ஹமாஸ் தளபதிகளை இலக்கு வைத்து நாசா் மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 6 பேர் பலி, 27 பேர் காயம்
எஞ்சியிருக்கும் மிக முக்கியச் சிகிச்சை மையங்களில் ஒன்றாக விளங்கும் நாசா் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவு மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து...
காஸா: தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், மருத்துவர் ரிஸ்க் அபு ஷுவைரா உள்பட நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் என ஆறு பேர் பலியாகினர்; மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர் என்று காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவ வசதிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களை இந்தத் தாக்குதல் "வெளிப்படையாக மீறியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ள அமைச்சகம், மருத்துவமனைகளைப் பாதுகாக்கவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளும் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் பலிகளை உறுதிப்படுத்தியதுடன், மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"காஸாவில் சுகாதார சேவைகள் மீது மீண்டும் ஒரு கொடிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காஸாவில் போரினால் பெரும்பாலான மருத்துவமனைகள் முடங்கியுள்ள சூழலில், எஞ்சியிருக்கும் மிக முக்கியச் சிகிச்சை மையங்களில் ஒன்றாக விளங்கும் நாசா் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவு மீது அதிகாலை தாக்கப்பட்டதில், மருத்துவர் ரிஸ்க் அபு ஷுவைரா உள்பட, நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் என ஆறு பேர் பலியாகியுள்ளனர்; மேலும் குறைந்தது 27 பேர் பலத்தகாயமடைந்துள்ளனர். அறுவை சிகிச்சை பிரிவு பெரும் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன" என்று டெட்ரோஸ் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறைகள், நோயாளிகள் குணமடையும் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிற பகுதிகளும், கட்டடத்தின் 2-ஆவது தளம் பலத்த சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சேதத்தின் முழு அளவை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
காஸாவில் சுகாதார உள்கட்டமைப்புகள் மீதான தாக்குல்களின் தீவிரத்தை எடுத்துரைத்த உலக சுகாதார அமைப்பின் தலைவர், 2023 அக்டோபர் முதல் பாலஸ்தீனப் பகுதியில் உள்ள சுகாதார மையங்கள் மீது 1,056 தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதை உலக சுகாதார அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இந்தத் தாக்குதல்களில் 1,010 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,725 பேர் காயமடைந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, நாசர் மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பின் ராணுவச் செயல்பாட்டாளர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இந்த இலக்குகளில் ஹமாஸின் கான் யூனிஸ் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு மூத்த தளபதியும் அடங்குவார் என தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை.
தாக்குதலுக்கு உள்ளான அந்தத் தளபதி முஹம்மது அபு இஸ்மாயில் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் போரின் போது, மருத்துவமனைக்குள் பிணைக் கைதிகளை அடைத்து வைத்திருந்ததில் தொடர்புடையவர் என்று இஸ்ரேலிய தற்காப்புப் படை குற்றம் சாட்டியுள்ளது.
மருத்துவமனையின் இரண்டாவது தளம் ஹமாஸ் அமைப்பின் ராணுவத் தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தளபதிகள் செயல்பட்டு வந்ததாகவும், பொதுமக்கள் அங்கு நுழைய அனுமதி இல்லை என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய தற்காப்புப் படையின் தகவல்படி, நிம்ரோட் கோஹன், மதான் ஜங்காவ்கர், இடான் அலெக்சாண்டர், அவெரா மெங்கிஸ்டு, கர்னல் அசாஃப் ஹமாமி, ஸ்டாஃப் சார்ஜென்ட் ஓஸ் டேனியல் மற்றும் கேப்டன் ஓமர் நியூட்ரா உள்ளிட்ட பல பிணைக் கைதிகளை அடைத்து வைத்திருந்ததற்கு அபு இஸ்மாயில் பொறுப்பாவார்.
இந்தத் தாக்குதலில் ஹமாஸின் பிற செயல்பாட்டாளர்களும் இலக்கு வைக்கப்பட்டதாகவும், அவர்களில் போர் மற்றும் நிர்வாக ஆதரவுப் பிரிவின் பொறியியல் துறை குழுத் தலைவர் முவாரெட் தவ்ஃபிக் மஹ்மூத் அபு ஜரிஃபா மற்றும் ஹமாஸின் உளவுத்துறை தலைமையகத்தில் தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் காலித் ஒசாமா அபு அன்சா ஆகியோர் அடங்குவர் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பு மருத்துவமனை வளாகத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலிய வீரர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிட்டதாகவும், தனது கான் யூனிஸ் படைப்பிரிவின் ராணுவத் திறன்களை மீண்டும் கட்டமைக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ள இஸ்ரேலிய தற்காப்புப் படை, உடனடி அச்சுறுத்தலை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது.
மேலும், மருத்துவமனைக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் தாக்குதல் நடத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேலும், தாக்குதலுக்கு முன்பாக, மருத்துவமனையில் நடைபெற்று வரும் ராணுவச் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலிய தற்காப்புப் படை பலமுறை எச்சரித்ததுடன்; இது குறித்து சமீபத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் ராணுவச் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களுக்கு உள்பட்டே செயல்படுவதாகவும், மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பாதுகாப்பை மதிப்பதாகவும், இத்தகைய இடங்களை ஒருபோதும் தாக்குதலுக்கான இலக்குகளாகக் கருதுவதில்லை என்றும் இஸ்ரேலிய தற்காப்புப் படை வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, காசாவில் உள்ள சுகாதார உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், அந்தப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் டெட்ரோஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
காஸாவின் சுகாதார நிலையங்கள் அங்குள்ள மக்களின் உயிர்நாடி. அவை பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை ஒருபோதும் ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவோ அல்லது அவற்றின் மீது தாக்குதல் நடத்தவோ கூடாது என்று அவர் கூறினார். "அமைதியே மிகச்சிறந்த மருந்து" என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் மேலும் கூறினார்.
2025 அக்டோபரில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த போதிலும், தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.