✕
முகப்பு

மியான்மர் ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்தது! - சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டது என சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

7 வினாடிகள் முன்பு
ரோஹிங்கியா மக்கள்... - AP
பகிர்:

ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

மியான்மர் நாட்டின் ராகைன் மாநிலத்தில், கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி மியான்மர் ராணுவப்படைகள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இதில், ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டதுடன், லட்சக்கணக்கானோர் மியான்மரை விட்டு வெளியேறி இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, முஸ்லீம்கள் அதிகமுள்ள சிறுபான்மை சமூகத்தினரான ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு மேற்கொண்ட வன்முறைகள் குறித்து இன்று (நவ. 19) நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில், 10,000-க்கும் அதிகமான ரோஹிங்கியா மக்களை மியான்மர் அரசு கொலை செய்ததற்கு ஆதாரம் இருப்பதாக, நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், ராகைன் மாநிலத்தில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலையில் ஈடுபட்டு, இனப்படுகொலை உடன்படிக்கையின் கீழ் கட்டுப்பாடுகளை மீறியுள்ளது என சர்வதேச நீதிமன்றத் தலைவர் யுஜி இவாசாவா தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நவி பிள்ளை உள்ளிட்ட 15 நீதிபதிகள் இடம்பெற்ற சர்வதேச நீதிமன்றத்தில், 9-6 எனும் வாக்குகளின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, நீதிமன்றத் தலைவர் யுஜி இவாசாவா கூறுகையில்,

“மியான்மர் படைகள் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்களைக் கொன்று, பாலியல் வன்முறைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான வன்முறைகள் மேற்கொண்டதையும், தப்பியோடிய ரோஹிங்கியா மக்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் இந்த நீதிமன்றம் கண்டறிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இத்துடன், நாட்டை விட்டு வெளியேறிய ரோஹிங்கியா மக்கள் தங்களின் தாயகத்துக்குத் திரும்ப மியான்மர் அரசு அனுமதிக்க வேண்டுமெனவும், இனப்படுகொலையில் ஈடுபட்டோரைக் கண்டறிந்து அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மியான்மர் அரசு ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்தவதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த 2019 ஆம் ஆண்டு காம்பியா அரசு நீதிமன்ற விசாரணையை முன்மொழிந்தது.

மேலும், ஒரு நாட்டின் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டது என சர்வதேச நீதிமன்றம் முதல்முறையாகத் தீர்ப்பளித்துள்ள நிலையில், காஸா மீதான இஸ்ரேலின் வன்முறை மற்றும் உக்ரைன் போர் ஆகியவைக் குறித்த இனப்படுகொலை குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

summary

International Court of Justice has delivered a landmark ruling, stating that the government of Myanmar engaged in genocide against the Rohingya people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.