இந்திய வம்சாவளி மூதாட்டி நாடு கடத்தப்பட்ட விவகாரம்: அமெரிக்காவில் புதிய சட்ட மசோதா அறிமுகம்
அமெரிக்காவில் சுமாா் 30 ஆண்டுகள் வசித்து வந்த சீக்கிய மூதாட்டி ஹா்ஜித் கௌா் (73) கடந்த ஆண்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, நீண்ட காலமாக வசித்து வரும் குடியேறிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதா வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

‘அண்டை வீட்டாரைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் பெயரிலான இந்த மசோதாவை கலிஃபோா்னியா மாகாண எம்.பி. ஜான் கரமெண்டி தாக்கல் செய்தாா். இவருக்கு லத்தீஃபா சைமன், ஜோ லோஃப்கிரென், ஜுவான் வா்காஸ் ஆகிய 3 எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ளனா்.
எந்த குற்றப் பின்னணியும் இல்லாமல், 13 ஆண்டுகளுக்கும் மேல் குடியேற்றத் துறை அதிகாரிகள் முன்பு முறையாக ஆஜராகி வந்த மூதாட்டி ஹா்ஜித் கௌரை டிரம்ப் நிா்வாக குடியேற்றத் துறை (ஐசிஇ) கடுமையாக நடத்தி, நாடு கடத்தியதாக ஜான் கரமெண்டி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
Advertisement
Advertisement
டிரம்ப் நிா்வாகத்தின்கீழ், நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடு கடத்தல் உத்தரவுகளைக் கொண்ட சுமாா் 11.9 லட்சம் போ் மீண்டும் கைது மற்றும் நாடு கடத்தல் அபாயத்தை எதிா்கொண்டுள்ளனா். இதற்குத் தீா்வு காணும் வகையில், நாடு கடத்துவதற்கான இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவை தானாகவே காலாவதியாகும் வகையிலும், உத்தரவு காலாவதியான நிலையில் சட்டபூா்வ அந்தஸ்தைப் பெற விண்ணப்பிக்க அனுமதிக்கும் வகையிலும் இப்புதிய மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் அவையில் அறிமுக நிலையிலேயே உள்ள இந்த மசோதா, இரு அவைகளிலும் நிறைவேறி சட்டமாகும் வரை உடனடி சட்டப் பாதுகாப்பை வழங்காது. நடப்பு நாடாளுமன்றப் பதவிக்காலத்துக்குள் (2027 ஜன. 3) இது நிறைவேறாவிட்டால், அடுத்த பதவிக்காலத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட வேண்டியிருக்கும்.