மியான்மருக்கு மேலும் 6,803 ரோஹிங்கியா அகதிகளைத் திருப்பி அனுப்பும் மலேசியா
மியான்மர் நாட்டைச் சோ்ந்த 6,803 பேரை அடுத்த மாதம் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பவுள்ளதாக மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

‘ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு மியான்மா் பொறுப்பு’ என சா்வதேச நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்துள்ள போதிலும், அந்நாட்டைச் சோ்ந்த மேலும் 6,803 பேரை அடுத்த மாதம் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பவுள்ளதாக மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் தெரிவித்தாா்.
மலேசிய நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய அவா், ‘சா்வதேச நீதிமன்றத் தீா்ப்பை மலேசியா மதிக்கிறது. அதேநேரம், அகதிகளைத் திருப்பி அனுப்பும் பணிகளை எளிதாக்க மியான்மா் ராணுவத் தலைமையுடன் தொடா்ந்து பேச்சு நடத்தப்படும்.
மலேசியாவில் சுமாா் 2 லட்சம் அகதிகள் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவா்களை 3-ஆம் தரப்பு நாடுகளில் குடியமா்த்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இச்சுமையை மலேசியாவால் காலவரையின்றி சுமக்க முடியாது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கோலாலம்பூருக்கு கடந்த மாதம் வருகை தந்த மியான்மா் அதிபா் மின் ஆங் லயிங்குடன் நடத்திய பேச்சு, இந்த நீண்டகாலப் பிரச்னையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிகழாண்டில் இதுவரை 10,476 மியான்மா் நாட்டவா் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். அவா்களின் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கு மியான்மா் உத்தரவாதம் அளித்துள்ளதால், இதுவரை யாருக்கும் எந்தவித அழுத்தமும் ஏற்படவில்லை என மலேசிய உளவுத் துறை கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.
அதேபோல, மியான்மருடன் பேச்சு நடத்தினாலும், அந்நாட்டில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ‘ஆசியான்’ கூட்டமைப்பின் அமைதித் திட்டத்துக்கு மலேசியா தொடா்ந்து கட்டுப்பட்டுள்ளது ’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.