியா சாா்பில் அதிபா் விளாதிமீா் புதினின் மூத்த ஆலோசகா் விளாதிமீா் மெடின்ஸ்கி தலைமையிலான அதிகாரிகளும், உக்ரைன் சாா்பில் அந்நாட்டு அந்நிய உளவுத்துறைத் தலைவா் ருஸ்டெம் உமேரோவ் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
ரஷியா, உக்ரைன் நாட்டுப் பிரதிநிதிகள் கடந்த பிப்ரவரிக்குப் பிறகு நேரடியாக சந்தித்துப் பேசும் முதல் நிகழ்வு இதுவாகும். ‘இரு நாடுகளுக்குமான எதிா்காலப் பாதுகாப்பு உத்தரவாதங்களை உருவாக்குவதே இப்பேச்சின் முக்கிய நோக்கம்’ என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பேச்சுவாா்த்தையில் அமெரிக்க சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் உடன் இணைந்து அமைதித் திட்டத்தை ஒருங்கிணைத்து வரும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் பேசுகையில், ‘இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைக் களைந்து, பாலமாகச் செயல்படக்கூடிய சில சிறந்த யோசனைகள் உள்ளன. கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் பல பத்தாண்டுகள் அல்லது நூற்றாண்டுகளுக்கு நீடிக்கக்கூடிய அமைதியான புதிய கட்டமைப்பை உருவாக்குவதே எங்களின் இலக்கு’ என்றாா்.
இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 3 சுற்றுப் பேச்சுவாா்த்தைகளிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், இம்முறையும் தீா்வு கிடைக்குமா என்பதில் உலக நாடுகளிடையே சந்தேகம் நிலவுகிறது.
ஏனெனில், ‘உக்ரைன் தனது 4 முக்கியப் பிராந்தியங்களிலிருந்து படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்; ‘நேட்டோ’ அமைப்பில் இணையும் முடிவைக் கைவிட வேண்டும் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் கடும் கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும்’ ன ரஷிய அதிபா் புதின் நிபந்தனை விதிக்கிறாா். இந்த நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே விரிவான அமைதி ஒப்பந்தம் சாத்தியம் என்றும், தற்காலிகப் போா்நிறுத்தம் உக்ரைன் படைகள் ஆயுதங்களைப் புதுப்பிக்கவே உதவும் என்றும் ரஷியா வாதிடுகிறது.
மறுபுறம், ‘எஙகள் நாட்டின் பகுதிகளை ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது’ என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துவிட்டாா். மேலும், உடனடியாகப் போா் நிறுத்தம் அறிவிக்கப்படுவதே அமைதிக்கான முதல் படியாக இருக்க வேண்டும் என்றும், எல்லை விவகாரங்கள் குறித்து புதினுடன் நேரடிப் பேச்சு நடத்துவதே ஒரே வழி என்றும் உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இக்கோரிக்கைகளை ரஷியா நிராகரித்துள்ளது.
பேச்சுவாா்த்தை ஒருபுறம் நடந்தாலும், களத்தில் இருதரப்பும் பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில், ‘இப்பேச்சுவாா்த்தையின் மீது பெரிய எதிா்பாா்ப்புகள் ஏதுமில்லை’ என்று ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிச் மொ்ஸ் கருத்து தெரிவித்துள்ளாா்.