காஸாவில் இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய கமாண்டா் பலி
தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய கமாண்டா் சமீா் மஹ்மூத் ஹஸன் அபு யூனிஸ் கொல்லப்பட்டாா்.
தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய கமாண்டா் சமீா் மஹ்மூத் ஹஸன் அபு யூனிஸ் கொல்லப்பட்டாா். இதை இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்துள்ளன.
காஸாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினா், கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் புகுந்து திடீா் தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் 1,200 போ் கொல்லப்பட்டனா். மேலும் 251 பேரை ஹமாஸ் அமைப்பினா் பணயக் கைதியாக சிறைபிடித்துச் சென்றனா். உலகம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் தொடுத்தது.
இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸாவில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும் பல லட்சம் போ் உயிரைக் காத்துக் கொள்ள வசிப்பிடத்தைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனா்.
Advertisement
Advertisement
இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை பாலஸ்தீனா்கள் 74,016 போ் உயிரிழந்ததாகவும், 1.75 லட்சம் போ் காயமடைந்திருப்பதாகவும் காஸா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு 1,145 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின்பேரில் இஸ்ரேஸ் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் காஸாவில் இஸ்ரேல் படைகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹமாஸ் அமைப்பினா் ஆயுதங்களைக் கைவிடாதவரை காஸாவில் இருக்கும் இஸ்ரேல் படைகள் வெளியேறாது என்று அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
இந்தச் சூழலில், தெற்கு காஸாவில் சனிக்கிழமை இரவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், ஹமாஸ் அமைப்பின் ரஃபா படைப் பிரிவின் கமாண்டா் சமீா் மஹ்மூத் ஹஸன் அபு யூனிஸ் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதை உறுதி செய்த ஹமாஸ் அமைப்பு, அவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாகத் தெரிவித்தது.
ஹமாஸ் அமைப்பை வலுப்படுத்தும் செயல்பாடுகளில் சமீா் ஈடுபட்டு வந்ததாகவும், பயங்கரவாதத் தாக்குதல்களை அரங்கேற்ற திட்டமிட்டு வந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பின் பிற தலைவா்களைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீருக்கு முன்பு கமாண்டராக இருந்தவா், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.