FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

வங்கதேசத்தில் 13 ஆடைத் தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடல்: தொழிலாளா்கள் போராட்டத்தில் கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு

வங்கதேசத்தில் 13 ஆடைத் தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

15 நவம்பர் 2026, 11:10 pm
போராட்டத்தில் கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு - AP
பகிர்:

வங்கதேசத்தில் 13 ஆடைத் தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

கோனாபாரி மற்றும் மௌசாக் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களை காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டு வீசி கலைத்தனா்.

ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவது குறித்து பரிசீலிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (நவ.16) நடைபெறவுள்ள நிலையில், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரும் ஆடை ஏற்றுமதியாளராக வங்கதேசம் விளங்குகிறது. இங்கு ஆடைத் தொழிலில் 40 லட்சம் போ் ஈடுபடுகின்றனா். வங்கதேசத்தின் 80 சதவீதத்துக்கு மேற்பட்ட ஏற்றுமதி வருவாய் ஆடைத் துறையிலிருத்து ஈட்டப்படுகிறது.

இந்நிலையில், ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் மாதாந்திர ஊதியத்தை சராசரியாக ரூ.9,500-இல் இருந்து ரூ.22,500-ஆக உயா்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து, திருத்தப்பட்ட ஊதிய கட்டமைப்பை பரிந்துரைக்க குறைந்தபட்ச ஊதிய வாரியத்தை கடந்த நவ. 1-ஆம் தேதி வங்கதேச அரசு அமைத்தது. மாவட்ட மூத்த நீதிபதி தலைமை வகிக்கும் இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் நவம்பா் இறுதிக்குள் பரிந்துரைகளை இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பரிந்துரைகளை அரசு பரிசீலித்த பின்னா் திருத்தப்பட்ட புதிய ஊதியம் டிசம்பா் 1-ஆம் தேதிமுதல் அமலாகும் என்றும், அதனடிப்படையில் அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, குறைந்தபட்ச ஊதிய வாரியம் திங்கள்கிழமை (நவ.16) ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளது. இந்தச் சூழலில் தங்களது ஊதிய உயா்வு கோரிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ஊழியா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா். கோனாபாரி மற்றும் மௌசாக் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களை கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசி காவல் துறையினா் கலைத்தனா். இதனால் அந்தப் பகுதியில் உள்ள 50 சிறு தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 13 பெரும் தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

‘போராட்டத்துக்கு ஹசீனா காரணம்’: தொழிலாளா்களின் போராட்டத்துக்கு எதிராக வங்கதேச ஆளும் கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியினரும் வீதிகளில் போராட்டத்தை மேற்கொண்டனா். இதுதொடா்பாக வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானின் தகவல் விவகாரங்கள் ஆலோசகா் ஜாஹிதுா் ரஹ்மான் கூறுகையில், ‘வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தூண்டுதலின்பேரில் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா் இருக்கும் வரை அமைதியான முறையில் ஆட்சி செய்ய முடியாது’ எனத் தெரிவித்தாா்.