எகிப்தின் முக்கிய நெடுஞ்சாலையில் பயங்கர தீ! 30 பேர் பலி!
எகிப்து நாட்டின் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 30 பேர் பலியானதாக அறிவிப்பு...

எகிப்து நாட்டின் முக்கிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி சுமார் 30 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோ அருகேயுள்ள இம்பாபா மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நெடுஞ்சாலையில், கடந்த புதன்கிழமை (நவ. 25) ஏற்பட்ட பயங்கர தீயில் அவ்வழியாகச் சென்ற ஏராளமான வாகனங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில், இதுவரை 30 பேர் பலியானதாக, எகிப்து நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், குறைந்தது 15 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் சம்பவயிடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் தீயில் சிக்கிய கார்களில் இருந்தவர்களை மீட்கும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. மேலும், சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. மேலும், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக, எகிப்து நாட்டில் சாலைப் பாதுகாப்புநிலை மிகவும் மோசமாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டு அந்நாட்டில் நிகழும் சாலை விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம், தெற்கு மாகாணமான பெனி சுவேஃபில் உள்ள சாலையில் ஏராளமான வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.