இத்தாலி, அயர்லாந்து, ஸ்காட்லாந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இத்தாலியில் வெடிகுண்டு மிரட்டலால் சுமார் 300 பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டது குறித்து...
இத்தாலியில், மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து சுமார் 300 பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி, அயர்லாந்து ஆகிய நாடுகள் மற்றும் பிரிட்டனின் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய பிரதேசங்களின் பள்ளிகூடங்களைக் குறிவைத்து இன்று (நவ. 11) மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, இத்தாலியில் சுமார் 312 பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை வெளியேற்றி, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சோதனைகள் மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனிக்கு எதிராகவும் அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில், இன்று மாலை பிரதமர் மெலோனி தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி, இத்தாலி பிரதமர் மெலோனி கூறுகையில், பள்ளிகளுக்கு எந்தவொரு திட்டவட்டமான ஆபத்தும் இல்லை எனவும், பீதியை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வாரம் ஐரோப்பிய ஒளிப்பரப்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலில் இடம்பெற்றிருந்த அதே ரஷிய பெயருடன் இந்த மிரட்டல் மின்னஞ்சலும் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் ஐரோப்பிய நாடுகளிடையே அதிர்வலைகளை உருவாக்கியுள்ள சூழலில், அயர்லாந்து, ஸ்காட்லாந்தின் பள்ளிகளில் வெளியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த வாரம் ஐரோப்பாவைச் சேர்ந்த ஏராளமான விமானங்களுக்கு மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டல்களால் அங்கு பல்வேறு நாடுகள் இடையேயான விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.